பகவத் கீதை - 2.26 - அப்போதும் வருந்தல் ஆகாது
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि॥२६॥
அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||
அத = அது மட்டும் அல்ல
ச = மேலும்
ஏனம் = இது
நித்யஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது
நித்யம் = எப்போதும்
வா = அல்லது
மந்யஸே = நீ நினைத்தால்
ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது
ததா = அப்படியே இருந்தாலும்
அபி = அதனால்
த்வம் = நீ
மஹாபா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே
ந = இல்லை
ஏனம் = இது
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹசி = நீ தகாது
அது மட்டும் அல்லாமல், நீண்ட கைகளை கொண்டவனே, இது எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது இறந்து கொண்டே இருக்கிறது என்று நீ நினைத்தாலும், அதற்காக நீ வருத்தப் பட வேண்டியதில்லை.
ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது ஒரு தத்துவம், கோட்பாடு, உண்மை என்று முந்தைய சுலோகங்களில் பார்த்தோம்.
சரி, கோட்பாடு, அறிவு, உண்மை என்று வைத்துக் கொண்டாலும், எது உண்மை ? எந்த கோட்பாட்டை நாம் பின் பற்றுவது? இன்று ஒன்று சரி என்று படுகிறது. கொஞ்ச நாளில் அது மாறி விடுகிறது. சரி என்று நாம் நினைத்தது தவறு என்று ஆகி விடுகிறது.
மாமிசம் உண்ணலாமா ? மது அருந்தலாமா ? பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?
சில சமயம் சில தத்துவங்கள் சரி என்று சொல்கிறார்கள். பின் அவை மறைந்து போய் வேறு ஒரு புது தத்துவம் பிறக்கிறது.
அறிவு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படி வளரும் போது , பழையன கழிதலும், புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
ஒரே சித்தாந்ததை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது.
நேற்று வரை உறவு முக்கியம், அது பெரிய விஷயம் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தாய். அது சரியும் கூட. ஆனால் இன்று, உறவா கடமையா என்று வந்து நிற்கும் போது, உறவு பாசம் என்று குழம்பாதே. அந்தத் தத்துவம் மறைய வேண்டும்.
நம்மில் வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நாம் பழைய சிந்தனைகளை விடுத்து வளர மறுப்பது தான்.
நடை முறையில் யோசித்துப் பார்ப்போம்.
பிள்ளை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான் / ள். எத்தனை பெற்றோர்களால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது ?
சரி, காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?
பிள்ளை என்றால் இப்படி இருக்க வேண்டும், கணவன் என்றால் இப்படி, மனைவி என்றால் இப்படி என்று பல கோட்பாடுகளை நாம் வைத்து இருக்கிறோம்.
வைத்து இருப்பதில் தவறில்லை. ஆனால், அந்த கோட்பாடுகளும் நடை முறையும் முரண்படும்போது கோட்பாடுகளை மீண்டும் ஒரு முறை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.
கண்ணன் சொல்கிறான் , "இவை பிறந்து கொண்டே இருந்தாலும், இறந்து கொண்டே இருந்தாலும், நீ அதற்காக கவலைப் படாதே " என்று.
உன்னை மாற்றிக் கொள். அறிவும், சிந்தனைகளும், தத்துவங்களும் மாறிக் கொண்டே இருக்கும்.
அறிவு வளரும் போது புது சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கும். பழைய சிந்தனைகள் மறைந்து கொண்டே இருக்கும்.
இப்போது கூடப் பாருங்கள், ஆத்மா என்பதற்கு நான் சொல்லும் விளக்கம் வேறு விதமாக இருக்கிறது. இது ஒரு புது சிந்தனை. இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். காரணம் என்ன ? இது தவறு என்பதால் அல்ல. இது நீங்கள் இதுவரை நினைத்துக் கொண்டிருந்த ஒன்றில் இருந்து வேறு படுகிறது. இதை ஏற்றுக் கொண்டால் , இது வரை சரி என்று நினைத்ததை , சரி அல்ல என்று முடிவு செய்ய வேண்டி வரும். அப்படி செய்யும் போது, ஒரு கவலை பிறக்கும். அடடா, இத்தனை ஒரு தவறான ஒரு சிந்தனையிலா நான் இருந்தேன். இருக்காது. நான் எப்படி தவறு செய்ய முடியும் ? என்று நினைக்கத் தொடங்குவீர்கள்.
குழப்பம் வரும். இது சரி போலவும் இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டால் இத்தனை நாள் செய்தது நினைத்தது தவறு என்று ஆகும். என்ன செய்வது ?
கண்ணன் சொல்கிறான், "அதற்காக நீ வருந்தாதே" என்று.
புது சிந்தனைகளை, தத்துவங்களை, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
மரண பயம் என்பது என்ன ? பழையனவற்றை விட வேண்டி இருக்குமே என்ற பயம். இறந்த காலத்தில் வாழவே நாம் விரும்புகிறோம்.
ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டே இருந்தால், ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டே இருப்போம்.
பழையது இறக்காமல் புதியது பிறக்காது.
இரண்டும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?
வாருங்கள், விட்டு விடுதலையாகி அந்த சிட்டுக் குருவியைப் போல சிறகடித்துப் பறப்போம்.
வானில் பறக்க வேண்டும் என்றால், பூமியை விடத்தான் வேண்டும்.
https://bhagavatgita.blogspot.com/2018/11/226.html
No comments:
Post a Comment