பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 3
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥
கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||
கர்மணி = வேலை செய்வதில்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.
கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது.
(முதல் இரண்டு பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )
கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
இதை இன்னொரு தளத்தில் இருந்து பார்ப்போம்.
பலனை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். பலன் இல்லாமல் வேலை செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்து வராத சிந்தாந்தம். ஒரு ஆள் அப்படி செய்ய மாட்டார்கள்.
சரி. பலன் வேண்டும் தான்.
எவ்வளவு பலன் வேண்டும் ?
மனிதன் ஆசைக்கு அளவு உண்டா ? எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அது மட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக இன்று கொடுத்தாலும், நாளை இன்னும் வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்பான்.
இதன் ஆபத்தை நாம் இன்னும் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவில்லை.
உதாரணமாக,
ஒரு மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வைத்தியம் பார்க்கிறார். அதற்கு உரிய தொகையை பெற்றுக் கொள்கிறார். அவருக்கு அந்த பலன் போதாது. இன்னும் வேண்டும் என்று நினைக்கிறார்.நோயாளியிடம் இருந்து நிறைய வேண்டும் என்று நினைக்கிறார்.
சாதாரண பிரசவத்தை சிசேரியனாக மாற்றுகிறார். ஒன்றுக்கு பத்தாக பலன் கிடைக்குமே.
தேவை இல்லாத சோதனைகளை செய்து கொண்டு வா என்கிறார். மருத்துவ பரிசோதனை நிலையம் (லேப்), அவருக்கு ஒரு பங்கை கொடுத்து விடும். நிறைய பலன் கிடைக்கிறதே.
அளவுக்கு அதிகமான மருந்துகளை எழுதித் தருகிறார். மருந்து நிறுவனங்கள் அவருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடும். பலன்.
இது ஒரு ஒரு தொழில் நடப்பது மட்டும் அல்ல.
பள்ளியில் பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர் சரியாக சொல்லித் தராமல், டியூஷன் எடுத்துக் கொள்ள வீட்டுக்கு வா என்கிறார். மேலும் பலன் கிடைக்குமே.
ஒழுங்காக செய்ய வேண்டிய நேரத்தில் வேலையை செய்யாமல், overtime இல் செய்தால் மேலும் பலன் கிடைக்குமே என்று தொழிலாளிகள் வேலை செய்யும் வேகத்தை குறைக்கிறார்கள்.
தொழிற்சாலையில் இருந்து வரும் மாசுபட்ட கழிவு நீர் மற்றும் புகையை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும். அப்படி செய்ய பணம் செலவு செய்ய வேண்டும். இலாபம் குறையும். பலன் குறையும். எனவே, அசுத்த நீரையும், காற்றையும் அப்படியே விட்டு விடுகிறார்கள். சுற்றுச் சூழ்நிலை கெடுகிறது.
வேலை செய்ய வேண்டிய அரசாங்க அதிகாரிகள் கையூட்டு (இலஞ்சம்) வாங்குகிறார்கள். பலனில் புத்தி போனதால். இலஞ்சம் கொடுக்கும் போது மனம் எப்படி வலிக்கிறது. அப்போது தோன்ற வேண்டும், இந்த சுலோகம் , நடைமுறைக்கு உகந்ததா இல்லையா என்று.
வீட்டில் மாடு இருக்கிறது. கன்று போட்ட சில மாதங்களுக்கு அது பால் தரும். கன்றுக்குப் போக கொஞ்சம் மிச்சம் இருந்தால் நாம் அதை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் தான் கிடைக்கும். அதிக பலன் வேண்டும் என்று என்ன செய்கிறார்கள் ?
கன்றுக்கு விடாமல் ஒட்ட கறந்து விடுகிறார்கள்.
நீண்ட நாள் பால் தர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசி போடுகிறார்கள்.
பால் மடி வற்றி விட்டால், அடி மாட்டுக்கு விற்று விடுகிறார்கள்.
உயிர்கள் மேல் அன்பு போய் விட்டது.
இயற்கை மேல் அன்பு போய் விட்டது.
சக மனிதர்கள் மேல் அன்பு போய் விட்டது.
காரணம் என்ன ?
பலன். பெரிய பலன். மேலும் பலன்...என்ற பேராசை.
நோயாளி வந்தால், அவரின் நோயை எப்படி குணப்படுத்துவது, வலியில் இருந்து அவருக்கு எப்படி விடுதலை தருவது, எப்படி சீக்கிரம் குணப்படுத்துவது என்று யோசிக்க வேண்டும்.
மாணவனை எப்படி உயர்ந்த படித்த பண்பாளனாக மாற்றுவது என்று ஆசிரியர் சிந்திக்க வேண்டும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பலனில் மனம் போனதால் நாடு சீரழிந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு துறையும் சீரழிகிறது.
நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் பணத்தின் முன் (பலன்) அடிபட்டுப் போகிறது.
இப்போது சொல்லுங்கள், இது நடைமுறைக்கு ஒவ்வாத ஸ்லோகமா என்று.
நீங்க சொல்றது எல்லாம் சரிதான். இருந்தாலும், என்னவோ மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே ....என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம் என்று நாளை சிந்திப்போமா ?
பாகம் 3
பாகம் 2 :
பாகம் 1:
No comments:
Post a Comment