Tuesday, October 30, 2018

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி

பகவத் கீதை - 2.25 - வருந்தாமல் இருக்க வழி 


अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि॥२५॥

அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||


அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத

அயம் = அது

அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத

அயம் = அது

அவிகார்யோ = மாற்ற முடியாத

அயம் = அது

உச்யதே = சொல்லப் பட்டது

தஸ்மத்  = அதனால்

ஏவம் = எனவே

விதி³த்வ = அதை அறிந்த பின்

ஏனம் = அது

ந = இல்லை

அநுஸோ²சித் = அறிந்த பின்

அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்


சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய். 


முந்திய ஸ்லோகத்தில் ஆத்மா என்று சொல்லப் படுவது ஒரு பொருள், வாஸ்து அல்ல. அது ஒரு தத்துவம், உண்மை, சத்யம், அறம் என்று பார்த்தோம்.

அது சரிதானா ? இதுவரை நாம் நினைத்து வைத்திருந்தது எல்லாம் ஆத்மா என்றால் உயிர். அது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது. உடம்பு சட்டையை மாற்றுவது மாதிரி ஆத்மா உடலை மாற்றுகிறது என்று பார்த்தோம்.

அப்படித்தான் கீதையில் முன்னால் வந்த ஸ்லோகங்கள் பொருள் தந்தன.

ஆனால் இப்போது மாறுகிறது.

இப்படிச் செய்யலாமா ? இது வாசிப்பவனை குழப்பாதா ? முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னால் படிப்பவன் குழம்பி விட மாட்டானா ?

வேறு வழியில்லை.

அறிவு அப்படித்தான் வளர முடியும்.

சின்ன வயதில் , சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்று சொல்லித் தருவார்கள். பின், கொஞ்ச நாள் கழித்து, சூரியன் உதிப்பது இல்லை, பூமி சுற்றுவதால்  சூரியன் உதிப்பது மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லக் கூடாதா ? ஏன் முதலில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்லி  விட்டு பின், சூரியன் உதிப்பது இல்லை என்று முன்னுக்கு பின்  முரணாக சொல்ல வேண்டும் ?

முதலிலேயே பூமி தன்னைத் தானே சுற்றுகிறது, மேலும் பூமி சூரியனையும் சுற்றுகிறது  என்று மூன்று வயது பையனுக்குச் சொன்னால் தலை சுற்றி, புத்தகத்தை  தலையை சுற்றி எறிந்து விட்டு ஓடி விடுவான்.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிவை புகட்ட முடியும்.


இந்த சுலோகம் சொல்கிறது

சிந்தனைக்கு எட்டாதது. தெளிய முடியாதது. மாறுதல் இல்லாதது. இதனை அறிந்தால், நீ துன்பம் அடையாமல் இருப்பாய்.

என்று. 

ஆத்மா என்பது ஒரு பொருள் என்றால் அது எப்படி சிந்தனைக்கு எட்டாததாக இருக்க முடியும். அது எப்படி மாறுதல் அடையாமல் இருக்க முடியும். 

எனவே, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அது திடப் பொருளோ, திரவப் பொருளோ, வாயுப் பொருளோ அல்ல. 

அப்படி என்றால் அது என்ன ?

சிந்தனைக்கும் எட்டாது. அறிந்து தெளிய முடியாது. மாறாதது.

அது ஒரு சாசுவதமான தத்துவம் என்று வைத்துக் கொள்வோம். 

அனைத்து சித்தாந்தங்களும் நம் சிந்தனைக்கு எட்டுவது இல்லை. அனைத்து சித்தாந்தங்களும்  அறிந்து தெளிந்து கொள்ள முடிவதும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் , எந்த தத்துவமும் ஏதோ ஒரு சிக்கலை, குழப்பத்தை தெளிவிக்கவே வருகிறது. அப்படி பார்த்தால், ஒரு மிகச் சிறந்த தத்துவம் அல்லது உண்மை என்பது அனைத்து துன்பத்தையும் போக்க வல்லது தானே ?

எது உண்மை? எது பொய்? எதை நாம் கை கொள்வது? வாழ்க்கையின் நோக்கம் என்ன ? வாழ்க்கையின் பலன் என்ன ? 

இதை கேள்விகளுக்கு விடை சொல்லும் தத்துவமாக அது இருக்கலாம் அல்லவா ?

ஒரு வேளை இவற்றிற்கு விடை கிடைத்து விட்டால், நாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்து விடு படுவோம்?

சரி, இந்த உண்மை , தத்துவம் என்று சொல்கிறோமே அது மட்டும் மாறாமல் அப்படியே இருக்குமா ? எவ்வளவோ தத்துவங்கள் முதலில் உண்மை என்று இருந்தாலும் பின்  தவறு என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறதே. 

அப்படி என்றால் இந்த உண்மைகளை தத்துவங்களை நாம் எப்படி நம்புவது? எதை பின் பற்றி நம் வாழ்வின் சிக்கல்களை விடுவித்து இன்பமாக இருப்பது?

அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி கூறுகிறான் கண்ணன்.

https://bhagavatgita.blogspot.com/2018/10/225.html

No comments:

Post a Comment