Tuesday, April 5, 2022

பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?

 பகவத் கீதை - 2.53 - யோக நிலையை எப்படி அடைவது ?


श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।

समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि॥५३॥


ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|

ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||


ஸ்²ருதி = சுருதி என்றால் சப்தம். பொதுவாக வேதத்தை ஸ்ருதி என்று சொல்வார்கள். ஏன் என்று கீழே சிந்திப்போம். 


விப்ரதி பந்நா = ப்ரதி , வி-ப்ரதி = குழம்பி, தெளிவற்று, அங்கும் இங்கும் அலைந்து 


தே  = நீ, உன் 


யதா = அப்போது 


ஸ்தா²ஸ்யதி = நிலைத்து நிற்கும் 


நிஸ்²சலா| = சலனமின்றி 


ஸமாதாவ் = சமமாக, ஒன்றுபட்டு, வேறுபாடு இன்றி, 


அசலா = அலையாமல், சலனம் இல்லாமல் 


பு³த்³தி⁴ = புத்தி 


ததா = அப்போது 


யோக³ம் = யோகம் 


அவாப்ஸ்யஸி நீ அடைவாய்  ||2-53||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/253.html


(please click the above link to continue reading)



எப்போது உன் புத்தி கேள்விகளிலே கலக்கம் அடையாமல், தெளிவாக, உறுதியாக இருக்கிறதோ, அப்போது நீ யோக நிலையை அடைவாய் .


மிகப் பெரிய விடயத்தை இரண்டு வரியில் அடக்கி விடுகிறான் கண்ணன். 


நாம் விரித்து சிந்திப்போம். 


நம் புத்தி எப்போதும் சலனப் பட்டுக் கொண்டே இருக்கும். எப்போதும் சஞ்சலத்தில் இருந்து கொண்டே இருக்கும். கலங்கிய குளம் போல். அதில் எதுவும் தெளிவாகத் தெரியாது. 


ஒரு கேள்வி வரும். அதற்கு ஒரு பதில் சொன்னால், அந்தப் பதிலில் இருந்து பத்து கேள்விகள் வரும். அந்த பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னால், அதில் இருந்து நூறு கேள்விகள் பிறக்கும். 


இதற்கு ஒரு எல்லையே இல்லை. 


காரணம் என்ன? மனம் தெளிவாக இல்லை. குழம்பி கிடக்கிறது. குழம்பிய மனதில் எந்த பதிலும் நிற்காது. 


சூரியன் எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும், குளம் கலங்கி இருந்தால் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியாது. 


நம் கண்ணில் குறை இருந்தால், பார்ப்பது எல்லாம் பழுதாகத் தெரியும். 


நம் மனதில் குறை இருந்தால் படிப்பது, கேள்விப் படுவது, எல்லாம் பழுதாகப் போகும். 


கேள்வி கேட்டு தெளிவு பெற முடியாது. மனம் அலை பாயாமல், ஒருமுகப் பட்டு, தெளிந்து இருந்தால், அதுவே யோகம். அப்போதும் தோன்றும் காட்சி யோகக் காட்சி எனப்படும். அதில் எந்த விதக் குழப்பமும் இருக்காது. 


அது இல்லாத பட்சத்தில் ஆயிரம் புத்தகங்கள் படிக்கலாம், எத்தனை உபன்யாசம் கேட்கலாம், ஒரு தெளிவும் பிறக்காது. 

\

வேதத்திற்கு ஸ்ருதி என்று பெயர். சஸ்ருதி என்றால் ஒலி, சப்தம். வேதத்தை எழுதி வைத்து படிப்பது இல்லை. அது வாய் மொழியாக கேட்டு கேட்டு வருவது. எனவே தான் அதற்கு எழுதா மறை, எழுதாக் கிளவி என்று பெயர். 


"எழுதா மறையின்" ஒன்றும் அரும் பொருளே என்பார் அபிராமி பட்டர். 


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.- "எழுதாமறை"யின் 

ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 


அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.


வேதத்தின் சாரத்தையே எடுத்துக் கொடுத்தாலும் மனம் அடங்காது. அதில் இருந்து இன்னும் ஆயிரம் சந்தேகம் கேட்கும். 


கண்ணன் சொல்கிறான் , "அர்ஜுனா, உன் மனம் குழம்பி இருக்கிறது. நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது. மனக் குழப்பத்தை விட்டால் உனக்கு யோக காட்சி கிடைக்கும்" என்கிறான்.


அட்டாங்க யோகம் சொல்ல வந்த பதஞ்சலி எடுத்த எடுப்பில், 


"சித்த விருத்த நிரோதம்"  என்று ஆரம்பிப்பார்.


சித்தத்தில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகம் என்று ஆரம்பித்து கடைசியில் சமாதியில் கொண்டு முடிப்பார். 


சமாதி என்றால் ஏதோ அடக்கம் பண்ணும் இடம் என்று நினைக்கக் கூடாது. 


சமம் +ஆதி. 


உலக குழப்பம் எல்லாம் வருவதற்கு முன், குளத்தில் நீர் அலைகள் எழும் முன் எப்படி சலனம் இல்லாமல் தெளிவாக இருந்ததோ அப்படிப்பட்ட ஆதி நிலைக்கு செல்வது தான் சமாதி நிலை. 


யோக சாத்திரத்தின் சாரத்தை சொல்லி விட்டுப் போகிறான் ஒரு வரியில் கண்ணன். 


மேலும் சிந்திப்போம். 




1 comment: