Sunday, June 12, 2016

கீதை - 15.17 - பரமாத்மா யார் ?

கீதை - 15.17 - பரமாத்மா யார் ?


उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥१५- १७॥

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: |
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: || 15- 17||

உத்தம: = உயர்ந்த, சிறந்த

புருஷஸ் = புருஷன்

து = மேலும், ஆனால்

அந்ய: = வேறான, மற்ற

பரமாத்மா = பரமாத்மா

இதி = இதுவே

உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
 |
யோ = அவன்

லோக = உலகங்களில்

த்ரய = மூன்று

அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்

பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ

அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத

ஈஸ்வர: = ஈஸ்வரன்

இவற்றில் இருந்து வேறு பட்டவன் உத்தம புருஷன். மூன்று உலகங்களிலும் அவனே நிரந்தரமானவன், உயர்ந்தவன், பரமாத்மா.


ஒண்ணும் புரியல இல்ல. தலையும் புரியல, காலும் புரியல.

கொஞ்சம் கீழே இறங்கி வந்து யோசிப்போம். 

உங்களை, நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

இன்னாருடைய பிள்ளை/பொண்ணு, இன்னாருக்கு கணவன்/மனைவி. இந்த பிள்ளைகளுக்கு தகப்பன்/தாய். இன்னாருக்கு சகோதரன்/சகோதரி. இந்த நிறுவனத்தில் , இந்த பொறுப்பில் இருக்கிறேன், அல்லது இந்த வீட்டை பராமரிக்கிறேன் என்று சொல்லுவீர்கள் அல்லவா.

இவை அனைத்திலும், உங்களை வேறொன்றின் மூலமாகத்தான் நீங்கள்  அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது. 

பிள்ளைகளை வைத்து தாய் அல்லது தகப்பன் என்று சொல்லுகிறீர்கள்.

அந்த பிள்ளைகள் வருவதற்கு முன்னால் நீங்கள் யாராக இருந்தீர்கள் ? 

தாய் அல்லது தந்தை இல்லாத நீங்களும் இருந்தீர்கள் தானே ?

உங்கள் சகோதரனோ, சகோதரியோ வருவதற்கு முன் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ?

வேலையில் சேர்வதற்கு முன் நீங்கள் , யாராக இருந்தீர்கள் ?

அதாவது, வெளி ஒன்றின் தொடர்பு இல்லாமால் உங்களை நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா ?

இந்தியன் என்றால் இந்தியாவில் பிறந்தவன் என்று பொருள். இந்தியா என்ற நாட்டை வைத்து  உங்களை நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள்.

இந்து/முஸ்லிம்/கிறிஸ்துவன் என்றால் ஒரு மதத்தைக் கொண்டு உங்களை  யார் என்று சொல்கிறீர்கள்.

இவை எதுவும் இல்லை என்றால், நீங்கள் யார் ?

ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு யோசித்துப் பாருங்கள். 

வெளி உலகம் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றைக் கொண்டு நீங்கள் உங்களை யார் என்று தீர்மானித்தால், நீங்களும் மாறிக் கொண்டேதான் இருப்பீர்கள். 

வெளி உலகைத் தவிர்த்து, நீங்கள் யார் என்று சிந்தித்துப் பாருங்கள். 

க்ஷர மற்றும் அக்ஷர என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறியதின் அர்த்தம் விளங்கும். மாறுவது, மாறாதது. 

உலகம் மாறும். உலகை வைத்து நீங்கள் உங்களை அடையாளம் கண்டால், அதுவும் மாறும். 

இதில் மாறாதது எது ?

அதுவே உத்தம புருஷன் அல்லது பரமாத்மா.

பெயர்களை விட்டு விடுவோம். பரமாத்மா என்றால் உடனே ஜீவாத்மா யார் என்ற கேள்வி வரும். அப்புறம், இரண்டு ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வி வரும். முடிவில்லா தர்க்கம் தொடங்கும்.

எனவே பெயரை விட்டு விடுவோம்.

இந்த வெளி உலகைத் தவிர்த்த நான் யார் ?

தாயும் இல்லை, தகப்பனும் இல்லை, சகோதர சகோதரியும் இல்லை, ஊரில்லை, வேலை இல்லை , மொழி இல்லை...இந்த கூறுகளைத் தவிர்த்து, நான் யார் ?

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பிள்ளை அப்பா என்கிறான், அப்பா மகனே என்கிறார், மனைவி "என்னங்க" என்கிறாள்,  தாத்தா , பேரா என்று அழைக்கிறார், பேரன் என்னை தாத்தா என்று அழைக்கிறான், தங்கை என்னை அண்ணா என்று அழைக்கிறாள்...

நான் யார் ?

எல்லாமும் நான் தான்.  ஆயிரம் திருநாமம்.

இவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் நான் இருப்பேன். 


சிந்திக்க வேண்டிய விஷயம் தானே ?

சரி, சிந்தியுங்கள்.

(மேலும் படிக்க

http://bhagavatgita.blogspot.in/2016/06/1517.html

)




No comments:

Post a Comment