Sunday, November 4, 2018

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ்

பகவத் கீதை - 2.27 - இயற்கையோடு சேர்ந்து வாழ் 


जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||

ஜாதஸ்ய = பிறந்தவன்

ஹி = அதனால்

த்⁴ருவோ = நிச்சயமாக

ம்ருத்யுர் = இறப்பதும்

த்⁴ருவம் = நிச்சயம்

ஜந்ம = பிறப்பும்

ம்ருதஸ்ய = இறந்தவனும்

ச| = மேலும்


தஸ்மாத³ = அதனால்

அபரிஹார்யே = தவிர்க்க முடியாது

அர்தே = உண்மையில்

ந = இல்லை

த்வம் = நீ

ஸோ²சிதும் = வருந்துதல்

அர்ஹஸி = தகாது


பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 

என்றாவது மூக்கு வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் வருந்தியது உண்டா ?

என்றாவது நாம் பறவைகள் போல பறக்க முடியவில்லையே என்று மனம் வருந்தியது உண்டா ?


அப்படி யாரவது வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தால், அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ? ஏதோ மன நிலை சரி இல்லாதவர் என்று தானே நினைப்பீர்கள்?

ஏன் அப்படி நினைகிறீர்கள் ?

ஏன் என்றால் மூக்கால் சாப்பிடுவதும், பறப்பதும் இயற்கைக்கு முரணான செயல்கள். இயற்கைக்கு முரணாக எதுவும் செய்ய முடியாது. அப்படி இயற்கையை மீறி செய்ய முடியவில்லையே என்று வருந்துவது முட்டாள்தனம் தானே?

யோசித்துப் பாருங்கள். உங்களின் எத்தனையோ வருந்தங்கள் இந்த வகையில் சேரும் என்று.

நெருங்கியவர் இறந்து விட்டார். இறப்பு என்பது இயற்கை அல்லவா?

உடம்பு சரி இல்லை. உடம்புக்கு நோய் வருவது இயற்கை இல்லையா? நோயே இல்லாத மனிதன் எங்கவாது உண்டா ?

உறவுகளில் சிக்கல். பணக் கஷ்டம். தொழிலில் தொய்வு. ஏமாற்றம். தேர்வில் தோல்வி....இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவை எல்லாம் இயற்கை அல்லவா? வாழ்கை என்றால் எல்லாம் தான் இருக்கும்.

நடக்க முடியாதது நடக்காது. எது நடக்கிறதோ அது இயற்கையானது.

இதற்காக எதற்காக வருந்துவது?

கீதையில், கண்ணன் சொன்னது இறப்பு பற்றி மட்டும் தான். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா ? நாம் தான் விரித்து பொருள் கொள்ள வேண்டும்.

சரி அதற்காக துன்பம் வந்தால் அதற்கு வருந்தாமல் இருக்க முடியுமா ? காலில் அடி பட்டால் வலிக்கத்தானே செய்கிறது. அது இயற்கை என்று வருந்தாமல் இருக்க முடியுமா?

வலி வேறு. வருத்தம் வேறு.

வலி உடல் சார்ந்தது. வருத்தம் மனம் சார்ந்தது.

வலிக்கும் தான். அதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும். மருந்து சாப்பிட வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஐயோ, காலில் அடி பட்டு விட்டதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. ஏன் இப்படி நிகழ்த்து. இதற்கு யார் காரணம். யார் மேல் கோவிக்கலாம். இனி மேல் இந்த சாலையில் வரவே கூடாது என்று மனதை போட்டுக் குழப்பிக் கொள்வது, வருந்துவது சரியா?

துன்பமோ, வலியோ, வந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். மாறாக , துன்பத்தில் வருந்தி துவண்டு போய் உட்கார்ந்து விடக் கூடாது.

அர்ஜுனன் இன்னும் போர் தொடங்கக் கூட இல்லை. யாரும் இறக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. அதற்குள் வருந்தி செயல் இழந்து விட்டான்.

அவர்களை கொன்று விட்டால் அது பாவம் இல்லையா என்று வருந்தி செயல் இழந்து நிற்கிறான்.

இறப்பு என்பது இயற்கை. போராட்டம் என்பது இயற்கை. போராடத்தான் வேண்டும். அதில் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.

சரி. போராட வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். சந்தோஷமாக இருப்பானா? மீண்டும் காட்டுக்குப் போக வேண்டும். வாழ் நாள் பூராவும் துரியோதனன் சீண்டிக் கொண்டே இருப்பான். வலியும் வேதனையும் போகப் போவது இல்லை.

வலியையும் வேதனையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என்றால் போராடித்தான் தீர வேண்டும்.

அர்ஜுனனை போர் செய்யச் சொன்னது , துரியோதனை எதிர்த்து அல்ல. அர்ஜுனனின் வருத்தத்தை எதிர்த்து. அவனின் துன்பங்களை எதிர்த்து.

வாழ்வில் துன்பம் வரும். அது இயற்கை. அதை எதிர்த்துப் போராட வேண்டும். அதை கண்டு ஓடி விடக் கூடாது.

அது தான் கீதை சொல்லும் மந்திரம்.

துன்பம் என்பது இயற்கை. அதற்காக வருந்தாதீர்கள். அதை எதிர்த்து போராடுங்கள். அதை வெற்றி கொள்ளுங்கள். வாழ்கை இனிமையாக இருக்கும்.


மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் வாசித்துப் பாருங்கள்.

சரி என்று தோன்றுகிறதா?

https://bhagavatgita.blogspot.com/2018/11/227.html 

No comments:

Post a Comment