Monday, April 4, 2022

பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம்

 பகவத் கீதை - 2.52 - மோகக் குழப்பம் 


यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।

तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥


யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|

ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||


யதா³ = எப்போதெல்லாம் 


தே  = உனது 


மோஹகலிலம் = மோகத்தினால் குழப்பம் அடைகிறதோ 


பு³த்³தி⁴ = உன் புத்தி 


வ்ர்வ்யதிதரிஷ்யதி = கடந்து செல்லுதல் 


ததா³  = அப்போது 


க³ந்தாஸி = நீ செல்வாய், கடந்து செல்வாய் 


நிர்வேத³ம்  = துன்பம், வேதனை 


ஸ்²ரோதவ்யஸ்ய = எதைக் கேட்கப் போகிறாயோ 


ஸ்²ருதஸ்ய ச  = எதை கேட்டாயோ 



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/252.html


(please click the above link to continue reading)


"எப்போதெல்லாம் உன் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ அப்போதெல்லாம் நீ கேட்டவற்றாலும், கேட்கப் போகிரவற்றாலும் துன்பம் கொள்கிறாய்"


நாம் எவ்வளவோ படிக்கிறோம். இருந்தும் ஒரு மாற்றமும் நம்மில் எழுவதில்லை. அப்படியே ஏதோ ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தாலும், காலப் போக்கில் அது மறைந்து விடுகிறது. 


காரணம் என்ன?


கீதை விளக்குகிறது. 


நமக்கு சிலவற்றின் மேல் விருப்பும், சிலவற்றின் மேல் வெறுப்பும் இருக்கிறது. இந்த விருப்பு வெறுப்பை நாம் விடத் தயாராக இல்லை. யார் என்ன சொன்னாலும், குரங்கு பிடி போல் பிடித்துக் கொள்வோம். அந்த விருப்பு வெறுப்புக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம். அல்லது, அந்த சொற்கள் நமக்குள் வேதனையை உண்டாக்கும்.


கேட்காமல் போனால் சரி. ஏன் வேதனையை உண்டாக்க வேண்டும் ?


நாம் ஒன்றை சரி என்று நினைக்கிறோம். மற்றவர் அது தவறு என்று பலவிதங்களில் நிறுவுகிறார். நாம் அவர் சொல்வதை ஏற்க மாட்டோம். ஆனால், நமக்குள் ஒரு சந்தேகம் எழும். ஒரு வேளை நாம் நினைப்பது தவறோ? அவர் சொல்வது சரியோ ? அல்லது எது சரி அல்லது தவறு என்ற குழப்பமும் வரும்.


அது ஒரு சிக்கல். அந்த சிக்கல் தீரும் வரை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். தீரா தலைவலி அது. 


எனவே என்ன செய்ய வேண்டும் ?


உயர்ந்தவர்கள் சொல்லும் போது நமது விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு கேட்க வேண்டும். 


காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் 

ஆய்தல் அறிவுடையார் கடன்

என்பார் வள்ளுவர். 


அர்ஜுனனுக்கு அது தான் சிக்கல். 


உறைவினர்கள் மேல் பாசம். அவர்களை கொல்வது தவறு என்று அவன் நினைக்கிறான். 


கண்ணனோ உன் கடமையச் செய் என்கிறான். 


மோக கலிதம் வருகிறது. பற்றினால் வரும் குழப்பம். 


இது வரை கேட்டது மட்டும் அல்ல. இனி கேட்கப் போவதும் துன்பம் தரும். 


நாம் சரி தவறு என்று நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் யாரோ முன் நமக்குச் சொன்னது தான். 


அதைப் பற்றிக் கொண்டு விடாமால் இருப்பதால் நமக்கு மேலும் மேலும் வரும் அறிவின் தாக்கம் துன்பத்தைத் தருகிறது.


பலனை எதிர்ப்பார்க்காமல் செய் என்றால் அது எப்படி முடியும் என்று சண்டைக்கு வருகிறோம். காரணம் அப்படி ஒன்று இருக்க முடியாது என்ற நம் பற்று.


அவற்றை நீக்கி வைத்து விட்டு கேட்டால் துன்பம் வராது என்கிறது கீதை. 



No comments:

Post a Comment