Friday, April 14, 2017

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும்

கீதை - 3.17 - வேலையில் இன்பமும் திருப்தியும் 


यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते॥१७॥

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:|
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே ||3-17||

ய = எவன்

து = ஆனால்

ஆத்ம ரதி = தன்னில் இன்புற்று இருக்கிறானோ

எவ = நிச்சயமாக

ஸ்யாத் = இருக்கும்

ஆத்மத்ருப்த = ஆத்ம திருப்தி உள்ளவனாய்

ச = மேலும்

மாநவ: = அவன்

ஆத்மநி = தன்னில்

எவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸந்துஷ்ட = பூர்ண திருப்தியுடன்

தஸ்ய = அவனுடைய

கார்யம்= காரியங்களில்

ந = இல்லை

வித்யதே= இருப்பது

 ||3-17||

எவன் ஒருவன் தன்னிலே இன்புற்று, தன்னிலே திருப்தி அடைந்தவனாய் இருக்கிறானோ, அவனுக்கு காரியம் என்பது இல்லை. 

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது கர்ம யோகம்.

நாம் கர்மங்களை, வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை, கர்மத்தின் உயர்வை சொல்ல வந்த கீதை, எப்படி பலனை எதிர்பார்க்காமல் கர்மம் செய்ய வேண்டும் என்று சொல்ல வந்த கீதை இந்த ஸ்லோகத்தில் ஒரேயடியாக கர்மமே இல்லை என்று சொல்கிறது.

யாருக்கு கர்மம் இல்லை ? யார் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கலாம் ?

எவன் ஒருவன் தனது மகிழ்ச்சிக்காக வேலை செய்கிறானோ, அவனுக்கு வேலை என்பதே இல்லை. எவன் தன்னுடைய வேலையில் திருப்தி கொள்வானோ அவனுக்கு வேலை என்பதே இல்லை.

அது எப்படி சரியாக இருக்கும் ?

ஏனோ தானோ என்று வேலையை  செய்து விட்டு, இது தான் எனக்கு பிடித்து இருக்கிறது, இதில் தான் எனக்கு மகிழ்ச்சி என்று ஒருவன் சொல்லிக் கொண்டு திரிந்தால் , அது சரியாகுமா ?

நாம் எப்படி வேலை செய்தாலும், நமக்கு மேலே ஒரு மேலதிகாரி இருப்பான், வீட்டு வேலை  என்றால் அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் மற்றவர்கள் இருப்பார்கள். நன்றாக செய்யவில்லை என்றால் அவர்கள் முகம் சுளிப்பார்களே. அவர்களுக்காக நாம் ஒழுங்காக செய்ய வேண்டாமா ?

நாம் மற்றவர்களுக்காகவே வேலை செய்து பழகி விட்டோம்.

பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக படிக்கிறோம். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள். அலுவலகத்தில், பொது இடத்தில் என்று எல்லா இடத்திலும் மற்றவர்களுக்காகவே நாம் தொழில் செய்கிறோம்.

அப்படியே செய்தாலும், அவர்களை திருப்தி செய்யவே நாம் வேலை செய்கிறோம். நமக்கு அதில் ஒரு ஈடுபாடோ, மகிழ்ச்சியோ இல்லை. வேலை செய்யாவிட்டால் சம்பளம் வராது. எனவே ஒழுங்காக வேலை செய்வோம் என்று  இருக்கிறோம்.

கீதை அதை மாற்றுகிறது.


எந்த வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாடோடு செய்ய வேண்டும்.

இரண்டாவது, அந்த வேலை செய்வதில் நமக்கு மகிழ்ச்சி வேண்டும். செய்யும் போது இன்பமாக இருக்க வேண்டும். ஏதோ கடனே என்று செய்யக் கூடாது.

மூன்றாவது, செய்து முடித்த பின் நன்றாகச் செய்தோம் என்ற திருப்தி வர வேண்டும். அந்த திருப்தி வரும்வரை அந்த வேலையை செய்ய வேண்டும். மற்றவர்கள்  எதை வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போகட்டும்.

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதா ?

செய்யும் வேலையை திருப்தியாக செய்கிறீர்களா ?

அப்படி செய்தால், அந்த வேலை ஒரு பளுவாகத் தெரியாது உங்களுக்கு.

வேலை செய்வது போலவே இருக்காது. அது ஒரு வேலையே இல்லை மாதிரி இருக்கும்.

மகிழ்ச்சி தராத வேலையை செய்யாதீர்கள். எந்த வேலையை செய்தாலும் அது உங்களுக்கு  முழு திருப்தி தரும் வரை அதை விடாதீர்கள்.

முழு திருப்தி எப்போது வரும் ? எந்த தொழிலிலும் அதன் உச்சம் தொடும் போது வரும்.

அப்படி முனைந்து, மகிழ்ச்சியாக திருப்தி வரும் வரை வேலை செய்து பழகினால்  அது உங்களை மாற்றும். நீங்கள் மாறுவீர்கள். உங்களை அது ஒரு உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்லும்.






No comments:

Post a Comment