கீதை - 15.6 - மாறுவதும், மாறாததும்
द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥१५- १६॥
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் சாக்ஷர ஏவ ச |
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||
த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது
உலகம் அழியக் கூடியது மற்றும் அழிவில்லாதது என்ற இரண்டு புருஷர்களால் ஆனது. அழியக்கூடியவற்றில் இருந்து விடுதலை பெற்றவனே அழிவற்றவன் என்று சொல்லப் படுகிறான்.
நம்முடைய பழைய புகைப்படத்தை பார்த்தால், "அட, அது நானா " என்று தோன்றும். இடைப்பட்ட காலத்தில் நிறைய மாறி இருப்போம். முடி நரைத்து இருக்கும். தோல் கொஞ்சம் மாறி இருக்கும். எடை கூடி இருக்கலாம். உயரம் கூடி இருக்கலாம். இப்போது இருக்கும் உருவத்திற்கும் அந்த புகைப் படத்தில் இருக்கும் உருவத்திற்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் இரண்டிலும் இருப்பது ஒரே ஆள் தான். அது உங்களுக்குத் தெரியும். உடல் மாறி விட்டது, அறிவும், நினைவுகளும் மாறி விட்டன. இருந்தும் புகைப் படத்தில் உள்ள நானும், இப்போது இருக்கும் நானும் ஒன்றுதான்.
மாறாத அந்த ஒன்று எது ?
உடல் மாறும்.
ஞாபகங்கள் மாறும்.
உறவுகள் மற்றும்.
அறிவின் அளவு மாறும்.
நல்லது கெட்டது என்று பிரித்து அறியும் அளவு கோல்கள் மாறும்.
இத்தனை மாற்றங்களுக்கு இடையிலும், மாறாத ஒன்று இருக்கிறது அல்லவா ?
அது என்ன ?
சின்ன வயது புகைப் படத்தை வைத்துக் கொண்டு, அது தான் நான், இப்போது இருக்கும் நான் , நான் இல்லை என்று யாராவது சொல்வோமா ? மாட்டோம் அல்லவா ? அல்லது, இப்போது இருக்கும் நான் தான் நிரந்தரமான நான், இனிமேல் மாறவே மாட்டேன் என்று சொல்லுவோமா ? முடியாது அல்லவா.
மாற்றம் வரும். மாறும். ஆனால், அந்த மாற்றத்திற்கு கீழே மாறாத ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.
ஆன்மா, உயிர், ஜீவாத்மா, பரமாத்மா என்று ஏதோ ஒரு பெயர்.
அந்த மாறாத ஒன்றை எப்படி அறிவது ? மாறாத ஒன்று இருக்கிற மாதிரி தெரிகிறது. ஆனால், சரியாக பிடிபடமாட்டேன் என்கிறது.
மாறும் உடல் நான் இல்லை என்றால் , பின் நான் யார் ?
எனக்குள் மாறாத ஒன்று உண்டு என்றால், அது மற்றவர்களுக்கு உள்ளேயும் இருக்கும் அல்லவா ?
எனக்குள் இருப்பதும், மற்றவர்களுக்குள் இருப்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானதா ?
முடியும் என்றால் எப்படி ?
கீதை வழி சொல்கிறது.
ஒன்றே ஒன்று தான் வேண்டும்....
மாறும் அவற்றில் இருந்து விடுதலைப் அடைந்தவன் அதை அறிய முடியும்.
மாறும் அவை நான் இல்லை என்று அறிந்தவன் அதை உணர முடியும்.
நம் சிக்கல் என்ன என்றால், மாறுகின்றவற்றை நிரந்தரமானவை என்று நினைக்கிறோம்.
இதைத்தான் வள்ளுவரும்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
நிலை இல்லாதவற்றை , நிலையானவை என்று அறிவது அறிவில்லாதவர் செய்யும் செயல் என்கிறார் வள்ளுவர்.
மாறுகின்றவற்றின் மேல் உள்ள பற்றை விட்டால் மாறாதது எது என்று தெரியும்.
மாறுபவை - செல்வம், அழகு, அறிவு, தோற்றம்,உறவு, நினைவுகள்,...என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை விட்டு விட்டால் என்ன இருக்கும் ?
சிந்தியுங்கள்.
புலப்படலாம்.
புலப்படும்.
(மேலும் படிக்க
http://bhagavatgita.blogspot.in/2016/06/156.html
)
No comments:
Post a Comment