Saturday, June 18, 2016

கீதை - 15.19 - அனைத்திலும் அவனே

கீதை - 15.19 - அனைத்திலும் அவனே 



यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥१५- १९॥

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித்  பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத || 15- 19||

யோ = எவன் ஒருவன்

மாம் = என்னை

ஏவம்மே = அப்படியாக

அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி

ஜாநாதி = அறிகிறானோ

புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று

ஸ = மேலும்

ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்

பஜதி = வணங்குகிறான்

மாம் = என்னை

ஸர்வ = அனைத்து

பாவேந =நிலைகளிலும்

பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

குழப்பமும் தடுமாற்றமும் இன்றி , எவன் நானே புருஷோத்தமன் என்று அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன். அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.


மிக முக்கியமான, ஆழ்ந்த பொருள் நிறைந்த ஸ்லோகம்.

"குழப்பமும் தடுமாற்றமும் இன்றி"


இறைவன் என்றால் யார் அல்லது என்ன ? இறைவன் ஆணா , பெண்ணா, பொருளா ஒன்றும் தெரியாது. ஆளாளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக்  கொண்டு இருக்கிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள்,  சிலர் உண்டு என்கிறார்கள், சிலர் சந்தேகமாக இருக்கிறது  என்கிறார்கள். உண்டு என்று சொல்பவர்களுக்குள் ஆயிரம்  கருத்து வேறுபாடு. ஆளுக்கு ஒரு கடவுள்  இருக்கிறார். இதில் இந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சை வேறு.

குழப்பமும் தடுமாற்றமும் ஏன் வருகிறது ?

நம்மை நாம் ஏதோ ஒன்றோடு இணைத்துக் கொள்வதால், சேர்த்துக் கொள்வதால், ஒன்று படுத்திக் கொள்வதால் இவை வருகின்றன.

என் மதம், என்  சமயம்,என் கோட்பாடுகள், என் கடவுள், என் சித்தாந்தம் என்று சிலவற்றோடு நாம் நம்மை அடையாள படுத்திக் கொள்கிறோம். அதனால, மற்றவைகளில் இருந்து வேறு பட்டுக் போகிறோம்.

வேற்று மதம், வேற்றுக் கடவுள், வேற்றுக் கொள்கைகள், வேற்று சமயம் என்று நம்மை பிரித்து வைக்கிறோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்கும் போது எது உண்மையான உண்மை என்பதில் ஒரு தடுமாற்றம் வருகிறது.

ஒரு வேளை மற்றது சரியாக இருக்குமோ ? நம் கொள்கைகள் தவறாக இருக்குமோ என்ற தடுமாற்றம் வருகிறது.

இந்த தடுமாற்றத்தில் இருந்து விடுபட இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று அனைத்தையும் அறிந்து கொண்டு அதன் மூலம் பிரிவினைகளை தாண்டிப் போவது.

இன்னொன்று வேறு எதையும் அறிந்து கொள்ள அல்லது புரிந்து கொள்ள மறுப்பது.

நான் கொண்ட கொள்கையே சரி என்று சாதிப்பது.

வேறு யார் சொல்வதையும் கேட்பது கிடையாது. வேறு புத்தகங்களை படிப்பது கிடையாது. கிணற்று தவளையாக இருந்து விடுவது.

உண்மை கடல் போலக் கிடக்க , தான் வாழும் கிணறுதான் உலகில் மிகப் பெரிய கடல் என்று அறியும் தவளை போல் இருப்பது.

கீதை முதலாவது வழியைச் சொல்கிறது.

குழப்பமும் தடுமாற்றமும் இன்றி எவன் தன்னைத் தானே அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன்.

நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பவன் கூட ஒரு குழப்பமும் இன்றி இருக்கிறான். அதனால் அவன் அனைத்தும் அறிந்தவன் என்று கொள்ள முடியுமா ?

 குழப்பம் இல்லாதவன் யார், அனைத்தும் அறிந்தவன் யார் என்று சொல்கிறது கீதை.


அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.

எவன் ஒருவன் இறைவனை அனைத்து வடிவிலும் நிலையிலும் கண்டு வணங்குகிறானோ அவனே   குழப்பம் இல்லாதவன்.

இந்த வடிவம்
இந்த பெயர்
இந்த இடம்
இந்த குணம்

என்று இல்லாமல், எல்லா வடிவிலும், எல்லா நிலையிலும் இறைவனைக்  காண்பவனே அனைத்தும் அறிந்தவன். அவனே குழப்பம் இல்லாதவன்.


கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

என்பான் பாரதி.

அனைத்திலும் இறைவன். குப்பையிலும் மலத்திலும் கூட இறைவன் தான்.

கூடி நின்ற பொருள் அனைத்தின் கூட்டம் தெய்வம்

வேற்றுமைகளை குறையுங்கள். எனது மதம், எனது கடவுள் என்ற பற்றை விடுங்கள். பிரபஞ்ச சக்தியை ஒரு பாட்டிலுக்குள் அடைக்காதீர்கள். எங்கும் நிறைந்த சக்தியை உணருங்கள்.

நல்லதிலும், தீயதிலும் கூட அதே சக்திதான்.

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய்.


என்றான் பாரதி. உங்களுக்கு தீமை செய்ய வரும் புலியும் பராசக்திதான். வேறுபாடுகள் அற்ற நிலையை அடைய முயற்சி செய்யுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக உங்களை இணைப்புகளை , தொடர்புகளை, பற்றுகளை விட்டு வெளியே வாருங்கள். 

அந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு கூறாக , அதன் ஒரு பகுதியாக நீங்கள் உணர்வீர்கள்.

வாழ்த்துக்கள் 

(மேலும் வாசிக்க 

http://bhagavatgita.blogspot.in/2016/06/1519.html
)










No comments:

Post a Comment