Thursday, July 11, 2019

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?



योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते॥४८॥

யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||

யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்

குரு = செய்வான்

கர்மாணி = காரியங்களை

ஸங்க³ம் = தொடர்பு

த்யக்த்வா = விட்டுவிட்டு

த⁴நஞ்ஜய = தனஞ்சய

ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)

ஸமோ = சமமாக

பூ⁴த்வா = அடைந்தபின்

ஸமத்வம்= ஒன்றாக

யோக³ =யோகம் என்பது

 உச்யதே = இதுவே


அர்ஜுனா, யோகத்தில் இருந்து, தொடர்பை, பற்றை விட்டுவிட்டு, வெற்றி தோல்விகளை சமமாக கருதி, காரியங்களைச் செய். நடு நிலையாக இருப்பதே யோகம் எனப்படும். 


கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்றெல்லாம் சொல்கிறார்களே. யோகம் என்றால் என்ன ? அதன் அடிப்படை என்ன என்று கண்ணன் இங்கே சொல்கிறான்.

முதலாவது, பற்றை விட்டு விட வேண்டும்.  பற்றை என்றால் எந்தப் பற்றை?

முதலில் ஒரு உதாரணம் பார்ப்போம். பின் இது எளிதில் விளங்கும்.

ஒரு மருத்துவர் இருக்கிறார். அறுவை சிகிச்சையில் வல்லவர். அவருடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அவர் செய்வாரா ? மாட்டார்.

ஏன்?

ஏன் என்றால், பிள்ளையின் மேல் உள்ள பற்று. பற்று வந்தவிட்டால் எவ்வளவு பெரிய  நிபுணர் ஆனாலும், செய்ய முடியாது. தவறு வந்து விடுமோ? தவறினால்  என் பிள்ளை இறந்து விடுமோ என்ற அச்சம் வரும். கை நடுங்கும். கட்டாயம் தவறு நிகழும்.

இதுவே வேறு ஒரு நோயாளியாக இருந்தால், அவருக்கு அந்த நோயாளி மேல் பற்று இல்லை. அவர் பாட்டுக்கு தன் கடமையைச் செய்வார். அது சரியாக இருக்கும்.

சரி, பற்று எப்படி விடும்? எப்படி பற்றை விடுவது?

சொல்லுவது எளிது. எப்படி செய்வது?

அதற்கும் வழி சொல்கிறான் கண்ணன்.

இரண்டாவது, வெற்றி தோல்வியில் சமமாக இருக்க வேண்டும்.  வெற்றி வந்தால் தலை கால் தெரியாமல் துள்ளுவது. தோல்வி வந்தால் துவண்டு விடுவது. இரண்டும் கூடாது. நான் என் வேலையைச் செய்தேன். வெற்றியோ,தோல்வியோ  அது பற்றி கவலை இல்லை என்று இருக்க வேண்டும்.

இந்த பற்றுக்கும், வெற்றி தோல்விக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கவனித்தீர்களா?

பற்று என்பது இறந்த காலத்தில் இருந்து வருவது. என் பிள்ளை, என் கம்பெனி, என் நிறுவனம், என் நாடு, என் உறவு என்பதெல்லாம் கடந்த காலத்தில் இருந்து வருவது.

வெற்றியோ தோல்வியோ எதிர் காலத்தில் இருந்து வருவது. இனிமேல் நடக்கப் போவது.

நாம் இருப்பதோ நிகழ் காலத்தில்.

நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியத்தை எதிர் காலத்தில் வரப் போகும் ஒன்றை நினைத்து  சரியாக செய்யாமல் விடுவதோ, அல்லது கடந்த காலத்தில்  உள்ளதை நினைத்துக் கொண்டு இருப்பதோ சரியா?

சமையல் செய்யும் போது, சமையலில் கவனம் வேண்டும். யார் சாப்பிடுவார்கள், சாப்பிட்ட பின் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டே உப்பு புளி எல்லாம் போட்டால் எப்படி இருக்கும் சமையல்?

பரீட்சை எழுதும் போது பதிலில் கவனம் இருக்க வேண்டும். பரீட்சை முடிந்து  , தேர்ச்சி பெற்று, வேலை கிடைத்து, அதில் நிறைய சம்பாதித்து என்று  கனவு கண்டுகொண்டே இருந்தால், பதில் எப்போது எழுதுவது?

தொழில் மேல் பற்றியும் விட்டுவிட வேண்டும், அதில் இருந்து வரும் இலாப நட்ட கணக்கையும் விட்டு விட வேண்டும்.

செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். தொழில் மட்டும் தான் கவனத்தில் இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக் கூடாது.

அப்படி

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில்

கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் நடுவில் இருப்பதுதான்

யோகம்.

கண்ணன் ஏன் இப்படிச் சொல்கிறான்?

வெற்றி தோல்வி பற்றி சிந்திக்கமால் இருக்க முடியுமா?

வெற்றியினை அடைய வேண்டும், தோல்வியினை தவிர்க்க வேண்டும் என்பதுதான்  அனைவரின் விருப்பமும்.

அப்படி இருக்க எது வந்தாலும் கவலைப் படாதே என்றால் எப்படி?

சரி, அப்படி இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் பெரிதாக என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.

சாமியார் மாதிரி அலைய வேண்டியத்துதான்...வேறு என்ன நிகழ்ந்து விடும்?

கண்ணனிடமே கேட்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/07/248.html

No comments:

Post a Comment