கீதை - 1.09 - எனக்காக
अन्ये च बहवः शूरा: मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥९॥
அந்யே ச ப³ஹவ: ஸூ²ரா: மத³ர்தே² த்யக்தஜீவிதா:|
நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்³த⁴விஸா²ரதா³: ||1-9||
அந்யே = இது அன்றி
ச = மேலும்
ப³ஹவ: = பல
ஸூ²ரா: = சூரர்கள்
மத³ர்தே² = எனக்காக
த்யக்தஜீவிதா: = தங்கள் வாழ்வை தியாகம் செய்ய
நாநா ஸ²ஸ்த்ர ப்ரஹரணா: = நாலாவிதமான யுத்த சாத்திரங்களை அறிந்தவர்கள்
ஸர்வே = அனைவரும்
யுத்³த⁴ = போர்
விஸா²ரதா³: = திறமையானவர்கள் ||1-9||
மேலே சொன்ன வீரர்கள் அன்றி, மேலும் பல சூரர்கள், போர் கலையில் சிறந்தவர்கள் என் பொருட்டு தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் (என்றான் துரியோதனன் துரோணாச்சாரியாரைப் பார்த்து ).
பதவிக்கு தரும் மரியாதையை தனக்குத் தரும் மரியாதை என்றே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் முதல் அமைச்சராக ஆகி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கார் கதவை திறந்து விட ஒரு ஆள், பாதுகாப்புக்கு பத்து பேர் என்று பல மரியாதைகள் கிடைக்கும். அந்த மரியாதைகள் , அவருக்குத் தந்தது அல்ல. அந்தப் பதவிக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால், பல பேர், ஏதோ அது தனக்குத் தரப்பட்ட மரியாதை என்று எடுத்துக் கொள்கிறார்கள். பதவி போன மறு நிமிடம் மரியாதையும் போய் விடும். அப்போது, மரியாதை செய்யாதவர்கள் தனக்கு எதிரிகள் என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள். பதவி வேறு, தான் வேறு என்று அறிய வேண்டும்.
துரியோதனன் நினைக்கிறான், பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் அவன் பொருட்டு உயிரை விட சித்தமாக இருப்பதாக. அது தவறு . அவர்களின் தியாகம் நாட்டுக்காகவே அன்றி துரியோதனன் என்ற தனி மனிதனுக்காக அல்ல.
அது இந்தப் பதவியாக இருந்தாலும், மதிப்பு மரியாதை எல்லாம் அந்தப் பதவிக்குத்தானே அன்றி தனி மனிதனுக்கு அல்ல.
இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்க்கலாம்.
பதவி எப்படி மனிதனின் மண்டைக்குள் போய் , தான் வேறு பதவி வேறு அல்ல என்று நினைக்கத் தொடங்குகிறானோ, அது போல வேறு பல விஷயங்களும் நிகழ்கிறது.
நான் பணக்காரன், செல்வந்தன், படித்தவன், அறிவாளி, உயர் குலத்தில் பிறந்தவன், உயர்ந்த மதத்தில் பிறந்தவன் , "நான் இந்து, நான் கிருத்துவன், " என்று அனைத்தையும் "தான்" ஆகப் பார்க்கத் தலைப் படுகிறான் மனிதன்.
நான் இந்து மத கோட்பாட்டை பின் பற்றுகிறேன் என்று சொல்லுவது இல்லை. நான் இந்து என்கிறான்.
நான் இந்திய நாட்டில் வாழ்கிறேன் என்று சொல்லுவது இல்லை. நான் இந்தியன் என்று சொல்லுகிறான்.
நான் முதல் அமைச்சர் வேலை செய்கிறேன் என்று அல்ல. தானே முதல்வன் என்று நினைக்கிறான்.
நான் தமிழன், நான் இந்தியன், நான் ஆண் , நான் அது , நான் இது என்று மனிதன் தன்னை கூறு போட்டுக் கொள்கிறான்.
பின் அவற்றிற்காக போராடுகிறான், சண்டை போடுகிறான், கொல்கிறான் , கொல்லக் கொடுக்கிறான். துரியோதனன் செய்த தவறு தெரிகிறது. நாம் செய்யும் தவறு தெரிவதில்லை.
இராமனிடம் சக்கரவர்த்தி பதவி கொடுத்த போதும் அவன் மகிழவில்லை, அது கை விட்டு போனபோதும் வருந்தவில்லை.
தான் ஒரு சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தால், ஐயோ நான் சக்கரவர்த்தி இல்லையா என்று நினைத்து வருந்தி இருப்பான்.
இந்த பதவிகளைத் தாண்டி நாம் யார் ? இந்த லேபிள் களைத் தாண்டி நாம் யார் ?
No comments:
Post a Comment