Thursday, November 28, 2019

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை

பகவத் கீதை - 2.50 - யோகம், செயல்களின் திறமை 




बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥

பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||


பு³த்³தி⁴ = புத்தி

யுக்தோ = இணைந்து, சேர்ந்து

ஜஹாதி = விட்டு விட்டு , விலகி

இஹ = இங்கு

உபே =  இரண்டும்

ஸுக்ருத = நல்லதும்

துஷ்க்ருதே= தீயதும்

தஸ்மாத் = எனவே

யோகா³ய = யோகத்தின் மூலம்

யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து

யோக³: = யோகம்

கர்மஸு = கர்ம வினைகளின்

கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||


புத்தி உள்ளவன் இந்த நல்ல மற்றும் தீய செயல்களில் இருந்து விலகி நிற்கிறான், அல்லது துறந்து விடுகிறான். எனவே, நீ யோக நிலையில் நில். யோகம் என்பது செயல்களின் திறமையான வெளிப்பாடு. 


நாம் ஏன் எந்த ஒரு காரியத்தையும் செய்கிறோம்?

ஒன்று பயம். செய்யாவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமோ என்ற பயம். கணவன்/மனைவி/பெற்றோர்/ஆசிரியர்/உயர் அதிகாரி/அரசாங்கம்/காவல் துறை/ சமுதாயம் என்று ஆயிரம் பேர் நம்மை சுற்றி நின்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பயத்தினால் செய்கிறோம்.

அல்லது

இரண்டாவது, ஆசை.  ஒன்றைச் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மேல் ஆசை.  பாராட்டு, பதவி உயர்வு, சம்பளம், என்று எதோ ஒன்றின் மேல் ஆசைப்பட்டு செய்கிறோம்.

இன்னும் கூட வேறு காரணங்கள் இருக்கலாம்...கோபம், பொறாமை, என்று.

காரணம் எதுவாக இருந்தாலும், நம் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்குக்  காரணம் நம்முடைய முந்தைய அனுபவங்கள்.

முன்னால் இப்படி செய்த்ததால், இது விளந்தைது. நல்லது என்றால் அதை மீண்டும் செய்வோம், அல்லது என்றால் அதை விட்டு விடுவோம்.

இதைத்தான் "வாசனை" என்கிறார்கள்.

ஒரு பூவை கையில் கொஞ்ச நேரம் வைத்து இருந்துவிட்டு, பின் கீழே வைத்த பின்னும், அந்த வாசனை தொடர்ந்து கொண்டே இருக்கும் அல்லவா. இப்போது கையில்  பூ இல்லை. இருந்தும் வாசனை இருக்கிறது.

நல்லது, கெட்டது , உயர்ந்தது, தாழ்ந்தது, போன்ற எண்ணங்கள் எல்லாம் முன் அனுபவத்தால் வருகிறது.

பயம், ஆசை, கோபம், பொறாமை, நடுக்கம், பாசம் எல்லாம் முன் அனுபவ வாசனை.

கீதை சொல்கிறது, "இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, அறிவு பூர்வமாக, புத்தியை செலவழித்து காரியம் செய்" என்கிறது.

கொஞ்சம் உதாரணம் பார்ப்போம் .

ஒரு வீடு வாங்க, கார் வாங்க, சம்பந்தம் பேச என்று வந்தால், நாம் அதிகம் உணர்ச்சி வசப் படுவோம்.

எப்படியாவது அந்த வீட்டை வாங்கி விட வேண்டும்.

நல்ல சம்பந்தம், இதை விட்டு விடக் கூடாது.

ஐயோ, இப்ப வாங்கவிட்டால் பின்னால் விலை ஏறி விட்டால் (பயம்) என்ன செய்வது.

உணர்ச்சிகள் அதிகமாகும் போது, ஒரு படபடப்பு உண்டாகிறது. தவிப்பு உண்டாகிறது.

உணர்ச்சி மேலீட்டால், முடிவு தவறாகும். முடிவு தவறானால், காரியம் தவறாகும்.

"நன்மை தீமையை விட்டு விட்டு" என்று கீதை சொல்வது உணர்வு பூர்வமாக எதையும் அணுகாமல் அறிவு பூர்வமாக செயல்படு என்கிறது.

புத்தியை உபயோகித்து செய்யும் செயலே உன்னத செயலாகும் என்கிறது.


களத்துக்கு வருவோம்.

அர்ஜுனனின் எதிரில் மாமா, தாத்தா, குரு, பங்காளிகள் என்று எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களை கொல்வதா என்று "உணர்ச்சி" வசப்படுகிறான்.  எது சரி, தவறு என்பதை விட்டு விட்டு, உணர்வுகளுக்கு அடிமையாகி கடமையை செய்யாமல்  ஓட நினைக்கிறான்.

உறவினர்களை கொல்வது மட்டும் அல்ல,  எதையும் உணர்வு பூர்வமாக அணுகினால்  அது தவறாகத்தான் இருக்கும்.

எனவே, புத்தியை பயன்படுத்து என்கிறான் கண்ணன்.

புத்தியையும் செயலையும் இணைப்பது யோகம். அதுவே செயல்களில் சிறந்தது என்கிறது கீதை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


https://bhagavatgita.blogspot.com/2019/11/250.html

No comments:

Post a Comment