Sunday, October 21, 2018

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை

பகவத் கீதை - 2.23 - அதன் தன்மை 



नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥२३॥

நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||

ந = இல்லை

ஏனம் = இந்த

 சி²ந்த³ந்தி = வெட்டினாலும்

ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்

ந = இல்லை

ஏனம் = இந்த

த³ஹதி = எரிதல்

பாவக:|  = தீயில்

ந = இல்லை

ச = மேலும்


ஏனம் = இந்த

க்லேத³யந்த்தி = நனைவது

அபா = தண்ணீரில்

ந = இல்லை

ஸோ²ஷயதி = உலர்வது

மாருத: = காற்றில்


அதை ஆயுதத்தால் வெட்ட முடியாது; தீயால் எரிக்க முடியாது; நீரில் நனைக்க முடியாது; காற்றில் உலர்த்த முடியாது. 


நான் போன மாதம் அயல்நாடு  போய் இருந்தேன். போன இடத்தில் ஒரு உணவகத்திற்கு சென்று இருந்தேன். இன்றைய ஸ்பெஷல் என்று ஏதோ இனிப்பு பலகாரத்தின் பெயர் இருந்தது. சரி, சாப்பிட்டுப் பார்ப்போமே என்று சாப்பிட்டேன். மிக மிக சுவையாக இருந்தது. பெயர் என்னவோ வாயில் நுழையாத பாரசீகப் பெயர்.

நீங்கள்: நம்ம ஊர்ல இல்லாததா ?

நான்: நம்ம ஊர்ல இல்லாதது. அந்த நாட்டில் மட்டும் தான் செய்வார்களாம் இதை.

நீங்கள்: அப்படியா, அது எப்படி இருக்கும் ?

நான்: அது வந்து கொஞ்சம் நெளிவு நெளிவா இருக்கும்....

நீங்கள்: முறுக்கு , ஜிலேபி மாதிரியா ?

நான்: கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் ஆனால் முறுக்கு மாதிரியே அச்சு அசலா இருக்காது. மெல்லமா , மெத்துன்னு இருக்கும்.

நீங்கள்: சரி, என்ன கலர் ? மஞ்சள் கலர்ல இருக்குமா ?

நான்: இல்லை, கேசரிப் பூ கலர். அதுலயும் கொஞ்சம் நிறம் கம்மி



இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி, நீங்கள் பார்க்காத , சுவைக்காத அந்த பலகாரத்தை உங்களுக்கு விளங்க வைத்து விடுகிறேன். அதன் நிறம், சுவை, எடை, என்று அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நேரில் பார்க்கா விட்டாலும், வாயில் போட்டு சுவைக்கா விட்டாலும், அதை தெரிந்து கொள்கிறீர்கள்.

எப்படி ?

தெரிந்தவற்றில் இருந்து, தெரியாததை புரிந்து கொள்கிறீர்கள்.

புலியே பார்த்திராத ஒருவனிடம் புலி எப்படி இருக்கும் என்று சொல்லுவது?

புலி என்பது பூனை மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரிய பூனை அவ்வளவுதான் என்று சொன்னால் புரிந்து கொள்வார்.

அது போல, ஆத்மாவை நாம் பார்த்தது இல்லை.

அறிந்தவர் சொல்கிறார்.

ஆத்மா எப்படி இருக்கும்? மிக குழப்பமான கேள்வி. அதை தெளிவாக்குகிறது கீதை.

அது மிக நுட்பமானது என்று சொல்ல வேண்டும்.

நுட்பமானது என்று சொன்னால் எவ்வளவு நுட்பம் என்று கேள்வி வரும்.

கீதை சொல்கிறது "எந்த ஆயுதத்தாலும் அதை வெட்ட முடியாது"....

கத்தின் முனை எவ்வளவு கூர்மையாக இருந்தாலும். கத்தி எப்போது வெட்டும் ? அது எதை வெட்டுகிறதோ அது கத்தியின் முனையை விட தடிமனாக இருக்க வேண்டும். அப்போதுதான் கத்தி அதை இரண்டாக பிளக்க முடியும்.

அது கத்தியை விட மெல்லிதாக இருந்தால், அதனால் வெட்ட முடியாது அல்லவா ?

ஆத்மா , மிக மிக சன்னமானது. அது தடிமனானது அல்ல.

அது தீயில் எரியாது.

எந்த ஒரு பொருளும் தீயில் இட்டால் எரிந்து சாம்பலாகி விடும். ஆத்மாவும் அப்படியா என்றால் இல்லை.

தீயில் எரிவது என்றால் என்ன அர்த்தம்? ஒரு பொருளோடு, பிராண வாயு கலந்து, அந்த பொருள் அதிக சூட்டினை ஏற்று , சூடும், வாயுவும் அந்த பொருளும் சேர்ந்து வினை ஆற்றும் போது எரிதல் நிகழ்கிறது.

ஆத்மா என்பது மற்றவற்றோடு கலக்காது. பிராண வாயு, வெப்பம் என்பவை அதோடு சேராது. அது தனித்து நிற்பது.

சரி, அதை தூக்கி தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்? நீரில் கரையுமா ?

இல்லை. அது நீரில் கரையாது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நீர் தான் சார்ந்தவற்றின் நிறத்தை குணத்தைப் பெறும். செம்மண்ணில் விழுந்தால் சிவப்பு நிறம். கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நிறம்.

அது நீரில் கரையாது என்றால், ஆத்மா தான் சேர்ந்த உடலின் தன்மையைப் பெறாது என்று அர்த்தம். அது எப்போதும் தனித்து நிற்கும். உடலின் செயல்கள் அதைப் பாதிக்காது.

அதை உலர்த்த முடியாது.

உலர்த்துதல் என்றால் , ஒன்றில் இருந்து நீரை பிரித்து எடுத்தல்.

ஆத்மா என்பது பல்வேறு பொருள்களின் கலவை அல்ல. அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது. அது ஏற்கனவே பூரணமான ஒன்று. அதை குறை படுத்த முடியாது.

அதனுடன் எதையும் சேர்க்க முடியாது (கரியாது), அதில் இருந்து எதையும் எடுக்கவும் முடியாது (உலர்த்த முடியாது), அதை பாக்கவும் முடியாது (வெட்ட முடியாது) அதை அழிந்து போகவும் செய்ய முடியாது (அதை எரிக்க முடியாது)

என்று சொல்லுவதன் மூலம், கீதை ஆத்மா என்பது என்ன என்று விளக்குகிறது.

நாம் உலகில் காணும் பொருள்கள் யாவும் பல்வேறு விதமான துகள்களால் ஆனவை. ஆத்மா என்பது பிரித்து பார்க்க முடியாத ஒன்று. மூலக் கூறு,    அணு, ப்ரோட்டோன், நியூட்ரான் என்றெல்லாம் இல்லை. அது ஒன்றேதான்.

அதை மற்றவற்றோடு சேர்க்கவும் முடியாது. அதில் இருந்து எதையும் பிரிக்கவும் முடியாது.

அது அதுதான்.

தானே தொடக்கம். தானே முடிவு. தனக்குள்ளே எல்லாம் அடக்கம்.

சிந்தித்துப் பாருங்கள்.




No comments:

Post a Comment