Sunday, November 11, 2018

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம்

பகவத் கீதை - 2.29 - ஆச்சரியம் 


आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்

பஸ்²யதி = பார்ப்பவன்

கஸ்²சித் = எவனோ

ஏனம் = அவன்

ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்

வத³தி= பேசுபவன்

ததா = அதைப் போல

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

அந்ய: = மற்றவன்

ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்

ச = மேலும்

ஏனம் = அவன்

அந்ய: = மற்றவன்

ஸ்²ருணோதி = கேட்பவன்

ஸ்²ருத்வா = கேட்டபின்

அபி = மேலும்

ஏனம் = அவன்

வேத = அறிந்தவன்

ந = இல்லை

ச = மேலும்

கஸ்²சித் = யாரோ ஒருவன்

இதை ஆச்சரியம் என்று ஒருவன் காண்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் கேட்டபின் சொல்கிறான். ஆச்சரியம் என்று ஒருவன் பேசுகிறான்.  இருந்தும் இதை எவனும் அறியவில்லை. 


காண்கிறான் - கேட்கிறான் - பேசுகிறான்...இந்த மூவரும் ஆச்சரியம் அடைகிறார்கள்.

ஏன் ?

காண்பதும், கேட்பதும், பேசுவதும் புலன்கள் மூலம் நிகழ்வன. உண்மை என்பது புலன்களுக்கு அப்பாற்பட்டது. காண்பதும், கேட்பதும் நிகழும் போது என்ன நடக்கிறது. நாம் ஒன்றைப் பார்க்கிறோம். அது பற்றிய செய்தி நம் மூளைக்குப் போகிறது. மூளை அது என்ன என்று ஆராய்கிறது. இது பற்றிய செய்தி மூளைக்குள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. இருந்தால், "ஹா...இது அது தான் " என்று செய்தி சொல்கிறது.

ஒரு லட்டு இருக்கிறது. அதைப் பார்க்கிறோம். லட்டின் நிறம், அளவு எல்லாம் மூளைக்குள் சென்று, இதற்கு முன்னால் லட்டைப் பத்திய செய்தியோடு ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது காண்பது லட்டு என்று சொல்கிறது. ஒரு வேளை இதற்கு முன் பார்க்காத ஒன்றாக இருந்தால் என்ன செய்யும் ? "என்னடா இது , புதுசா இருக்கே. இதுக்கு முன்னால் இப்படி ஒன்றை பார்த்ததே இல்லையே ..என்னவாக இருக்கும் " என்று ஆச்சரியப் படும்.

நாம் ஒரு உண்மையை எதிர் கொண்டால் என்ன செய்வோம் ?

நாம் நம்பும்  செய்திகளோடு அது ஒத்துப் போனால் அதை ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால், "அதெல்லாம் இல்லை, அது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று வாதிடுவோம்.  நம் அனுபவத்தில் அறியாத புதிய ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

உதாரணமாக, நீங்கள் கடவுளை நம்புபவர் என்று வைத்துக் கொள்வோம்.  "கடவுள்  இல்லை" என்று ஒரு கருத்தை உங்கள் முன் வைத்தால் "அட , இது என்ன புது கருத்தாக இருக்கிறதே. மேலே சொல்லுங்கள். ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள் " என்று ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் கேட்பது இல்லை.

"அது எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம். அப்படி என்றால் இந்த உலகைப் படைத்தது யார்" என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போக தயாராவார்கள் அல்லவா.

அப்படி இருந்தால் உண்மையை எங்கனம் அறிவீர்கள்.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

புதிது புதிதாக கருத்துகளை   எதிர் கொள்ளுங்கள். அவற்றைப் பற்றி சிந்தியுங்கள்.

அர்ஜுனனின் சிக்கல் என்ன ?

உறவினர்களை கொல்லக் கூடாது. அவர்கள் இறந்தால் இவன் வருத்தப் படுவான்  என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப் படிந்து விட்டது.

அது தவறாக இருக்கலாம் என்று கூட அவன் சிந்திக்கத் தயாராக இல்லை.

உறவு என்றால் என்ன,  எப்போது உறவுகளோடு முரண் படலாம் என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கவில்லை.

பழைய எண்ணங்களிலேயே உழல்கிறான்.

இங்கே உறவுகளை கொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

உண்மை என்ற ஒன்றை அறிய முற்பட்டுவிட்டால் உறவை தள்ளி வைத்து விட வேண்டும். ஆசா பாசாங்களுக்கு இடம் கொடுக்கக் கூடுவது.

இதில் என்னதான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு, ஆச்சரியத்தோடு அணுக வேண்டும்.

இல்லை என்றால், பழைய எண்ணங்களிலேயே கிடந்து உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான். அது நம்மை முடக்கிப் போட்டு விடும்.

மனச் சோர்வு வரும் போதெல்லாம், புதிதாக சிந்திக்க வேண்டும். வேறு என்ன செய்யலாம், வேறு எப்படி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/229.html


1 comment: