Monday, July 18, 2022

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3

  

பகவத் கீதை - 2.59 - பற்று விட - பாகம் 3



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-1.html


https://bhagavatgita.blogspot.com/2022/07/259-2.html

)


இந்த ஸ்லோகத்தில் கீதை மூன்று விடயங்களைக் கூறுகிறது. 


முதலாவது, உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். 



இரண்டாவது, அப்படியே விலகிப் போனாலும், பழைய வாசனை காரணமாக அவை மீண்டும் வரலாம். 


மூன்றாவது, இறை அனுபவம் நிகழ்ந்தால், அந்தப் பழைய விடயங்கள் மீண்டும் வந்தாலும், அதில் ஒரு சுவை இருக்காது. மனிதன் அவற்றால் ஈர்க்கப் பட மாட்டான்.


இனி முதல் விடயத்துக்கு வருவோம். 


கீதை சொல்கிறது, "உலக விடயங்களில் ஒருவன் பற்று அற்று இருந்தால் அவை தானே விலகிப் போய் விடும். " என்று. 


நாம் ஒன்றின் மேல் பற்றை விட்டுவிட்டால் அது நாளடைவில் நம்மை விட்டுப் போய் விடும். 


சின்ன சின்ன உதாரணங்கள் பார்ப்போம்....



https://bhagavatgita.blogspot.com/2022/07/259-3.html


(Pl click the above link to continue reading)



 


வயதாகி விட்டது. சர்க்கரை மேல் உள்ள ஆசையை விட்டு விடுகிறோம். இனிப்பு பண்டங்கள் வேண்டாம் என்று தள்ளி வைக்கிறோம். 

அப்படி நினைத்தால் என்ன ஆகும்?


சர்க்கரை வாங்க மாட்டோம். ஐஸ் கிரீம் கடைகளுக்கு போக மாட்டோம். இனிப்பு பண்டங்களை வாங்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் நம் வாழ்வில் குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் முற்றும் இல்லாமல் போய் விடும். 


அது இயற்கைதானே. எது வேண்டாம் என்கிறோமோ, அதை ஏன் வைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அது நம்மை விட்டு போய்விடும். 


பிள்ளைகள் மேல் அன்பாக் இல்லாவிட்டால் அவர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்கள். 


கணவன் மற்ற பெண்களை பார்க்கிறான் என்று மனைவி வருந்தினால், காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். நாம் எதன் மேல் ஆசையை விடுகிறோமோ, அது நம்மை விட்டுப் போய் விடும். 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


மேலும் கீதை சொல்கிறது, ஆசையை விட்டாச்சு, விடயங்கள் நம்மை விட்டுப் போய் விட்டன. எல்லாம் சரிதான். இருந்தாலும், எப்போதாவது அந்த விடயங்கள் நம்மிடம் வரும் என்றால், பழைய ஆசை காரணமாக நம் மனம் அதை மீண்டும் பற்றிக் கொள்ளும். 


இனிப்பே வேண்டாம் என்று கூறி கடுமையான விரதம் இருப்பவர்கள் முன்னால், ஒரு இலட்டு, ஜிலேபியை வைத்துப் பாருங்கள். நாக்கில் எச்சில் ஊறும். ஒரு நாள்தானே. ஒரு துண்டுதானே என்று உண்டு விடுவார்கள். 


மது அருந்துவதில்லை என்று கடுமையான விரதம் இருப்பார்கள். அலுவலகத்தில் ஏதோ விழா.  நண்பர் ஒரு glaas கொடுக்கிறார். சரி, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று குடித்து விடுவார்கள். 


இதற்கு வாசனை என்று பெயர்.  ஒரு பாண்டத்தில் பெருங்காயம் போட்டு வைத்து இருப்போம். பின் ஒரு நாள் அது முற்றும் தீர்ந்து விடும். அந்தப் பாண்டத்தை முகர்ந்து பார்த்தால் பெருங்காய வாசனை அடிக்கும். அதில் இப்போது பெருங்காயம் இல்லை. ஆனால், அதன் வாசனை மட்டும் தங்கி இருக்கிறது. 


அது போல, ஆசை விட்டுப் போய் விட்டாலும், முன்பு அனுபவித்த அனுபவம் காரணமாக அவை மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும். 



எல்லாவற்றையும் துறந்து கானகம் போய் தவம் செய்த முனிவர்களை அழகிய பெண்கள் மயக்கியதாக பல கதைகள் படித்து இருக்கிறோம். 


வாசனை விடாது. 


அசை, வாசனை போகவில்லை. அதை அடக்கி வைத்து இருக்கிறோம். என்றேனும் ஒரு நாள் அது மீண்டும் வெளி வரும். 


அது வராமலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அதை விட உயர்ந்த ஒன்றில் ஆசை வந்து விட்டால், அந்த ஆசைகள் போய் விடும். பின் அவை மீண்டும் வந்தாலும், நமக்கு அதன் மேல் ஆசை வராது. 


ஏன் ஒவ்வொன்றாகப் போக வேண்டும்? உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றின் மேல் பற்று வந்து விட்டால், பின் உலகில் உள்ள அனைத்தின் மேலும் உள்ள பற்றுகள் தானே மறைந்து விடும். 


அதைப் பற்றி விட்டால் பின் உலக விடயங்களில் உள்ள பற்று விட்டுப் போய் விடும். 


அது என்னவோ துறவி, சாமியார் மாதிரி ஆகி விடாதா என்றால் இல்லை. 


நூறு ரூபாய் பெறுவதற்காக ஐந்து ரூபாயை துறப்பவனை துறவி என்றா சொல்லுவோம்?


இறைவனை அடைய இந்த சில்லறை விடயங்களை துறப்பது என்பது துறவே அல்ல. சந்தோஷமான விடயம். 


ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரையை விட்டுவிட்டால் அதனால் துன்பமா? இன்பமா? 


நோயற்ற, நீண்ட, ஆரோக்கியமான வாழக்கை வேண்டும் என்று எண்ணெய் பலகாரத்தை ஒருவன் வேண்டாம் என்று தள்ளி வைத்தால் அது ஒன்றும் பெரிய தியாகமோ, துறவோ ஆகாது. அதற்காக யாராவது வருந்துவார்களா?


அது போல், இறை அனுபவம் நோக்கி உலக விடயங்களை துறப்பது என்பது பெரிய தியாகமோ துறவோ அல்ல.


நீங்கள் நினைக்கலாம். 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்றே தெரியாது. எவ்வளவுதான் நம்பினாலும் சந்தேகம் இல்லாமல் இல்லை. ஒரு வேளை இறைவன் இருந்து, நான் அவனிடம் சேராவிட்டால், இந்த உலக இன்பமும் போய், இறை அனுபவமும் கிடைக்காமல் போய் விடலாம் அல்லவா? இருக்கும் போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட்டால் என்ன? இந்த உலக இன்பமாவது கிடைக்குமே? 


அது ஒரு சரியான சிந்தனை தான். மறுபதற்கு இல்லை. 


இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்.


இறைவன் என்று கொள்ள வேண்டாம். 


ஏதோ ஒரு உயர்ந்ததை அடைய அதை விட குறைவான ஒன்றை விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


உடல் ஆரோக்கியம் என்ற உயரத்தை அடைய கொஞ்சம் தூக்கத்தை விட்டு உடற் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நல்லதை, உயர்ந்ததை அடைய அதற்கு கீழானதை விடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள். 


அது உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே போகும் அல்லவா. 


அது வரை நல்லது தானே. 


அது ஒரு நாள் இறைவனிடம் உங்களை கொண்டு சேர்க்கலாம்.சேர்க்காமலும் போகலாம். ஆனால், நீங்கள் மிக இனிமையான, உயர்வான, ஆரோக்கியமான திருப்தியான, மகிழ்வான வாழ்வை வாழ்ந்து இருப்பீர்கள். 


அதில் சந்தேகம் இல்லையே. 


ஒவ்வொரு நாளும் சில நல்லவை வந்து சேரும், சில தீயவை விட்டு விலகும். 


அது கீதை காட்டும் வழி. 



No comments:

Post a Comment