கீதை - 13.2 - எது உண்மையான ஞானம் ?
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||
க்ஷேத்ரஜ்ஞம் = க்ஷேத்ரம் பற்றிய ஞானம்
சா = மேலும்
அபி = அது அன்றியும்
மாம் = நான்
வித்தி = அறிவாய்
ஸர்வ க்ஷேத்ரேஷு = அனைத்து க்ஷேத்ரங்களிலும்
பாரத = பரத வம்சத்தவனே
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஓர் = க்ஷேத்ரம் மற்றும் அதை அறிபவனும்
ஜ்ஞாநம் = ஞானம்
யத் = அந்த
தஜ் = அது
ஜ்ஞாநம் = ஞானம்
மதம் = கொள்ளப்பட்டது
மம = என்னால்
பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்று அறிவாய். . க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்று அறியும் ஞானமே ஞானம் என்று நான் கொள்கிறேன்
மேலை நாடுகளின் அறிவியல் பொருளும், அவற்றின் குணங்களையும் மட்டுமே ஆராய்கிறது. பொருளை பிரித்து பிரித்து, அணு, அதையும் தாண்டி அதற்குள் இருக்கும் அடிப்படை துகள்கள் (Fundamental Particles ) என்று போய்க் கொண்டே இருக்கிறது.
ஆன்மிகம் , பொருளை அவ்வளாவாக கவலைப் படுவது இல்லை. பொருளுக்கும், பொருளை அனுபவிக்கும் மனிதனுக்கும், அந்த அனுபவத்தையும் ஒன்றாக அறிய முற்படுகிறது ஆன்மிகம்.
அறிவியலில் நாம் முன்னேறாமல் இருந்திருக்கலாம்.
நாம் அறிய முற்பட்டது மனிதனை, அவனின் அறிவை, அவனின் அனுபவத்தை...
இங்கே, வியாசர் கூறுகிறார்
எல்லா க்ஷேத்ரங்களிலும் உள்ள க்ஷேத்ரன்ஞன் நானே.
அனைத்து உயிர்களிலும் உள்ள அறியும் குணம் அல்லது அறிவு நானே என்கிறான்.
எனக்குள்ளே ஒரு அறிவு இருக்கிறது. நான் எப்படி எந்த உலகை பார்க்கிறேன், அறிகிறேன், உணர்கிறேன், புரிந்து கொள்கிறேன் என்பது என் அறிவு சார்ந்த விஷயம்.
அது போல உங்களுக்குள்ளும் அந்த அறிவு இருக்கிறது.
எனக்கும் உங்களுக்கும் மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்குள்ளும் இந்த அறிவு இருக்கிறது.
அந்த அறிவு நானே என்கிறான் கண்ணன்.
கண்ணன் என்ற தனி மனிதனை விட்டு விடுவோம்.
எல்லா அறிவும் ஒன்றுதான் - அது கண்ணனாக இருக்கட்டும், அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
உங்களுக்குள்ளும், எனக்குள்ளும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் ஞானம் ஒன்றுதான் என்றால் ஏன் ஒவ்வொருவரும் உலகை வேறு வேறு விதாமகப் பார்க்கிறோம் ?
மின்சாரம் ஒன்றுதான். அது எந்த விளக்கினுள் செல்கிறதோ அந்த விளக்கின் தன்மையைப் பொறுத்து அதன் ஒளி மாறுகிறது. ஒரு விளக்கில் அது வெண்மையாக ஒளிர்கிறது. இன்னொன்றில் மஞ்சளாக ஜொலிக்கிறது.
அதே போல, மின்சாரம் ஒரு மோட்டாரில் செல்லும் போது அதை சுழல வைக்கிறது. இன்னொரு இடத்தில் நீரை சூடு பண்ணுகிறது. இன்னொரு இடத்தில் நீரை குளிரப் பண்ணுகிறது.
மின்சாரம் என்னவோ ஒன்றுதான். அது எதில் செல்லுகிறதோ, அதைப் பொறுத்து அதன் வெளிப்பாடு மாறுகிறது.
வெளிப்பாடை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் இவை அனைத்திலும் இருப்பது ஒரே சக்திதான் என்று நம்மால் அறிய முடியாது ?
சூட வைப்பதும், குளிர வைப்பதும், உயரே தூக்குவதும், தரைக்கு உள்ளே செல்வதும், ஒலி தருவதும்,ஒளி தருவதும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்றுதான் நமக்குத் தோன்றும்.
மின்சாரத்தைப் பற்றி அறிந்தவன் நிச்சயமாக சொல்லுவான் இவை எல்லாமே மின்சாரம் என்ற ஒரு சக்தியின் வெளிப்பாடு தான் என்று.
எல்லா உயிர்களிலும் இயங்குவது ஒரு சக்திதான்.
அந்த சக்தி எது, அது எப்படி வெளிப்படுகிறது,என்பதை அறிவதுதான் உண்மையான அறிவு.
மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment