Friday, October 5, 2018

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம்

பகவத் கீதை - 2.22 - உடை மாற்றம் 



वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||

வாஸாம்ஸி  - உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.

ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்

யதா = எவ்வாறு

விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ

நவாநி = புதிய

க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது

நரோ = மனிதன்

அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை

ததா = அது போல

ஸ²ரீராணி = உடல்

விஹாய = அனுபவம் தீர்ந்த பின்

ஜீர்ணாந் = பழையது ஆன பின்

அந்யாநி = மற்றது

ஸம்யாதி = அடைகிறது

நவாநி = புதிய

தே³ஹீ = உடலை உடைய அது


பழைய துணிகளை போட்டு விட்டு எப்படி உடல் வேறு புதிய துணிகளை அணிந்து கொள்கிறதோ அது போல அது இந்த உடலை மாற்றி வேறு உடலை ஏற்றுக் கொள்கிறது.

மிக மிக எளிமையான சுலோகம். அதிகமான இடங்களில் மேற் கோள் காட்டப்பட்ட  சுலோகம்.


நாம் ஒருவரை பார்க்கிறோம். அவரோடு பேசுகிறோம் என்றால் யாரோடு பேசுகிறோம்? அந்த மனிதரோடா அல்லது அவர் அணிந்திருக்கும் உடைகளோடா ?

அடடா, சட்டையே, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன் நிறம் மிக சிறப்பாக இருக்கிறது. நேர்த்தியாக நீ தைக்கப் பட்டிருக்கிறாய். இந்த pant க்கு நீ ரொம்ப பொறுத்தமாக இருக்கிறாய் என்று யாராவது நாம் அணிந்திருக்கும் துணிகளோடு பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் மரை கழண்டு விட்டதோ என்று நாம் நினைப்போம் அல்லவா?

அது போல, இந்த உடலை பார்த்துப் பேசினால் எப்படி இருக்கும் ?

உடம்புக்கு எப்படி இருக்கு? கொஞ்சம் எடை போட்டு இருக்கீங்க போல இருக்கு? முடி கொஞ்சம் நரைச்சு இருக்கு,  பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்று கேட்பதும் அப்படித்தான்.

ஏன்?

உடை முக்கியம் அல்ல. உடையை அணிந்திருக்கும் உடல் முக்கியம்.

உடல் முக்கியம் அல்ல, அதை தூக்கி சுமக்கும் உயிர் முக்கியம்.

நாம் எதோடு உறவு கொள்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உடையோடா? உடலோடா? உயிரோடா ?

உடை மாறும். உடல் மாறும். உயிர் மாறாது.

உடல் எப்படி உடையை மாற்றிக் கொள்கிறதோ, அது போல உயிர் உடலை மாற்றிக்  கொள்கிறது.

பழைய நைந்து போன அல்லது கிழிந்து போன சட்டைக்காக யாராவது பெரிதாக வருந்துவார்களா ? ஒரு சட்டை போனால், இன்னொன்று.

நைந்து போன உடலை வைத்துக் கொண்டு இந்த உயிர் என்ன செய்யும்?

கண் தெரியாது, காது கேக்காது, நடக்க முடியாது, மூச்சு விடுவதே சிரமம் என்று  இருக்கும் பழைய உடம்பால் யாருக்கு என்ன பயன்?

ஐயோ, இது நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது வாங்கிய சட்டை என்று அதை 40 வயதானபின் அணிய முடியுமா ?

அடுத்த முறை யாருடனாவது பேசும் போது ஒரு நிமிடம் நினையுங்கள், இவரின் இந்த உடலுக்கு பின்னால், இந்த தோற்றத்தின் பின்னால் ஒரு உயிர், ஒரு சக்தி இருக்கிறது என்று. அப்பப்ப நினைத்தால் பின்னாளில் அந்த எண்ணம் தொடர்ந்து வரும்.

நான் என்பதும், மற்றவர்கள் என்பதும் உடல் சார்ந்த ஒன்று அல்ல என்ற எண்ணம்  நிரந்தரமானால், பிறப்பும், இறப்பும், பிரிவும், சேர்தலும் புது அர்த்தம் பெறும்.

கீதை மேலும் இதை விளக்குகிறது.

கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கும். இரசித்துக் கொண்டே படியுங்கள். என்னதான் சொல்ல வருகிறது கீதை என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வாருங்கள்.

நீங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று தள்ளி நின்று பாருங்கள். அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள். அது போதும், இப்போதைக்கு.

http://bhagavatgita.blogspot.com/2018/10/222.html



No comments:

Post a Comment