Wednesday, June 29, 2016

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 1 - எங்கே ஞானம் ?

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 1 - எங்கே ஞானம் ?


ஞானம் எங்கே கிடைக்கும் ?

புத்தகங்களை படித்து ஞானம் பெற முடியுமா ? முடியும் என்றால் கீதை , வேதங்கள், பைபிள், குரான், போன்று எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. அதைப் படித்தவர்கள் எல்லோரும் ஞானம் பெற்று விட்டார்களா என்றால் இல்லை.

சரி, புத்தகங்கள் வேண்டாம், அறிந்த ஞானிகளை சேர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டால் ஞானம் வருமா ? வியாசர் தொடங்கி எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், பெரியவர்களும் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள். அதை நேரில் கேட்ட அனைவரும் ஞானம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை.

வாசித்தும் அறிய முடியாது.

கேட்டும் பெற முடியாது என்றால் பின் எப்படித்தான் ஞானத்தைப் பெறுவது ? எங்கிருந்து பெறுவது ?

இப்படித்தான் ஞானத்தைத் தேடி கெளதம சித்தார்த்தன் அலைந்தான். பெரிய அரசைத் துறந்து, கட்டிய மனைவியைத் துறந்து, பிள்ளையைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்தான்.

எத்தனையோ படித்தான்.

எவ்வளவோ பேரை சந்தித்தான். அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டான்.

ஞானம் வந்த பாடில்லை.

களைத்துப் போன சித்தார்த்தன், ஒரு பௌர்ணமி அன்று, ஆற்றில் குளித்து விட்டு கரை ஏறி வந்தான். ஊன் உறக்கம் இல்லாமல் உடல் எல்லாம் மெலிந்து தளர்ந்து போய்விட்டான்.

கரையில் ஏறி, ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்தான்.


சலசலக்கும் நீரோடை எதிரில்.

நிர்மலமான வானம்.

குளிர் கிரணங்களை வீசும் பௌர்ணமி நிலா.

அந்த மரத்தில் இருந்து ஒரு இலை கீழ் நோக்கி விழுந்தது.

அது காற்றில் மெல்ல அங்கும் இங்கும் ஆடி , மெல்ல சென்று தண்ணீரில் விழுந்தது.  வீழ்ந்த அந்த இலை ஆற்றின் போக்கில் மிதந்து சென்றது.

அதை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்தனுக்கு ஞானம் பிறந்தது.

சித்தார்த்தன், புத்தன் ஆனான்.

எத்தனையோ புத்தகங்கள் தராத ஞானத்தை

எவ்வளவு பண்டிதர்கள் தராத ஞானத்தை அந்த மரத்தின் ஒரு இலை தந்தது.

மரங்களும், இலைகளும், நீரோடைகளும் இன்றும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

புத்தர்களைத் தான் காணவில்லை.

புத்தர்கள் புத்தகங்களுக்கும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

ஞானம் அதில்  இல்லை.

அதை மூடி வைத்து விட்டு வாருங்கள்.

ஞானம் எங்கே என்று கீதை சொல்கிறது, . அங்கே சென்று தேடுவோம்.

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/15-1.html

)











No comments:

Post a Comment