Friday, April 22, 2016

கீதை - 15.5 - நாசமற்ற பதம்

கீதை - 15.5 - நாசமற்ற பதம்



निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


நிர்மாநமோஹா  = அகந்தையும், மயக்கமும் இன்றி

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து:க = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அ மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர்,  அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

 என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.

இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.

கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.

 சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?

எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .

அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன  நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?

இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.

கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?

இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.

முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.

எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?

யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள  நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும்  படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள்  எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி.  என்னைப்பற்றிய   ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம்  முயற்சி செய்கிறேன்.  அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.

முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது.  நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு  வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.

இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.

சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி  என்று எத்தனை பட்டங்கள் உண்டோ  அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய  தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.

அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.

இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.

உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம்.  நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம்.  அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது  delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.

"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "

"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"

"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "

என்று வருந்துகிறோம்.  கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.

தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.

வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.

முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.

மேலும் வரும்.

நல்லா இருக்கு தானே ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )

Wednesday, April 20, 2016

கீதை - 15.4 - தன்னைத் தான் அறிய

கீதை - 15.4 - தன்னைத் தான் அறிய 


ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥१५- ४॥

தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூய: | 
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||

தத: = பிறகு 

பதம் = இடம் 

தத் = அது 

பரிமார்கிதவ்யம் =  தேடி அடைய வேண்டும் 

யஸ்மிந் = எங்கு 

க³தா = சென்ற பின் 

ந = இல்லை 

நிவர்தந்தி = திரும்புவது 

பூய:= மீண்டும் 

தம் - அவனுக்கு 

ஏவ = நிச்சயமாக 

சா = மேலும் 

அத்யம் =  ஆதி

புருஷம் =புருஷன் 

ப்ரபத்யே = அடைக்கலம் அடைந்த பின் 

யத: = எப்போது 

ப்ரவ்ருத்தி: = செயல் 

ப்ரஸ்ருதா = விரிவடைகிறதோ 

புராணீ = பழமையான 

(அப்படி அந்த சம்சாரம் என்ற மரத்தை வெட்டிய பின்) ஒருவன் மீளா நிலையை அடைவான்.  எவனிடம் இருந்து ஆதித் தொழில் தொடங்கிற்ரோ  அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

சற்று கரடு முரடான சுலோகம்தான். 


மரம் தோன்றி, கிளைத்து, காய் கனிகள் தோன்றி அதில் இருந்து விதை தோன்றி மீண்டுமொரு மரம் தோன்றும் இந்த சக்கரம்  நிற்க வேண்டும் என்றால்  பற்றின்மை என்ற வாளால் அதை வெட்ட வேண்டும் என்றார். எப்படி வெட்ட வேண்டும் என்றால் மீண்டும் அது துளிர்க்காதபடி வெட்ட வேண்டும். 

சரி, அப்படி வெட்டினால் என்ன ஆகும் ?

நமக்கு என்ன இலாபம் ? 

யார் மேலும் எதன் மேலும் பற்றில்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று நமக்குத் தோன்றும். 

அதெல்லாம் வெட்ட முடியாது. 

பற்றற்று இருப்பதனால் என்ன  பலன் என்று முதலில் சொல்...அப்புறம் பற்றை விடலாமா  வேண்டாமா என்று நான் யோசிக்கிறேன் என்று தான் சொல்லத் தோன்றும். 

ஒருவன் சாக்கடையில் விழுந்து விட்டான். ரொம்ப நாள் அங்கேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அங்கேயே கல்யாணம் முடித்து, பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது. அவனை மேலே வா என்றால் " எதற்கு வர வேண்டும்...எங்கே சௌகரியமாகத் தானே இருக்கிறது ...மேலே வந்து என்ன செய்யப் போகிறேன்...அங்கு என்ன பெரிதாக இருந்து விடப் போகிறது...அங்கு என்ன இருக்கிறது என்று சொல் , பின்னால் யோசிக்கிறேன் வரலாமா வேண்டாமா என்று " என்றுதான் அவன் சொல்லுவான்.

நாம் இந்த சம்சாரத்தில் மிக நீண்ட நாட்களாக இருந்து வருகிறோம். நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என்று எத்தனையோ தலை முறைகளாக இதில் கிடந்து உழல்கிறோம். 

இதைத் தவிர வேறு ஒன்று இருக்கிறது என்று சொன்னால் கூட நம்ப மறுக்கிறது மனம். 

அந்த ஆலமரத்தை வெட்டினால் என்ன நிகழும் என்றால், 

"எவனிடம் இருந்து ஆதித் தொழில் தொடங்கிற்ரோ அவனை சார்ந்து நிற்பான் "

இந்த பிறவிக்கு காரணம் என்ன, இந்த துன்பங்களுக்கு காரணம் என்ன, இது எங்கிருந்து வருகிறது, எதனால் வருகிறது என்று அறிவோம்.

எது நம்மைச் செலுத்துகிறது ? எதனால் நாம் உந்தப் பட்டு காரியங்களை செய்கிறோம் ? ஏன் நாம் ஆசைப் படுகிறோம் ? 

எது உண்மையான நாம் என்று அறிவோம். அதனை அறிந்த பின், அந்த உண்மையான என்னை நான் சார்ந்து நிற்பேன். 

இன்று எதை எதையோ சார்ந்து நிற்கிறேன். பெற்றோர் சொன்னது, ஆசிரியர் சொன்னது. ஆசாரியன் சொன்னது. புத்தகங்களில் படித்தது. டிவி மற்றும் ஊடகங்களில் கேட்டது பார்த்தது என்று ஆயிரம் வெளி உலக சங்கதிகளை சார்ந்து நிற்கிறோம்.

எப்போது பற்றற்ற வாளால் இந்த சம்சாரம் என்ற மரத்தை வீழ்துகிறோமோ அன்று உண்மையான நாம் யார் என்று அறிவோம். பின் அதனை சார்ந்து நிற்போம். 

தன்னைத் தான் அறிவது சுகம் இல்லையா ?

அந்த சுகம் எல்லோருக்கும் வாய்கட்டும்.



(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/154.html )

Monday, April 18, 2016

கீதை - 15.3 - பற்றின்மை என்ற வாள்

கீதை - 15.3 - பற்றின்மை என்ற வாள் 


न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥१५- ३॥

ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா |
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூல மஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா || 15- 3||


ந = இல்லை

ரூபம் = உருவம்

அஸ்ய = இதற்கு

இஹ  = இங்கே

ததோ = அப்படியாக

உபலப்யதே = நினைக்கப் பட்டது

ந = இல்லை

அந்த = முடிவும்

ந = இல்லை

ஆதி = தொடக்கமும்

ந = இல்லை

ச = மேலும்

ஸம்ப்ரதிஷ்டா = அடிப்படையும்

அஸ்வத்தம் = ஆல மரத்தின்

ஏனம் = இந்த

ஸுவிரூடமூல = ஆழமான அதன் மூலம்

அஸங்க = பற்றின்மை என்ற

ஸஸ்த்ரேண   வாளால்

த்ருடேந = திட சிந்தையால்

சித்த்வா = வெட்டுவாய்

இந்த வாழ்கை என்ற ஆல மரத்தின் வடிவத்தை யாரும் முழுவதும் கண்டதில்லை .  இதன் ஆரம்பமும், நிகழ் காலமும், முடிவும் தெரிவதில்லை; ஆழமான வேர் ஊன்றிய இந்த ஆல மரத்தை பற்றின்மை என்ற வாளால் வெட்டி எறிந்து விட்டு; 

நாம் சில சமயம் சிந்தித்து இருப்போம்...இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன என்று.  நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், எங்கே போகிறேன், இதன் முடிவு என்ன, இதன் அர்த்தம் என்ன, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, அல்லது இவ்வளவு பெற நான் என்ன பெரிய புண்ணியம் செய்து விட்டேன் என்றெல்லாம் நாம் நினைத்து இருப்போம்.

கீதை சொல்கிறது

"இந்த வாழ்கை என்ற ஆல மரத்தின் வடிவத்தை யாரும் முழுவதும் கண்டதில்லை"

இந்த வாழ்கை என்ற மரத்தை யாரும் முழுவதும் கண்டது இல்லை. எப்படி இது ஆரம்பித்தது, எப்படி வளர்ந்தது, கிளைத்தது, புது விதை வந்தது, அது இன்னொரு மரமாக வளர்ந்தது...யாருக்குத் தெரியும்...எத்தனை காலமாக இது நடந்து கொண்டு இருக்கிறது, இன்னும் எத்தனை காலம் நடக்கும் என்று.

யாரும் இதை முழுவதும் அறிந்தது இல்லை என்றால், நீங்கள் வீணாக உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதில் செலவிடாதீர்கள். எவ்வளவு முயன்றாலும் இதை நீங்கள் முழுவதும் அறியப் போவது இல்லை.

அது மட்டும் அல்ல


"இதன் ஆரம்பமும், நிகழ் காலமும், முடிவும் தெரிவதில்லை"

இந்த வாழ்கை எப்போது தொடங்கியது, இப்போது என்ன நிகழ்கிறது, இனி என்ன நிகழப்  போகிறது என்றும் நமக்குத் தெரியாது. தெரியாத மிகப் பெரிய சுழலில் எல்லாம் தெரிந்தவர்களைப் போல நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

சரி, பிறப்பு நம் கையில் இல்லை. நாளை நடப்பது நம் கையில் இல்லை. சரி, இறப்பாவது நம் கையில் இருக்கிறதா என்றால், அதுவும் நம் கையில் இல்லை.  இந்த வாழ்க்கையில் பலப் பல ஆசைகளுடன், இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நல்லதும் செய்கிறோம், தெரிந்தோ தெரியாமலோ கெட்டதும் செய்கிறோம். செய்கின்ற வினைகளுக்கு ஏற்ற மாதிரி எதிர் கால வாழ்க்கை மாறுகிறது. அடுத்த பிறப்பு என்று சொல்லவில்லை நான். செய்யும் வினைகளுக்கு ஏற்ப வாழ்வின் திசை மாறுகிறது.

கடைசியில், ஓடி நிற்கும் போது பார்த்தால் என்ன சாதித்தோம், என்ன நடந்தது, இன்னும் அதைச் செய்திருக்கலாம், இதை அனுபவித்து இருக்கலாம் , அப்படி வாழ்ந்து இருக்கலாம், இப்படி வாழாமல் இருந்து இருக்கலாம் என்று ஆயிரம் எண்ணங்கள் ஓடும். பொதுவாக ஒரு ஏமாற்றமும், விரக்தியும், ஏக்கமுமே மிஞ்சும். 

இதில் இருந்து விடுதலை கிடையாதா ? இதை எப்படி மாற்றி அமைப்பது. இப்படித்தானே எல்லோரும் வாழ்கிறார்கள். இதைத் தவிர்த்து வேறு விதமாக வாழ முடியுமா ?


"ஆழமான வேர் ஊன்றிய இந்த ஆல மரத்தை பற்றின்மை என்ற வாளால் வெட்டி எறிந்து விட்டு; "

இந்த வாழ்கை முறை மிக ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறது. காலம் காலமாக நாம் இதையே செய்து வருகிறோம்.  வேறு விதமான, இன்பமான வாழ்கை வேண்டும் என்றால், இந்த வாழ்கை முறை போக வேண்டும். எப்படி போகும் ?


பற்றின்மை என்ற வாளால் இதை வெட்டி ஏறிய வேண்டும்.

இந்த வாழ்கை முறை, இந்த தொடர்ச்சி இதன் மேல் கொண்ட பற்றினால் வருகிறது. பற்று அற்றுப் போகும் போது , இந்த சுழற்சி நிற்கிறது. 

காரில் போய்க் கொண்டே இருக்கிறோம். போகிற வழி தவறான வழி என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் ? முதலில் accelerator இல் இருந்து காலை எடுக்க வேண்டும். காலை எடுத்தால் வண்டி கொஞ்ச தூரம் போய் தானாகவே நிற்கும். அதற்குப் பின், வேண்டிய திசைக்கு நாம் வண்டியை திருப்பிக் கொள்ளலாம். 

பொருள்கள் மேல், மனிதர்கள் மேல், உறவுகளின் மேல், அனுபவங்களின் மேல் கொண்ட  பற்றினால் வாழ்க்கை மேலும் மேலும் நம்மை தவறான வழியில்  இழுத்துக் கொண்டு போகிறது. இதை மாற்ற வேண்டும் என்றால் முதலில் பற்றை விட வேண்டும். 

அது சரி, பற்றை விட்டு விட்டு என்ன செய்வது ?

கணவன் மேல், மனைவி மேல், பிள்ளைகள் மேல், பேரன் பேத்திகள் மேல் , பெற்றோர், உற்றார், உறவினர் மேல் உள்ள பற்றை விட்டு விட்டு என்ன செய்வது ? நாமும் வியாசர் மாதிரி சாமியாராகப் போக வேண்டியதுதானா ? அதுக்கு இந்த வாழ்கையே நல்லா இருக்கும் போல இருக்கே என்று நாம் நினைக்கலாம்.

பற்றற்ற தன்மையால் விளையும் நன்மைதான் என்ன ?

அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி சொல்கிறார். 

அதுவரை, இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை ஆழ்ந்து யோசியுங்கள். 

வாதம் பண்ணுவதற்காக அல்ல, வாழ்கையை புரிந்து கொள்வதற்காக.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/153.html

Sunday, April 17, 2016

கீதை - 15.2 - சம்சாரம் எனும் மரம்

கீதை - 15.2 - சம்சாரம் எனும் மரம் 


अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥१५- २॥

அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா: |
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே || 15- 2|

அத = கீழே

ச = மேலும்

உர்த்வம் = மேலே

ப்ரஸ்ருத = பரந்து விரிந்த

தஸ்ய = அதன்

ஸாகா  = கிளைகள்

குணப்ரவ்ருத்தா = குணங்களால் உருவாக்கப்பட்ட

விஷயப்ரவாலா: = புதிதாக முளை விட்டு

அத = கீழே

ஸ்ச = மேலும்

மூலாநி = மூல காரணமான

அநுஸந்ததாநி = பரவியுள்ள

கர்மாநுபந்தீநி = கர்மங்களால் பிணைக்கப்பட்டு

மநுஷ்ய லோகே = மனித குலமே

அந்த ஆல மரத்தின் கிளைகள் குணங்களால் வளர்ந்து; விஷயங்களால் துளிர்விட்டு, பரந்து விரிந்து , கர்ம வினைகளால் பிணைக்கப் பட்டுள்ளது. 

ஒரு மரத்தை வைத்துக் கொண்டு வியாசர் வாழ்கையை விளக்குறார்.

மரத்தின் அடியில் இருந்து பலர் ஞானம் பெற்றது இதனால்தானோ ? மரம் எத்தனையோ விஷயங்களை விளக்குகிறது.

நாம் நாளும் மாற்றம் அடைகிறோம்.

சில நேரம் உயர்கிறோம். பல நேரங்களில் மேலே செல்லாமல் பக்கவாட்டில் செல்கிறோம். சில நேரம் கீழ் நோக்கி கூட செல்கிறோம்.

சில நாட்கள் நல்ல புத்தகங்களை படிப்பது, அறிவார்த்த விஷயங்களை கேட்பது, நல்லவர்களுடன்  பழகுவது, என்று உயர்வான விஷயங்களில் ஈடுபடுகிறோம்.

சில நாள், தொலைக்காட்சி, வாரப் பத்தரிகைகள், அரட்டை என்று செல்கிறது.

சில நாள் கோபம், பொறாமை, பொய் பேசுவது, கட்டுப் பாடு இல்லாமல் உண்பது என்று செல்கிறது.

ஏன் இப்படி நிகழ்கிறது ?

எது நம்மை இப்படி செலுத்துகிறது ?

மரத்தின் கிளைகள் மேல் நோக்கியும் வளர்கின்றன, பக்கவாட்டிலும் வளர்கின்றன, வேர்கள் கீழ் நோக்கியும் செல்கின்றது.

"அந்த ஆல மரத்தின் கிளைகள் குணங்களால் வளர்ந்து"

நமது குணங்கள் நம்மை வளர்க்கின்றன. மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ  ஏதோ ஒரு விதத்தில் நம்மை அவை தூண்டி வளர்க்கின்றன.

சாத்வீக குணம் மேல் நோக்கி வளர்க்கிறது.

ரஜோ குணம் பக்கவாட்டில்.

தமோ குணம் கீழ் நோக்கி செலுத்துகிறது.

எந்த குணம் உங்களுக்குள் மிகுந்து இருக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்து  உங்கள் வளர்ச்சி அமையும்.

இரண்டாவது,

"விஷயங்களால் துளிர்விட்டு, பரந்து விரிந்து "

நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களால் நம்மில் புதுப் புது துளிர்கள் எழுகின்றன. புதிதாக ஒரு  கார் வந்திருக்கிறதாமே, அதை வாங்கினால் என்ன ? அங்கே ஒரு புது அபார்ட்மெண்ட் வருகிறதாம் , நமக்கும் அதில் ஒரு பிளாட் எடுத்தால் என்ன, அயல் நாட்டு சுற்றுப் பயணம் செல்ல குறைந்த செலவில் ஏதோ திட்டம் அறிவித்திருக்கிறார்கள்...போய் விட்டு வந்தால் என்ன என்று விஷய ஞானங்களால் புதுப் புது துளிர்கள்  எழுகின்றன.

புதிதாக ஒரு துளிர் விடும் பொழுது, ஒரு மொட்டு வெளி வரும்போது பார்க்க அழகாகத்தான் இருக்கும்.

புது கிளை வளரும். அது பரந்து விரியும்.

அப்போது என்ன ஆகும் ?

அந்த கிளைக்கு, அதில் உள்ள இலைகளுக்கு, அதில் உள்ள மலர்களுக்கு, காய் , மற்றும் கனிகளுக்கு வேர் நீரைத் தேடிச் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டிய  சத்துக்களை உறிஞ்சி மேலே அனுப்ப வேண்டும்.

மரம் பெரிதாக வளர வளர வேர் மேலும் மேலும் கீழ் நோக்கி வளர வேண்டும். அது மட்டும் அல்ல, மரம் கீழே விழுந்து விடாமல் இருக்க அது பக்க வேர்களையும், சல்லி வேர்களையும் உருவாக்கி மண்ணோடு இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

அதே போல, புதுப் புது ஆசைகள் , புதுப் புது தேவைகளை உருவாக்கும்.

அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய மேலும் கடினமாக உழைக்க வேண்டும். அது மட்டும் அல்ல, பல பேரின் தயவு தேவைப் படும். இந்த உலகில் மேலும் மேலும் பற்று கூடிக் கொண்டே போகும்.

கர்மா (வேலை) ஒரு புறம். செல்வம் சேர்க்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும், சரியானபடி அதை செலவழிக்க வேண்டும் என்ற பயம், ஆசை என்று உலகியல் பற்றுகள்  நாளும் நாளும் கூடிக் கொண்டே போகும்.

"கர்ம வினைகளால் பிணைக்கப் பட்டுள்ளது. "

இப்படி, புது விஷயங்கள், புதுத் தேவைகள், புது முயற்சிகள் என்று கர்ம வினைகள் கூடிக் கொண்டே  போகிறது.

இதுதான் சம்சார என்ற மரம்.

இந்த மரத்தை எப்படி இல்லாமல் போக்குவது ? வெட்டினால் மீண்டும் துளிர்விடும். ஒரு ஆசை போனால், இன்னொரு ஆசை வரும்.

மரமே இல்லாமல் செய்து விட்டால் ?

அது எப்படி முடியும் ?

முடியும் என்று சொல்வது மட்டும் அல்ல, அதற்கான வழியும் சொல்லித் தருகிறார் வியாசர்.

கேட்டுப் பயன் பெறுவோமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/152.html )

கீதை - 15.1 - வேத வித்து

கீதை - 15.1 - வேத வித்து


ஷ்ரீ பகவாநுவாச
ஊர்த்வமூலமதஃஷாகமஷ்வத்தஂ ப்ராஹுரவ்யயம்.
சந்தாஂஸி யஸ்ய பர்ணாநி யஸ்தஂ வேத ஸ வேதவித்

ஷ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்

ஊர்த்வ மூலம் = வேர்கள் மேலேயும்

அதஃஷாகம் = கிளைகள் கீழேயும்

அஷ்வத்த = அஸ்வத மரத்தின்

ப்ராஹு = கூறுகிறார்கள்

அவ்யயம் = மாறாத, நிலைத்த

சந்தாஂஸி = வேதங்களில்

யஸ்ய = அவற்றில்

பர்ணாநி = இலைகள்

ய = அவன்

ஸ்த = அவற்றில்

வேத = வேதங்களை

ஸ = அவன்

வேதவித் = விற்பனனாவான் வேதங்களில்

மாறாத அது  மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண் டது. ஆலமரம் போன்ற  அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான்.

மேலே வேரும் , கீழே கிளைகளும் கொண்ட மரம் என்றால் அது என்ன மரம் ? நாம்  அன்றாடம் பார்க்கும் மரங்கள் எல்லாவற்றிற்கும் வேர் கீழேயும், கிளைகள்  மேலேயும் இருக்கும். இது என்ன புது மாதிரியான மரம் , தலை கீழாக இருக்கிறதே.

அது மட்டும் அல்ல, இந்த மரத்தைப் பற்றி புரிந்து கொண்டவனே வேதத்தை அறிந்தவனாவான் என்கிறது கீதை.

அது என்ன மரம் ?

நமது வம்ச வரலாற்றை , நமது குடும்ப வரலாற்றை ஒரு படமாக வரைந்தால் எப்படி இருக்கும்.

நான், எனது சகோதர், சகோதரிகள் ஒரு மட்டத்தில் இருப்போம்.

அதுற்கு மேல், என் தாய் தந்தையர், அவர்களின் உடன் உடன்பிறப்பு.

அதற்கு மேல் என் தாத்தா பாட்டி, அவர்களின் உடன் பிறப்புகள்.

அதற்கு மேல்  அவர்களின் தந்தை, தாய்...என்று போகும்.

இப்படி போகும் மரத்தில் (family tree ), மேலே போய் கொண்டே இருந்தால் அது சிறுத்துக் கொண்டே  போகும்...கடைசியில் யாரோ ஒருவரில் போய் நிற்கும் அல்லவா ?

இந்த உலகை எடுத்துக் கொண்டால், இப்படியே மேலே போய் கொண்டே இருக்கும்...ஒரு கட்டத்தில் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர்களில் இருந்து  வந்திருப்போம். இன்னும் மேலே போனால் அனைத்து முதுகு எலும்பு உள்ள உயிர் இனங்கள் எல்லாம்   ஒன்டிரில் இருந்து வந்திருக்கும்.

இன்னும் மேலே போனால், அனைத்து உயிர் இனங்களும் ஒன்றில் இருந்து வந்திருக்கும்.

இன்னும் மேலே போனால் அனைத்து உயிர் உள்ளதும் உயிர் அற்றதும் ஏதோ ஒன்றில் இருந்து  புறப்பட்டு கிளைத்து கிளைத்து வந்திருக்கும் அல்லவா ?

அது தான் ஆதி மூலம்.

அது தான் ஆணி வேர். அந்த வேரில் இருந்துதான் எல்லாம் கிளைத்து வந்தது.

சரி, இதை வேறு யாராவது எங்காவது சொல்லி இருக்கிறார்காளா என்றால் சொல்லி இருக்கிறார்கள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த குறள் ...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

அது என்ன "பகவன்"

பகவன் என்றால் பகுப்பவன். பகுத்தல் என்றால் பிரித்தல். கிளைத்தல்.

இந்த உலகம் அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து பிரிந்து  வந்தது. குறள் அதை "ஆதி பகவன்" என்கிறது.

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர்.  வாழ்கைக்கு முதலான பொருள்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் என்பார் கம்பர்.

தான் எல்லாவற்றிலும் இருக்கும் படி உலகை ஆக்கினான் என்பார்.

சரி, இருந்து விட்டுப் போகட்டும்...இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து வந்ததாகவே இருக்கட்டும் , அதனால் என்ன ? அதை அறிவதற்கும் , வேதத்தை அறிவதற்கும் என்ன தொடர்பு ?


இந்த உலகம் அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து வந்தது என்றால் நீங்களும், நானும், இங்குள்ள நாய் குட்டியும், மற்றைய மனிதர்களும், உயிர்களும் எல்லாம்  ஒன்றில் இருந்து வந்தவை. நாம் எல்லாம் சொந்தக்காரர்கள். ஒரே குடும்பம்.  மனிதர்கள் மட்டும் அல்ல, அனைத்து உயிர்களும் ஒரே குடும்பம்.

இதில் வேற்றுமை எங்கே வந்தது ? இதில் சண்டை சச்சரவு என்ன ? அடி பிடி என்ன ? பொறாமை கோபம் என்ன ?

யார் மீது கோபம் ? யார் மீது பகை ? யார் மீது பொறாமை ? நமக்குள் என்ன. ஒன்றுக்குள் ஒன்றாக இருப்போம்.

வேதம் இதையேதான்  சொல்கிறது.

வேதத்தின் சாரம் "பரோபகாரம் இதம் புண்யம் "

சரி, வேர் மேலே இருக்கிறது என்பது புரிகிறது.

அதன் இலைகளே வேதம் என்றால் என்ன அர்த்தம் ?

இலைகள் என்ன செய்கின்றன ?

இலைகள் , மேலிருந்து சூரிய ஒளியையும், மண்ணில் இருந்து நீர் மற்றும் தேவையான  உப்புகளைக்யும், காற்றில் இருந்து கரிய மில வாயுவையும் எடுத்து தன்னிடம் உள்ள  பச்சையம் (chlorophyll )  என்பதன் மூலம் உணவு தயாரிக்கிறது.

வாழ்க்கையின் அனுபவங்களை, நூல்களின் அர்த்தங்களை எல்லாம் ஒன்று சேர்த்து  வேதங்கள் நமக்குத் தருகின்றன. எப்படி இலைகள் கனிகளை தருகிறதோ அது போல  வேதங்கள் நமக்கு அறிவு என்ற கனியைத் தருவதால் அது  இலைகள் எனப்பட்டது.

அது மட்டும் அல்ல, இலைகள் மூலம் நீர் வெளியேற்றப் படுகிறது. நீர் ஆவியாகிப் போனால்  மரம் தன் வேர் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி மேலே அனுப்பும். அப்படி அனுப்பும் போது கிளைகளும், இலைகளும் அந்த நீரைப் பெற்று வளரும்.  மரம் வாழ வேண்டும் என்றால் இலைகள் வேண்டும். அதே போல  இந்த சம்சாரம் என்ற வாழ்கை தொடர வேதங்கள் வேண்டும்.

வேதங்கள் வாழ வைக்கின்றன.

அறிவு என்பது நின்று போய் விடுவது அல்ல. அது நாளும் நாளும் விரிந்து கொண்டே போவது.

இலைகள் பழுத்து கீழே விழும். அவை மக்கி உரமாகி அந்த மரத்தில் சேர்ந்து புது இலைகள்  உருவாக வழி செய்யும்.

அது போல , வேதங்கள் காலத்தோடு சேர்ந்து தன்னைத் தானே புதுபித்துக் கொள்ளும். அப்படி புதுபித்து அது என்றும் வழி காட்டும்.

அப்படியா ? அப்படி புதியதாய் வேதம் வந்த மாதிரி தெரியவில்லையே என்று நினைகிறீர்களா ?

நாள்லாயிர திவ்ய  பிரபந்தமும் , தேவாரமும் திருவாசகமும்  வேதத்தின்   சாரங்கள்தான்.

வேதத்தை எளிமை படுத்தி அவற்றின் சாரத்தை புதிதாக கொண்டு தந்தவை இந்த நூல்கள்.

வேதம் தன்னை மீண்டும் மீண்டும் புதுபித்து கொண்டு வரும் - நமக்கு வழி காட்ட.

அந்த வழி உங்களுக்காகவும் இருக்கட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/151.html )

Saturday, April 16, 2016

கீதை - 15.1 - வேத வித்து

கீதை - 15.1 - வேத வித்து


ஷ்ரீ பகவாநுவாச
ஊர்த்வமூலமதஃஷாகமஷ்வத்தஂ ப்ராஹுரவ்யயம்.
சந்தாஂஸி யஸ்ய பர்ணாநி யஸ்தஂ வேத ஸ வேதவித்

ஷ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்

ஊர்த்வ மூலம் = வேர்கள் மேலேயும்

அதஃஷாகம் = கிளைகள் கீழேயும்

அஷ்வத்த = அஸ்வத மரத்தின்

ப்ராஹு = கூறுகிறார்கள்

அவ்யயம் = மாறாத, நிலைத்த

சந்தாஂஸி = வேதங்களில்

யஸ்ய = அவற்றில்

பர்ணாநி = இலைகள்

ய = அவன்

ஸ்த = அவற்றில்

வேத = வேதங்களை

ஸ = அவன்

வேதவித் = விற்பனனாவான் வேதங்களில்

மாறாத அது  மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண் டது. ஆலமரம் போன்ற  அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான்.

இந்த உலகம், அதில் உள்ள பொருள்கள் , உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்து வந்தது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் ?

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிர் அற்ற பொருள்கள் என்று எத்தனை எத்தனை இருக்கிறது.

மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் தான் எத்தனை பிரிவு - ஆண் , பெண், நல்லவன், கெட்டவன் , கருப்பு, சிவப்பு, உயரம் குட்டை, ஒல்லி பருமன் என்று ஆயிரம்  வேறுபாடுகள்.

அப்படித்தான் மற்றவற்றிலும்.

ஒன்றில் இருந்துதான் அனைத்தும் வந்தது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

ஒருவேளை, இவை அனைத்தும் ஒன்றில் இருந்து வந்தவை அல்லவோ. ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மூலம் இருக்குமோ ?

இவை அனைத்தும் எங்கிருந்து வந்தன ? எங்கிருந்தோ வந்தன என்றால் அந்த மூலத்திற்கும், இந்த உயிர்களுக்கும் என்ன தொடர்பு ?  இவற்றை தோன்ற வைத்த பின்  அது என்ன ஆயிற்று ?

இவற்றைப் பற்றி அறிந்துகொண்டவன் புருஷர்களில் உத்தமன் என்று அழைக்கப் படுகிறான்.

இந்த ஞானத்தைப் பற்றி இந்த அத்யாயம் பேசுகிறது.

வேதத்தின் சாரத்தை இரண்டு வரியில் அடக்கிச் சொல்கிறது கீதை.

"இதை அறிந்தவனே வேத வித்து" எனப் படுவான் என்கிறது.

எதை அறிந்தால் ?












Thursday, April 7, 2016

கீதை - பதினான்காம் அத்யாயம் - ஒரு தொகுப்பு

கீதை - பதினான்காம் அத்யாயம் - ஒரு தொகுப்பு 


1. ஞானங்களில் உயர்ந்த ஞானமான குணத்ரய விபாக யோகம் இந்த அத்யாயத்தில் சொல்லப் பட்டது.

2. இந்த ஞானத்தை அடைந்த முனிவர்கள் இந்தப் பிறவியிலேயே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

3. இந்த ஞானத்தைப் பெற்றோர், பிறப்பு, இறப்பு என்ற சுழலில் வருந்த மாட்டார்கள்.

4. இந்த உலகம் நம் கற்பனையால், எண்ணங்களால் உருவாவது. வெளியில் உள்ளவவைகளும் நம் எண்ணங்களும் சேரும்போது உலகம் பிறக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து குழந்தை பிறப்பது போல.

5. இந்த உலகுக்கும், அதில் உள்ளவற்றிற்கும் நாம் ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறோம். நம்மால் அவை உயிர் பெறுகின்றன.

6. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இந்த முக்குணங்கள் நம்மை பிணிக்கின்றன . கட்டிப் போடுகின்றன.

7. சத்வ குணம்  தூய்மையானது (நிர்மலம்) , ஒளி பொருந்தியது, ஆரோக்கியமானது. அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.

8. ரஜோகுணம் விரும்பும் இயல்பு உடையது.   ஆசையின் சேர்க்கையால் பிறப்பது. தொழிலின் சேர்க்கையால் நம்மை கட்டுப் படுத்துகிறது.

9. தமோகுணம் அறிவீனத்தில் பிறக்கிறது.  இது அனைத்து உயிர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தவறு, சோம்பல் மற்றும் உறக்கத்தால் கட்டுப் படுத்துகிறது.

10. சத்வம் குணம் இன்பத்தின் மூலம் நம்மை பிணைக்கிறது.  ரஜோகுணம் செய்கையின் மூலம் நம்மை பிணைக்கிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து  மயக்கத்தில் பிணிக்கிறது.

11. இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒரு குணம் மற்ற குணங்களை  தாண்டி உச்சம் பெற்று நிற்கிறது.  அப்படி ஒரு குணம் மற்ற குணங்களைத் தாண்டி உச்சம் பெறும் போது , அந்த உச்சம் பெற்ற குணத்தின் இயல்பபை நாம் பெறுகிறோம்.

12. புலன்கள் அறிவின் கட்டுக்குள் இருக்கும் போது சத்வ குணம் உச்சம் பெற்று இருக்கிறது  என்று அறிந்து கொள்ளலாம்.

13. பேராசை, முயற்சி, தொழிலை தொடங்குவது,  அமைதியின்மை, பொறாமை அல்லது ஏக்கம்  இவை ரஜோ குணம் வலிமை பெற்று இருக்கும் போது தோன்றுகிறது.

14. தமோ குணம் ஓங்கி இருக்கும்போது ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் என்பவை  பிறக்கும்.

13. சத்வ குணம் உயரும் போது , தானாகவே உயர்ந்தவர்கள் மற்றும் நல்லவர்களின் தொடர்பு நிகழும். ரஜோ  குணம் உயரும் போது கர்மத்தில் பற்று உடையவர்களின் தொடர்பு நிகழும். தமோ குணம் உயரும் போது மூடர்களின், சோம்பேறிகளின் தொடர்பு நிகழும்.

14. சத்வ குணத்தின் பலன்   நிர்மலத் தன்மை.  ரஜோ குணத்தின் பலன்  துன்பம். தமோ குணத்தின் பலன்  அறிவின்மை

15. சத்வ குணத்தில் இருந்து ஞானம் பிறக்கிறது;
ரஜோ குணத்தில் இருந்து பேராசை பிறக்கிறது
தமோ குணத்தில் இருந்து  தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் பிறக்கின்றன

16, சாத்வீக குணம் உடையவர்கள் மேல் நோக்கிப் போகிறார்கள்.
ரஜோ குணம் உடையவர்கள் இடையில் நிற்கிறார்கள்.
தமோ குணம் உடையவர்கள் கீழ் நோக்கிப் போகிறார்கள்.

17. குணங்கள் தான் நம்மை செலுத்துகின்றன. எது குணங்களை செலுத்துகிறதோ, அதை அறிந்து கொண்டால் இறைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

18. இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்டவன் பிறப்பு, மூப்பு, இறப்பு என்ற  துன்பங்களில் இருந்து விடுபடுவான்.

19. நமக்குள் ஒவ்வொரு குணம் உயரும் போதும் , தாழும் போதும் அவற்றை பற்றி விருப்பு வெறுப்பு இன்றி இருந்தால், குணங்களின் பிடியில் இருந்து விடுபடலாம்.

20. குணங்கள் வருவதும் போவதும் இயல்பானது என்று அறிந்து அவற்றிற்காக  சலனப் படாமல் இருந்தால் அவற்றின் பிடியில் இருந்து விடுபடலாம்.

21. குணங்களைக் கடந்தவன் உயர்வு தாழ்வு, நண்பன் பகைவன், செல்வம் வறுமை என்ற வாழ்வின் பல்வேறு வேறுபாடுகளை ஒன்றாகக் காண்பான்.

22. தன்னலமற்ற நினைவோடு எப்போதும் தொண்டு செய்வதே குணங்களின் பிடியில் இருந்து விடுபட வழி.

23. கற்பனையான பிரிவினைகளை மறந்து , இரவல் ஞானங்களை துறந்து தெளிந்த மனதோடு இருப்பதே உயர்ந்த இன்பம்.


அந்த இன்பம் எங்கும் எல்லோருக்கும் நிறைவாக இருக்கட்டும் !!

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/blog-post_7.html )