Wednesday, June 10, 2015

கீதை - 13.7 - அறிபவனின் குணங்கள்

கீதை - 13.7 - அறிபவனின் குணங்கள் 


अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥

அமாநித்வமத³ம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் |
ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||

அமாநித்வம் = கர்வமின்மை  

அதம்பித்வம்  = தற்பெருமை இன்மை 

அஹிம்ஸா = துன்பம் செய்யாமை 

க்ஷாந்தி = பொறுமை

அரார்ஜவம் = எளிமை, நேர்மை  
ஆசார்யோபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல் 

ஸௌசம் = தூய்மை 

ஸ்தைர்யம் = உறுதி 

ஆத்மவிநிக்³ரஹ = சுய கட்டுப்பாடு 

கர்வமின்மை, தற்பெருமை இன்மை , பிறருக்கு துன்பம் செய்யாமை , பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, சுய கட்டுப்பாடு 

துன்பம் எதனால் வருகிறது ? வந்த துன்பத்தை எப்படி போக்கிக் கொள்வது ?

அறிவு துன்பத்தில் இருந்து நம்மை காக்கும். வரும் துன்பத்தை தடுத்து நிறுத்தும். வந்த துன்பத்தை போக்க  வழி காணும். 

அந்த அறிவை அடைய ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? அறிபவன் (க்ஷேத்ரஞன்) எப்படி இருக்க வேண்டும் என்று  கண்ணன் பட்டியல் தருகிறான். 

கர்வமின்மை - ஆணவம் அறிவை மயக்கும். நான் பெரியவன், என்னால் எல்லாம் முடியும், நான் தவறு செய்ய மாட்டேன், நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற ஆணவம் அறிவை மயக்கும். தவறான வழியில் இட்டுச் செல்லும். ஆணவத்தால் அழிந்தவர்களின் கதைகள் ஏராளம். இராவணன், துரியோதனன், சூரபத்மன், என்ற பட்டியல் மிக நீளமானது. என்னைப் போல திறமையானார்கள் யாரும் இல்லை என்று நினைக்கும் போது , பதவி உயர்வு வரவில்லை என்றால்  வருத்தம் வருகிறது. ஆணவம் துன்பத்திற்குக் காரணம். ஒன்றைப் பற்றி தெளிவாக  அறிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஆணவத்தை நீக்க வேண்டும். இது, அறிபவனின் முதல் குணம். 

தற்பெருமை இன்மை - இது ஆணவத்தின் இன்னொரு வெளிப்பாடு. தன் பெருமையை தானே சொல்லிக் கொள்வது. இது அறிவின் தெளிவை கெடுக்கும். தன்னைச் சார்ந்தே அனைத்தையும் பார்க்கச்  சொல்லும். உலகம் தன்னைச் சுற்றியே இயங்க வேண்டும் என்று நினைக்கும். தற்பெருமை போனால்  அறிவின் தெளிவு பிறக்கும். தெளிந்த அறிவு உண்மையை விளக்கும். 

துன்பம் செய்யாமை - பிறருக்கு துன்பம் செய்வதில் இன்பம் இருப்பதால் அதைச் செய்கிறோம். தான் இன்பமாக இருக்க பிறருக்கு துன்பம் செய்யக் கூடாது. பிறருக்கு துன்பம் செய்யும் போது , கூடவே பயம் பிறக்கும். ஒரு நாள் மற்றவன் நமக்குத் துன்பம் செய்வானோ என்ற  பயம் வரும். அது அறிவை மயக்கும். 

பொறுமை - அறிவுள்ளவன் அவசரப் படமாட்டான். பதட்டம் தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். உலகை சரி வர புரிந்து கொள்ள உதவாது. பொறுமையும் அமைதியும் முக்கியம். அறிபவனின் குணங்களில் இதுவும் ஒன்று. 

எளிமை, நேர்மை - மனம், வாக்கு, காயம் இவை ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றையே செய்ய வேண்டும். மனம் ஒன்றை நினைக்க , நா ஒன்றைச் சொல்ல, உடல் வேறு ஒன்றை செய்து கொண்டிருந்தால்  மனமும் அறிவும் உடலும் பிரிந்து , சிதைந்து போய் விடும். இப்படி கூறு பட்ட ஒன்றால் உண்மையை அறிய முடியாது. எல்லாம் சேர்ந்து இருப்பதே நேர்மை எனப்படுவது. நமக்கு ஒரு ஞாயம், பிறருக்கு ஒரு ஞாயம் என்று வைத்து இருக்கிறோம். மனம் ஒன்றைச் சொல்கிறது. அறிவு இன்னொன்றைச் சொல்கிறது. உடல் மூன்றாவது ஒன்றைச் செய்கிறது. இது அறிவைப் பெரும் வழியா ?

ஆசிரியனை வழிபடுதல் - சொல்லித் தரும் குருவை நம்பவேண்டும். வழிபாடு நம்பிக்கையின் உச்சம். ஆசிரியனை சந்தேகித்தால் அவன் சொல்லித் தருவதிலும் சந்தேகம் வரும். இவன் நமக்கு நல்லதைத்தான் சொல்கிறானா என்ற சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் அவன் சொல்லித் தருவதும் சரியா தவறா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். 

தூய்மை - உடையிலும், உணவிலும், சுற்றுப் புறத்திலும் குறிப்பாக மனத்திலும் தூய்மை வேண்டும். குப்பைக்கு மத்தியில் அறிவைப் பெற முடியாது. குப்பை என்று சொன்னால் கழிவுப் பொருள்கள் மட்டும் அல்ல, வேண்டாத அனைத்தையும் விலக்கி வைக்க வேண்டும். டிவி பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே படிப்பது என்பதெல்லாம் அறிவை பெறும் வழிகள் அல்ல. தூய்மை வேண்டும். 

உறுதி - அறிந்துகொள்வதில் உறுதி. புரியவில்லை என்றால் உடனே விட்டு விடக் கூடாது. விடா முயற்சி வேண்டும். ஒரு தடவைக்கு பத்து தடவை முயல வேண்டும். 

சுய கட்டுப்பாடு - புலனடக்கம் இல்லை என்றால் எதையும் அறிந்து கொள்ள முடியாது. 

இவையும் இன்னும் சிலவும் (மொத்தம் 24 குணங்களை ) அறிபவனின் குணங்கள் என்கிறான் கண்ணன். 

அதற்குப் பின், இந்த குணங்களை வைத்துக் கொண்டு எதை அறிவது என்பது பற்றியும் கூறுகிறான். 

மேலும் சிந்திப்போம். 

  



No comments:

Post a Comment