Thursday, November 8, 2018

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை

பகவத் கீதை - 2.28 - தெளிவில்லை 





अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना॥२८॥

அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||


அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது

பூதாநி = உயிர்கள்

வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது

பா⁴ரத = பாரதா


அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது

யேவ = நிச்சயமாக

தத்ர = இதில்

கா = ஏன்

பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்



அதன் ஆரம்பம் வெளிப்படாதது. அதன் நடு வெளிப்பட்டது. அதன் முடிவு வெளிப்படாதது. இதில் நீ ஏன் வருந்துகிறாய் ?


மிக அற்புதமான சுலோகம். மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

அது என்ன வெளிப்படாதது, வெளிப்படுவது?

நம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. நல்லதும் நிகழ்கிறது. நல்லது அல்லாததும் நிகழ்கிறது.

ஏன் நிகழ்கிறது என்று நமக்குத் தெரியுமா ?

விளைவுகள் தெரிகிறது. காரணம் தெரிவதில்லை.

ஆனால், ஒவ்வொரு விளைவிக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நமக்குத் தெரியும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

சில விஷயங்களுக்கு காரணம் தெரியும். அந்தக் காரணத்தால் வந்த விளைவும் தெரியும்.

அதிகமாக உண்டால் சோர்வு வரும். தூக்கம் வரும் என்று தெரியும்.

அது சின்ன விஷயம்.

நாம் ஏன் பிறந்தோம், ஏன் இங்கு பிறந்தோம், ஏன் இந்தத் திருமணம், இந்தக் குழந்தைகள் ...இப்படி ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாது.

துன்பம் வரும் போது ஏன் இப்படி நிகழ்கிறது என்று தெரியாமல் குழம்புவோம்.

இன்பம் வரும் போது அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

சரி, இன்று இப்படி இருக்கிறது.

நாளை என்ன என்று நமக்குத் தெரியுமா ? அதுவும் தெரியாது.

இன்று நடப்பவற்றின் காரணம் தெரியாது. நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.  நடுவில் இருந்து கொண்டு என்ன கவலை?

இதைத்தான் இந்த சுலோகம் சொல்கிறது.

அது முதலில் வெளிப்படாமல் இருந்தது, பின் வெளிப்பட்டது. பின் மீண்டும் வெளிப்படாமல்  போனது.

இந்த உலகம் என்பது ஒரு தொடர் அலை போல (flux) இருந்து கொண்டே இருக்கிறது.

ஆரம்பமும் தெரியாது. முடிவும் தெரியாது. நடுவில் ஒரு நாடகம் நடக்கிறது.

அது சரி, அதற்காக கவலைப் பட வேண்டிய விஷயத்துக்கு கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

நாம் கவலைப் பட்டாலும், கவலைப் படாவிட்டாலும் நடப்பது நடந்து கொண்டு தான் இருக்கும். கவலைப் படுவது சுகம் என்றால் கவலைப் படலாம்.  சிலருக்கு கவலைப் பட்டால் ஏதோ காரியம் சாதித்த மாதிரி. கவலைப் பட்டே தளர்ந்து போய் விடுவார்கள். எனக்குத் தான் எவ்வளவு கவலை என்று சுய பச்சாதாபம் கொள்வார்கள். மற்றவர்கள் தங்களை பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். கவலைப் பட்டுக் கொண்டே காரியம் செய்யாமல் இருந்து விடுவார்கள்.

கீதை சொல்கிறது. "நீ கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை. வில்லை கையில் எடு. உன் கடமையைச் செய்" என்கிறது.

ஆனானப்பட்ட அர்ஜுனனேயே கவலை முடக்கி தேரில் உட்கார வைத்து விடுகிறது. அவ்வளவு ஆற்றலையும் வற்றச் செய்து, பலம் இழக்கச் செய்து விடுகிறது.

நாம் எம்மாத்திரம்.

கீதை சொல்லிறது. கவலைப் பட்டு ஒன்றும் ஆகாது. உலகத்தில் உள்ள அனைத்து கவலைகளும் ஒரே மருந்து கடமை என்ற ஒரு சொல்.

நாளை என்ன ஆகும் என்று தெரியாது. நம் கடமையை இன்று ஒழுங்காகச் செய்வோம்.

எல்லோரும் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தால், இந்த உலகம் எப்படி இருக்கும்?

அதுவே கீதை காட்டும் வழி.

மேலும் அந்த வழியில்  நடப்போம்.

https://bhagavatgita.blogspot.com/2018/11/228.html

No comments:

Post a Comment