Friday, May 13, 2022

பகவத் கீதை - 2.57 - நிலை கொண்ட அறிவு எது ?

 பகவத் கீதை - 2.57 - நிலை கொண்ட அறிவு எது ?




यः सर्वत्रानभिस्‍नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम्।

नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५७॥


ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|

நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/05/257.html


(pl click the above link to continue reading)


ய:  = எவன் 


ஸர்வத்ர  = எங்கும், எதிலும் 


அநபி⁴ஸ்நேஹஸ் = அ + அபி + ஸ்நேக = சிநேகம் என்றால் நட்பு, உறவு, தொடர்பு. அ + சிநேகம் என்றால் பற்று அற்று. தொடர்பு அற்று 


தத்தத் = தத் தத் = அதன் அதன் 


ப்ராப்ய = ப்ராப்தம் என்றால் அனுபவம்.  ப்ராப்ய, அனுபவம், 


ஸு²பா⁴ஸு²ப⁴ம்| = சுபா + அசுபம் = நல்லதும், கெட்டதும் 


ந  = இல்லை 


அபி⁴நந்த³தி  = இன்புறுதல், புகழ்தல் 


ந  = இல்லை 


த்வேஷ்டி  = த்வேஷம், வெறுப்பு 


தஸ்ய = அவனுடைய 


ப்ரஜ்ஞா  = அ அறிவு 


ப்ரதிஷ்டிதா = உறுதியானது 


எவன் எங்கும், எதிலும் தன் அனுபவங்களின் மேல் பற்று இல்லாமலும், அவற்றினால் மகிழாமலும், வருந்தாமலும் இருப்பானோ, அவன் அறிவே உறுதியான அறிவு. ஸ்தித ப்ரஞன் என்று கூறுவார்கள். .


அனுபவங்கள் மேல் பற்று இருக்கக் கூடாது. அதற்காக மகிழவும் கூடாது. வருந்தவும் கூடாது. அப்படி இருந்தால் உறுதியான நிலையான அறிவு உள்ளவன் என்று பொருள் என்கிறான் கண்ணன். 


அது சரி, எனக்கு அரசு வேண்டாம், அது தரும் இன்பம் வேண்டாம், இந்த உறவினர்களை கொல்லும் வேதனையும் வேண்டாம், நான் பாட்டுக்கு போகிறேன் என்று சொன்னவனை பிடித்து உக்கார வைத்து, பலன்களின் மேல் பற்று வைக்காதே, வெற்றியில் களிக்காதே, தோல்வியில் துவளாதே என்று சொன்னால் என்ன அர்த்தம். 


அவன் அதைத் தானே செய்கிறான் என்றான். வெற்றி தரும் இன்பம் வேண்டாம். உறவைக் கொல்லும் துன்பம் வேண்டாம் என்று தானே அவனும் சொன்னான். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


அனுபவங்களில் இன்ப துன்பம் இல்லாமல் இருக்க முடியுமா? இருக்க முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், அது தேவையா?  கல்லும், மரமும் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். உணர்ச்சி உள்ள மனிதன் எப்படி அப்படி இருக்க முடியும்? 


இது இன்னொரு பக்கம். 


இந்த இரண்டுக்கும் விடை கண்டாக வேண்டும். 


இன்ப துன்பங்களை நாம் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


இன்பம் வருகிறது. சந்தோஷம். அதோடு கூட என்ன தோன்றுகிறது? 


இந்த இன்பம் இப்படியே இருக்க வேண்டுமே என்ற ஏக்கம். இந்த இன்பம் மறுபடியும் மறுபடியும் வேண்டுமே என்ற ஆசை. ஒரு வேளை ஏதும் நிகழ்ந்து விடுமோ என்ற பயம் எல்லாம் வருகிறது. மேலும், அதே இன்பம் கொஞ்ச நாளில் சலித்துப் போய் விடுகிறது. அதை தூக்கிப் போட்டு விட்டு வேறு ஒன்றின் பின் மனம் செல்கிறது. .


இது நிகழ்வது தானே? இது முதல் படி. அடுத்த படிக்கு போவோம். 


இதனால் என்ன நிகழ்கிறது? நாம் இந்த அனுபவங்களுக்கு அடிமை ஆகிப் போகிறோம். 


இல்லை...நான் ஒன்றும் அடிமை இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு முன்...


யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இன்பம் நாடியே, பெற்ற இன்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அதை மீண்டும் மீண்டும் அனுபவிக்க....உண்டா இல்லையா. 


காலை எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும் வரை இது தான். 


இன்பம் வேண்டும் என்று நீங்கள் அலைவது இல்லை.  இதெல்லாம் செய்தால் இன்பம் வரும், நிலைக்கும் என்று ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல காரியங்களை செய்கிறீர்கள். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடந்த வாரம் நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன என்று. 


மந்திரித்து விட்ட சேவல் மாதிரி காரியங்கள் செய்கிறோம். 


இது இன்பத்துக்கு மட்டும் அல்ல. துன்பத்துக்கும் தான். 


சற்று தள்ளி நின்று உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். உங்கள் செயல்கள் எந்த அளவுக்கு இன்ப நாட்டம், துன்ப வெறுப்பினால் நிகழ்கிறது. 


அருமையான வாழ்வை இப்படி ஒரு பொம்மை போல ஆக்கி விட்டோம்.


கீதை நம்மை அந்த தூக்கத்தில் இருந்து எழுப்புகிறது. .


சரி அதுக்காக ஜடம் போல வாழ முடியுமா என்றால் இல்லை. பொறுப்பை எல்லாம் தட்டி கழித்து விட வேண்டுமா என்றால் இல்லை. 


வாழ்க்கை என்றால் இன்பம் வரும், துன்பம் வரும். அந்த நிகழ்வுகளை நமக்கு கீழே வைக்க வேண்டும். அவற்றிக்கு கீழே நாம் அழுந்தி விடக் கூடாது. அவை நம் மேல் ஏறி நம்மை அலைகழிக்கக் கூடாது. 


இன்பம் வருகிறதா - அனுபவிப்போம். 


துன்பம் வருகிறதா - அனுபவிப்போம். 


அது வேண்டும், இது வேண்டாம் என்று ஆலாய் பறப்பது இல்லை. 


அந்தப் பக்குவம் வந்து விட்டால், எது நிகழ்ந்தாலும்,  மனம் ஒரு நிலையில் நிற்கும். உறுதியான அறிவு என்று சொல்கிறது கீதை. 


சரி, இதை எல்லாம் நாளையே விட்டு விட முடியுமா? 


முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். 


ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ் "தத்தத்" ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|

நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||



அது தான் கீதை சொல்கிறது 


"தத்தத்"  என்றால் எதில் இருந்து எதில் இருந்து என்று அர்த்தம். 


துறவற இயலில், திருவள்ளுவர் சொல்லுவார் 



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


எதில் இருந்து எதில் இருந்து ஒருவன் நீங்கி இருக்கிறானோ, அதில் இருந்து அதில் இருந்து அவனுக்கு துன்பம் இல்லை என்று. .


கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலக வேண்டும். 



2 comments: