பகவத் கீதை - 2.56 - இன்பம் துன்பம், அச்சம், சினம்
கீதையை ஒரு சமய நூலாகவோ, தத்துவ நூலாகவோ பார்க்காமல், மனித மனதை அலசி ஆராய்ந்து, மனிதற்கு வரும் துன்பங்களை நீக்கி, இன்பமாக வாழ வழி சொல்லும் ஒரு நூலாக அணுகலாம்.
இடை இடையே சிறிது மத வாடை அடித்தாலும், அவற்றை தாண்டி மனித மனத்தை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் ஒரு மனோ தத்துவ நூலாக நாம் இதைப் படிக்கலாம்.
வீட்டில், அலுவகலத்தில் நமக்கு கோபம் ஏன் வருகிறது?
https://bhagavatgita.blogspot.com/2022/04/256.html
(click the above link to continue reading)
நமக்கும், நாம் அடைய நினைக்கும் ஒன்றிற்கும் நடுவில் யாராவது வந்தால் அவர்கள் மேல் கோபம் வரும்.
உதாரணமாக,
கணவன் அலுவகலத்தில் இருந்து வந்து களைத்து இருக்கிறான். மனைவிக்கு எங்கோ வெளியில் போக வேண்டும். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். உடனே அவள் மேல் கோபம் வருகிறது. சண்டை பிடிக்கிறான். ஏன் ? ஓய்வு எடுக்க வேண்டும் என்ற அவன் விருபத்துக்கு மாறாக அவள் குறுக்கே நிற்கிறாள்.
அதே சூழ்நிலையில், மனைவிக்கு கணவன் மேல் கோபம் வருகிறது. என்ன இது மனுஷன், அலுவலகம், வீடு என்று எப்பப் பாரு இதே தானா? ஒரு சினிமா, பார்க், பீச் என்று ஒரு இடத்துக்கு கூட்டிப் போவது கிடையாது என்று அவன் மேல் கோபம் கொள்கிறாள்.
ஏன் ?
வெளியில் சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற அவளுடைய விருப்பத்துக்கு அவன் குறுக்கே நிற்கிறான்.
நம் விருபத்துக்கு குறுக்கே யார் நின்றாலும், அவர்கள் மேல் கோபம் வருகிறது.
கீதை என்ன சொல்கிறது என்றால், கோபத்துக்குக் காரணம் மற்றவர்கள் அல்ல, நம் விருப்பமே. .நமது ஆசை (ஓய்வு எடுக்க வேண்டும், வெளியில் சுற்ற வேண்டும்). பற்று இருக்கும் போது கோபம் வரும்.
அலுவலகத்திலும் அப்படித்தான். .நமக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றின் மேல் ஆசை. அதைத் தரதா மேல் அதிகாரி மேல் கோபம் வரும்.
இது முதல் செய்தி. .
அடுத்ததாக,
ஒன்றை அடைந்து விட்டோம். ஆசைப் பட்டது கிடைத்து விட்டது. நிம்மதியாக இருக்க முடியுமா? எங்கே அது கையை விட்டுப் போய் விடுமோ என்ற பயம் வருகிறது அல்லவா? பிள்ளைகள் மேல் அளவுக்கு அதிகமான அன்பு. அவர்களுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ என்ற பயம் வருகிறது. முதலீடு செய்த பணம் மதிப்பு இழந்து விடுமோ என்ற பயம் வருகிறது. உயிர் மேல் உள்ள ஆசையால் மரண பயம்.
இப்படி ஒவ்வொரு பயத்துக்கும் பின்னால் ஒரு ஆசை ஒளிந்து கொண்டு இருக்கும்.
இது இரண்டாவது செய்தி.
பயம், கோபம் இவை இரண்டுக்கும் காரணம் வெளியில் உள்ளவர்களோ, பொருள்களோ அல்ல. நம் ஆசை, பற்று தான் காரணம்.
எனவே, பயத்தையும், கோபத்தையும் போக்க வேண்டும் என்றால் பற்றை விட வேண்டும். (ராகம் என்றால் பற்று).
அது எப்படி கணவன் மேல், மனைவி மேல், பிள்ளைகள் மேல் பாசம் வைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால், பாசம் வைத்தால் கோபமும், பயமும் வரும்.
வாழ்நாள் பூராவும் பயத்தோடு, கோபத்தோடு வாழ உங்களுக்கு விருப்பமா? அல்லது கோபமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்க விருப்பமா?
நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பற்றை விட்டு அதன் மூலம் கோபத்தையும், பயத்தையும் விட்டவனே முனிவன் என்று கூறப் படுகிறான். அவன் மன உறுதி உள்ளவனாக இருப்பான் என்கிறான் கண்ணன். .
இனி ஸ்லோகத்தைப் பார்ப்போம். .
பாடல்
दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते॥५६॥
து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|
வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||
து³:கே²ஷ் = துன்பத்தில்
அநுத் விக்³ந மநா: = நடுக்கம், குழப்பம் இல்லாத மனம்
ஸுகே²ஷு = இன்பத்தில்
விக³தஸ்ப்ருஹ:| = ஆசைகளை விட்டு ஒழித்தவன்
வீதராக பய க்ரோத = பற்றும், பயமும், கோபமும் விட்டவன்
ஸ்திததீர் = மனதில் உறுதி உள்ளவன்
முநிர் = அந்த முனிவன்
உச்யதே = அழைக்கப் படுகிறான்
யோசித்துப் பாருங்கள்
கோபமும், பயமும் துளி கூட இல்லை என்றால் வாழ்வு எப்படி இருக்கும் என்று.
பயம் இல்லாத இடத்தில் துணிவு பிறக்கும்.
கோபமும், பயமும் இல்லாத இடத்தில் மன உறுதி பிறக்கும்.
மனக் குழப்பம் எப்போது வருகிறது?
எதைச் செய்தால் நமக்கு அதிக நன்மை கிடைக்கும், எதைச் செய்தால் துன்பத்தில் இருந்து தப்பலாம் என்று ஆசையின் காரணமாக குழப்பம் வருகிறது.
பயம், கோபம், மனக் குழப்பம் இல்லாத வாழ்வு வேண்டுமா?
யாரிடமும் பயம் இல்லை. எதனிடமும் கோபம் இல்லை.
"நாம் யார்க்கும் குடியல்லோம்" என்று துணிந்து அரசனைப் பார்த்து சொன்னார் வயதான நாவுக்கரசர்.
அந்தத் துணிவு எங்கிருந்து வந்தது?
அரசன் என்ன செய்து விட முடியும்? உயிரை எடுக்க முடியும். உயிர் மேல் பற்று இல்லாதவனுக்கு என்ன பயம்?
இது நமக்கு பயன் உள்ள ஒன்றா இல்லையா?
பயனுள்ளது தான். நன்றி
ReplyDelete