பகவத் கீதை - 2.49 - புத்தியை சரண்டை
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः॥४९॥
தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||
தூ³ரேண = ரொம்ப தூரத்தில்
ஹை = நிச்சயமாக
அவரம் = தாழ்ந்தது
கர்ம = கர்மம், வினை, தொழில்
புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து
தநஞ்ஜய = தனஞ்சய
புத்தௌ = புத்தியை
ஸரணம் = சரணம்
அந்விச்ச = அடை
க்ருபணா: = லோபிகள்
பல = பலனை
ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்
அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை. புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள்.
பெரும்பாலானோருக்கு இது ஒண்ணுதான் இந்த கீதையில் பிடிக்காத விஷயம். பலனை எதிர்பார்க்காதே என்று சொன்னால், "அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் இல்லை" என்று கீதையை மூட்டை கட்டி வைத்து விடுவார்கள்.
நான் ஒரு பெரிய நிறுவனத்தில், நிதி சார்ந்த வேலைகளுக்கு (finance department ) பொறுப்பளானாக இருந்தேன்.
நான் ஏன் அந்த வேலையை செய்தேன்?
எனக்கு சம்பளம் வரும், ஊக்கத் தொகை வரும், பதவி உயர்வு வரும் என்று நினைத்துச் செய்யவில்லை.
இப்படி இந்த நிறுவனத்தை மேலும் முன்னேற்றலாம், இந்த நிறுவனத்தின் இலாபத்தை எப்படி இன்னும் அதிகரிக்கலாம், இன்னும் நிறைய பேருக்கு எப்படி இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்று தான் நாளும் சிந்திப்பேன்.
எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு சம்பளம், போனஸ், பதவி உயர்வு என்று எண்ணி வேலை செய்வது ஒரு வழி.
நாம் வேலை செய்யும் நிறுவனத்தை எப்படி மேலும் உயர்த்தலாம், அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்படி மேலும் நல்லது செய்யலாம் என்று நினைப்பது இன்னொரு வழி.
கீதை இரண்டாவது வழியை சொல்கிறது.
பலனுக்காக (சம்பளம், போனஸ்) என்று வேலை செய்யாதே என்று சொல்லவில்லை. அப்படி செய்வது முதலாவது வழியை விட மிக தாழ்ந்தது என்று சொல்கிறது.
சுய இலாபம் என்று வந்து விட்டதால், என்ன நடக்கிறது?
இலஞ்சம், ஏமாற்றுதல், கலப்படம், பொய் சொல்வது, என்று அனைத்து விதமான தவறான வழிகளும் வந்து விடுகின்றன.
ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக வேலை செய்யும் போது , பணம் வருவது மட்டும் அல்ல , அது நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஒரு மருத்துவர், தனக்கு எவ்வளவு பணம் வரும் என்று வைத்தியம் செய்ய ஆரம்பித்ததன் விளைவுகளை நாம் காண்கிறோம். தேவை இல்லாத அறுவை சிகிச்சைகள், சோதனைகள், மருந்து மாத்திரைகள் என்று நோயாளியை மருத்துவரே கொல்லும் நிலைக்கு வந்து விட்டது.
ஒரு ஆசிரியர் சொந்த இலாபம் கருதி தொழில் செய்யத் தொடங்கினால் என்ன ஆகிறது? tuition, வினாத் தாளை பணத்துக்கு விற்பது, பணம் வாங்கிக் கொண்டு மார்க் போடுவது என்று ஆகி விடுகிறது. அப்படி பட்ட ஆசிரியரிடம் படித்த மாணவன் சமுதாயத்துக்குள் வந்து எப்படி வேலை செய்வான்?
தலைமுறைகளே சீரழிந்து விடும்.
எந்த தொழிலிலும் இரண்டு சாத்திய கூறுகள் உண்டு.
ஒன்று சுய இலாபம்.
இரண்டாவது, உயர்ந்த நோக்கம், குறிக்கோள்.
அர்ஜுனனின் சிக்கல் என்ன? குரு , மாமன், மச்சான், உறவினர்களை கொல்லும் போர் வேண்டாம் என்று நினைக்கிறான்.
போர் என்றால், மனிதர்களை கொல்வது என்று அவன் நினைக்கிறான். அதனால் வரும் துக்கத்தை தவிர்க்க நினைக்கிறான்.
அது முதலாவது வழி.
போர் என்றால் நீதி, நியாயம், தர்மம், இவற்றை நிலை நிறுத்துவது. அதற்காக எவ்வளவு இன்னல் வந்தாலும் ஏற்றுக் கொள்வது என்று நினைப்பது இரண்டாவது வழி. கீதை காட்டும் வழி.
சுய இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தால் உலகம் இருண்டு விடும். இருண்டு கொண்டு இருக்கிறது.
அந்தப் பேரழிவில் இருந்து உலகையும், மக்களையும் காக்க வேண்டும் என்றால், கீதை காட்டும் வழியில் போவதைத் தவிர வேறு வழி இல்லை.
https://bhagavatgita.blogspot.com/2019/11/249.html
No comments:
Post a Comment