Tuesday, July 12, 2022

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு

பகவத் கீதை - 2.58 - நிலையான அறிவு 


 यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः।

इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५८॥


பாடல் 


யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|

இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/07/258.html


(pl click the above link to continue reading)


யதா = எப்படி  


ஸம்ஹரதே = இழுத்துக் கொள்கிறதோ 


சா = மேலும் 


அயம் = அது 


கூர்மோ = ஆமை 


அங்காநி = அவயங்களை 


இவ = அது போல 


ஸர்வஸ²:|= முழுமையாக 


இந்த்ரியாணீந்த்ரியார்தேப்ய  = புலன்களை 


தஸ்ய  = அவன் 


ப்ரஜ்ஞா = அறிவு 


ப்ரதிஷ்டிதா = நிலை கொண்டது 


எப்படி ஆமை தன் அவயங்களை உள் இழுத்துக் கொள்கிறதோ, அது போல் புலன்களை வெளியே செல்ல விடாமல் எவன் ஒருவன் கட்டுக்குள் கொண்டு வருகிறானோ, அவனுடைய அறிவே நிலையானது 


நமக்கு என்ன வேண்டும் என்று தெரிவதில்லை. தெரியாததால் என்ன நிகழ்கிறது என்றால் எதைப் பார்த்தாலும் அது வேண்டும், இது வேண்டும் என்று மனம் ஆசைப் படுகிறது. கிடைக்கவிட்டால் வருத்தப் படுகிறது. மற்றவனுக்கு கிடைத்து விட்டால் பொறாமைப் படுகிறது. தனக்கு கிடைத்து விட்டால், அது கை விட்டுப் போய் விடுமோ என்று பயப்படுகிறது. 


இத்தனைக்கும் காரணம் என்ன? மனம் புலன் வழியே செல்வதால். 


அந்த வீடு வேண்டும், இந்த கார் வேண்டும், அது போல் ஒருதொலைக் காட்சிப் பெட்டி வேண்டும், அவள் வைத்து இருப்பது மாதிரி நகை வேண்டும், அந்த நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்..இப்படி புலன் எல்லாவற்றிற்கும் ஆசைப் படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒன்றின் பின்னால் ஓடுகிறது. 


ஓடி ஓடி களைத்து போகிறது. 


வேண்டியதை அடைய அலைகிறது. அது கிடைத்த பின் அடுத்ததற்கு அலைகிறது. 


இந்த ஓட்டம் நிற்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கீதை கூறுகிறது. 


அறிவு அலை பாயக் கூடாது. 


அறிவு அல்லது மனம் அலைபாயக் கூடாது என்றால், அது புலன்கள் செல்லும் வழியில் செல்லக் கூடாது. 


மனதை கட்டுப் படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. 


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், புலன்களை வெளியில் செல்ல விடக் கூடாது. 


ஒரு உதாரணம் பார்ப்போம். 


இப்போது உங்களுக்கு அல்வா சாப்பிட ஆசையாக இருக்கிறதா. நான் கேட்கும் வரை அந்த எண்ணமே இருந்திருக்காது. 


உங்கள் முன்னால், ஒரு தட்டில் கொஞ்சம் அல்வாவை வைத்து விட்டு , அல்வா உண்ண ஆசையா என்றால் ஆம் என்பதுதான் பதிலாக இருக்கும். 


கண் அந்த அல்வாவை பார்க்க விடக் கூடாது. அதற்காக கண்ணை மூடிக் கொண்டே இருக்க முடியுமா? 


அது அல்ல. அல்வா இருக்கும் இடத்துக்கு புலன்களை செல்ல விடக் கூடாது. 


வீட்டில் நிறைய தின் பண்டம் வாங்கி வைத்தால், மனம் அங்கே செல்லும்.  அதைக் கட்டுப் படுத்த ஒரே வழி, தின் பண்டம் வாங்கி வைக்கமால் இருப்பதுதான். 


புலன்களை கட்டுப் படுத்துவது என்றால் அவற்ற்றை கட்டி வைப்பது அல்ல. தேவை இல்லாதவற்றை அவற்றின் முன் கொண்டு செல்லக் கூடாது. அல்லது அவை இருக்கும் இடத்துக்கு புலன்களை கொண்டு செல்லக் கூடாது. 


அப்படி போக விரும்பும் புலன்களை உள் இழுத்துக் கொள்ள வேண்டும். 


மது அருந்த ஆசை வந்தால், கால்கள் கள்ளுக் கடைக்கு இழுத்துச் செல்லும். அப்படி போகும் கால்களை போக விடாமல் நிறுத்த வேண்டும். கள்ளுக் கடையில் உட்கார்ந்து கொண்டு, புலன் அடக்கம் செய்கிறேன் என்றால் நடவாது. 


புலன்களை கட்டுப்படுத்தி விட்டால், அறிவு நிலையாக நிற்கும். 


சலனமற்ற அறிவில் இருந்து தெளிவான காட்சி பிறக்கும். 



No comments:

Post a Comment