பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 2
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥
கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||
கர்மணி = வேலை செய்வதில்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.
கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது.
(முதல் பாகம் கீழே இருக்கிறது. Scroll down )
கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
ஒரு வீடும், சமுதாயமும், நாடும், உலகும் முன்னேற வேண்டும் என்றால், எல்லோரும் தங்கள் சுயநலத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்.
எனக்கு என்ன கிடைக்கும், எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று எதிலும் கணக்கு போட்டுக் கொண்டிருந்தால், வீடு, நாடு, உலகம் உயராது. வீடும், நாடும், உலகும் உயரவில்லை என்றால், அதில் உள்ள நாமும் உயர முடியாது.
ஒரு தாய், பிள்ளை வளர்க்கும் கடமையைச் செய்கிறாள். இதில் எனக்கு என்ன கிடைக்கும், இந்த பிள்ளைக்கு பால் ஊட்டுவதன் மூலம் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று அவள் ஒரு நொடி கூட யோசிப்பது கிடையாது.
ஐயோ என் பிள்ளைக்கு பசிக்கிறதே என்று பால் தருகிறாள். அது உண்டு, திருப்தியாக உறங்குவதைக் கண்டு அவள் மகிழ்கிறாள். அவளுக்கு கிடைத்தது என்ன? ஒன்றும் இல்லை.
அதே போல், கணவனும் கடுமையாக உழைக்கிறான். பல சங்கடங்களை பொறுத்துக் கொள்கிறான். பல அவமானங்களை ஏற்றுக் கொள்கிறான். எதற்கு? தன் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று. அவனுக்கு என்ன பலன் அதில் என்றால், ஒன்றும் இல்லை. நாளை பிள்ளைகள் படித்து முடித்து, திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள்.
அது சரி, இங்கே, என் பிள்ளை, என் குடும்பம் என்று வருகிறது. அதில் நான் பலன் எதிர்பார்க்காமல் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்காக நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் அப்படியே இருக்க முடியுமா ?
முடியும். முடிய வேண்டும்.
எப்படி என்றால்....
குடும்பத்துக்காக நாம் செய்வது குடும்பத்தின் மேல் உள்ள அன்பினால். கருணையால்.
அந்த அன்பும் கருணையும் கொஞ்சம் அப்படியே சமுதாயத்தின் மேலும் திருப்பினால், இது என் சமூகம், என் சமுதாயம், என் நாடு ...இது உயர நான் என் பங்களிப்பை தருவேன் என்று ஒவ்வொருவரும் முன் வந்தால்.....?
இந்த தலைமுறை மட்டும் அல்ல, இனி வரும் தலைமுறைகளும் செழித்து வளரும் அல்லவா?
மேலும்,
நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எதற்காக வேலை செய்கிறேன் என்றால், எனக்கு சம்பளம் வருகிறது எனவே வேலை செய்கிறேன் என்று சொல்லலாம். அது ஒரு வழி.
நான் வேலை செய்வதன் மூலம், பலருக்கு இந்த நிறுவனத்தில் வேலை நிலைக்கிறது, அவர்கள் குடும்பம் பிழைக்கிறது, இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மூலம் பலர் பலன் அடைவார்கள். நான் அவர்களின் நன்மைக்காகவும் வேலை செய்கிறேன் என்று நினைத்து செய்தால், சக ஊழியர்கள், அந்த நிறுவனத்தின் பொருள்களை வாங்குபவர்கள் என்று எல்லோர் நலனும் என் கண் முன் வந்து போகும். நான், எனக்காக மட்டும் வேலை செய்யவில்லை. ஒரு சமுதாய நோக்கத்துடன் வேலை செய்கிறேன் என்ற எண்ணம் வரும். அப்படி வந்தால், என் சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால், அது மட்டுமே முக்கியமாக இருக்காது.
நான் செய்யும் வேலையே மிக இனிதாக மாறிவிடும். நான் இந்த நிறுவனம் இலாபகரமாக செயல் பட உதவி செய்தால், இன்னும் பலருக்கு வேலை கிடைக்கும், இன்னும் பல பயனாளிகள் (consumers ) பலன் பெறுவார்கள் என்பது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும்.
தொழில் என்பது மாறி, தொண்டு என்பது வந்து விடும்.
எனக்கு பலன் கிடைக்காது என்று நினைத்தால், யார் ஒரு மாமரத்தையோ, புளிய மரத்தையோ நடுவார்கள். வரும் கால சந்ததி பயன் பெற வேண்டும் என்றும் நினைத்தால் தான் அது முடியும்.
இரண்டாவது தளம், தன்னைத் தாண்டிய ஒரு சமுதாய நோக்கு.
கட்டாயமாக கீதை சுயநலத்தை விடச் சொல்கிறது. கீதையின் நோக்கம், ஒரு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.அதற்கு கொஞ்சம் தியாகம் தேவை தான். சமுதாயம் உயராவிட்டால், அதில் உள்ள தனி மனிதன் உயரவே முடியாது.
சரி மாதிரித்தான் இருக்கிறது...இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் எப்படி வேலை செய்வது ...கொஞ்சம் எங்கேயோ இடிப்பது மாதிரி இருக்கிறதே...மூளைக்கு எட்டுகிறது, மனதுக்கு எட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா ?
மேலும் சிந்திப்போம்....நாளை சந்திப்போமா ?
------------------------------------------------------------இரண்டாம் பாகம் முற்றிற்று -----------------------
முதலாம் பாகம், கீழே
இது என்ன சுத்த போங்காக இருக்கிறதே.
வேலை செய்யணுமாம், அதன் பலனை எதிர் பார்க்கக் கூடாதாம். சரி, பலன் இல்லாத வேலையை ஏன் செய்ய வேண்டும் , பேசாமல் சும்மா இருக்கக் கூடாதா என்றால், அதுவும் கூடாதாம்.
சுத்த அழுகுணி ஆட்டமா இருக்கே என்று நாம் நினைப்போம்.
கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது. பொதுவாக யாரைக் கேட்டாலும், கீதை என்ன சொல்கிறது என்று கேட்டால், "கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே" என்று சொல்கிறது என்று இந்த ஸ்லோகத்தைத்தான் கீதையின் சாரமாகச் சொல்லுவார்கள்.
அது எப்படி முடியும்?
முனிவர்களும் கூட பலன் வேண்டித்தானே தவம் செய்கிறார்கள். யாகம் செய்கிறார்கள்.
பலன் இல்லாமல் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்?
இந்த ஸ்லோகத்தை இரண்டு தளங்களில் இருந்து நாம் அணுக வேண்டும்.
முதலாவாவது, ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால் நாம் அதில் இருந்து கிடைக்கும் பலனை எடை போடுகிறோம். நிறைய பலன் கிடைக்கும் என்றால், அந்த காரியத்தை செய்வோம். இல்லை என்றால், செய்ய மாட்டோம். இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்தால், ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் தருவார்கள், இன்னொரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள் என்றால், நாம் பத்தாயிரம் தரும் நிறுவனத்துக்குத்தான் வேலைக்குப் போவோம். இல்லையா.
சரி, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தருகிறேன் என்றால் போவோமா? மாட்டோம். ஐயோ, அது என்ன மாதிரி வேலையோ. நம்மால் முடியாது என்று ஒதுங்கி விடுவோம்.
சில பேர் சொல்லலாம், இல்லை இல்லை நான் போவேன் என்று.
நிறைய மாணவர்கள், CA , IIT, IAS எல்லாம் எழுதப் போவது கிடையாது. ஏன்? ஐயோ, மூணு வருஷம் CA படிச்சு , பாஸ் பண்ணாவிட்டால் என்ன ஆகும் வாழ்க்கை என்று பயந்து முயற்சி செய்வது கிடையாது.
ஒரு நிறுவனத்தை நடத்துபவர், சில கோடி முதல் போட்டால் பெரிய அளவில் வரலாம். நட்டம் வந்து விட்டால் என்ன செய்வது என்று பணத்தைப் போடாமல் நிறுவனத்தை சின்னதாகவே வைத்துக் கொண்டு இருப்பார்.
பலனில் மனம் போனால், அது கிடைக்காதோ என்ற பயமும் வரும். எனவே, நாம் பெரிய முயற்சிகள் எதையும் செய்வது இல்லை. ஏன் என்றால், அவ்வளவு முயற்சி செய்து, பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, வேலை செய்யாமலேயே விட்டு விடுவோம்.
புது முயற்சிகள், புது அனுபவங்கள், பெரிய முயற்சிகள், புதிதாக எதையும் கற்றுக் கொள்வது என்று எதுவும் இல்லாமல், பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம் என்று பல கோடி பேரின் வாழ்க்கை அப்படியே போய் விடுகிறது.
பெரிய முயற்சிகள் செய்து, அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும், அந்த முயற்சி உங்களை பெரிய அளவில் மேலே கொண்டு போய் விடும்.
உதாரணமாக, நான் மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் நினைக்கிறேன்.
இத்தனை வயதுக்கு மேல், அதெல்லாம் நடக்காது என்று பலன் மேல் நாட்டம் போனால், நான் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டேன்.
அதற்கு மாறாக, முடியுதோ இல்லையோ, நான் முயற்சி செய்வேன் என்று பலனை நினைக்காமல் பயிற்சியை தொடங்கினால் இரண்டில் ஒன்று நிகழும்.
ஒன்று, நான் மாரத்தான் ஓடி, அதை சாதித்து இருப்பேன்.
அல்லது, ஓட முடியாமல் போகலாம். ஆனால், அந்த ஓடும் பயிற்சியில், என் உடல் வலிமை பெற்று இருக்கும், நீண்ட நாட்களுக்கு நோய் வராது, முட்டு வலி வராது, காலையில் எழுந்து ஓடும் ஒரு ஒழுக்கம் வந்திருக்கும், சர்க்கரை வியாதி போன்றவை கிட்டத்தில் கூட வராது. மாரத்தான் ஓட முடியாவிட்டாலும், இது போன்ற பல பலன்கள் நிச்சயமாக எனக்கு கிடைக்கும் அல்லவா.
பதக்கம் வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தால் , போன வரும் பதக்கம் வாங்கியவன் 2 மணி நேரத்தில் ஓடினான். என்னால் முடியாது என்று முதலிலேயே மூட்டை கட்டி வைத்து விடுவேன் அல்லவா.
பலன் மேல் மனம் போனால், பெரிய முயற்சிகள் குன்றும்.
இது ஒரு தளம்.
அடுத்த தளம் என்ன என்று நாளை சிந்திப்போமா ?
https://bhagavatgita.blogspot.com/2019/07/247.html
Good Message for Life Ambition.
ReplyDeleteThiyagarajan
Good
ReplyDelete