கீதை - 3.12 - எடுப்பதும் கொடுப்பதும்
इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः॥१२॥
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபா விதா:|
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||
இஷ்டாந் = வணங்கத்தக்க
போகாந் = போகங்களை
ஹி = அதனால்
வோ = உங்களுக்கு
தேவா = தேவர்கள்
தாஸ்யந்தே = தருவார்கள்
யஜ்ஞபாவிதா = யாகத்தில்
தைஹ் = அவர்களால்
தத்தா = தரப்பட்டவை
அப்ரதாயை = தராமல்
ப்யோ = அவர்களுக்கு
யோ = எவன்
புங்க்தே = அனுபவிக்கிறானோ
ஸ்தேந = திருடன்
ஏவ = நிச்சயமாக
ஸ: = அவன்
||3-12||
யாகத்தில் (வேள்வியில்) அர்ப்பணிக்கப்பட்ட தேவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய போகங்களைத் தருவார்கள். அவர்களுக்கு படைக்காமல் அந்த போகங்களை அனுபவிப்பவன் திருடனுக்கு சமமாவான்.
யாகம் , தேவர்கள், படைத்தல், அர்பணித்தல் என்ற வார்த்தைகள் கொஞ்சம் அலுப்பைத் தரும்.
எங்கு போய் யாகம் செய்வது, எந்த தேவருக்கு அர்ப்பணம் செய்வது. அப்படி அர்ப்பணம் செய்யாமல் அனுபவித்தால் நாம் திருடர்கள் ஆவோம் என்று வேறு கீதை சொல்கிறது.
இவை நடைமுறை சாத்தியங்களா ?
இந்த "தேவா" என்பதை நாம் சற்று பொதுப்படையாக பார்ப்போம். தேவர்கள் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள். யார் நமக்கு வேண்டியதைத் தருகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தால் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த தேவனையும் காணோம்.
ஆனால், நமக்கு அனைத்தும் தருவது, நம்மை சுற்றி உள்ள இயற்கை.
மழை தருகிறது. பயிர்கள் விளைகின்றன, சூரிய ஒளியால் உலகம் இயங்குகின்றது. காற்று நாம் சுவாசிக்க உதவுகிறது. இப்படி நீர், காற்று, நிலம் என்று இயற்கை நாம் வாழ வழி செய்கிறது.
அந்த இயற்கை தான் தெய்வம். நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக கொண்டாடினார்கள். வருண பகவான், அக்கினி பகவான், வாயு பகவான் என்று.
அந்த தேவர்களுக்கு யாகத்தில் அர்ப்பணம் செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வேண்டிய போகங்களைத் தருவார். அப்படி அர்ப்பணம் செய்யாமல் உண்பவன் திருடன் என்ற இந்த ஸ்லோகத்தில் தேவர்கள் என்று என்ற இடத்தில் இயற்கை என்று வைத்துப் பாருங்கள்.
கச்சிதமாக பொருந்தும்.
இதை பல கோணங்களில் நாம் அணுகலாம்.
முதலாவது....இன்று நாம் சுற்று சூழல் பற்றியும், உலகம் வெப்பமாவதை பற்றியும் விவாதிக்கிறோம். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது, மரங்கள் அழிக்கப் படுவதால் மழை குறைகிறது, வெப்பம் அதிகமாகிறது, பெட்ரோல் போன்ற எரி பொருள்கள் குறைந்து கொண்டே வருகிறது என்று பலவிதமான விவாதங்கள் நிகழ்கின்றன.
இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ன ? நாம் இயற்க்கை வளங்களை சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். மரம் வெட்டும் போது புது மரம் நடுவது இல்லை. நிலத்தடி நீரை எடுக்கும் போது , அதை திருப்பி செலுத்தவேண்டும் என்று நினைப்பது இல்லை. காடுகளை அழித்து நாடாக்கும் போது, புதியதாய் காடுகளை உருவாக்குவது இல்லை.
இப்படி நமது சுற்று சூழலில் இருந்து எடுத்துக் கொண்டே இரூந்து விட்டு, திருப்பி தராவிட்டால் நாம் கள்வர்கள் ஆவோம் என்கிறது கீதை.
சரிதானே...கள்வர்கள் ஒரு வீட்டில் புகுந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறார்கள். திருப்பி எதுவும் தருகிறார்களா ? இல்லையே ? அது போல் நாமும் இந்த சுற்று சூழலில் இருந்து, இயற்கையில் இருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறோம். திருப்பி தருவது இல்லை.
நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து திருடுகிறோம். அவர்களுக்கு வேண்டிய பெட்ரோல், கரி, காட்டு வளம் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு பதிலுக்கு ஒன்றும் தருவதில்லை. எவ்வளவு பெரிய கள்வர்கள் நாம். நம் பிள்ளைகளிடம் இருந்தும், பேரப் பிள்ளைகளிடம் இருந்தும் திருடுகிறோம்.
இரண்டாவது சிந்தனை ....
நாம், நமது சமுதாயத்தில் இருந்து சில பொருட்களை, சேவைகளை (services ) பெற்றுக் கொள்கிறோம். அந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பி செய்கிறோமா ? நாம் எடுப்பதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். அப்படி பட்ட சமுதாயம் நாளும் வளரும். எல்லோரும் கொடுப்பதை விட எடுப்பது அதிகமானால் அந்த சமுதாயம் நாளடைவில் சீரழியும்.
நாம் நம்மை சுற்றி பார்க்கலாம் . எந்த சமுதாயம் கடினமாக உழைத்து மேலும் மேலும் உற்பத்தி செய்கிறதோ, அது நன்றாக செழித்து வளர்கிறது. உழைக்காமல் உண்ணும் நாடோ, சமுதாயமோ நிறைய நாட்களுக்கு அப்படி செய்ய முடியாது.
கர்ம யோகம் பற்றி சொல்ல வந்த கீதை இரண்டு விஷயங்களை சொல்கிறது ....
நீ வேலை செய்யும்போது, சுயலமற்று (வேள்வியில்) வேலை செய்யும் போது , நீ சார்ந்த இயற்கை (தேவர்கள்) மற்றும் சுற்று சூழலில் இருந்து நீ பொருட்களை உபயோகப் படுத்த வேண்டி வரும். அது தவறு இல்லை.இயற்கை உனக்கு வேண்டிய எல்லாம் தரும். ஆனால் எடுத்ததை திருப்பி கொடு.
இரண்டாவது, உன்னால் உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியாது. இந்த சமுதாயத்தில் இருந்து நீ சிலவற்றை பெற்றுக் கொள்ள வேண்டி வரும். தவறில்லை. நீ பெற்றுக் கொண்டதற்கு மேலாக திருப்பி கொடு.
எது வேள்வி - சுயநலமற்ற கர்மா வேள்வி
யார் தேவர்கள் - இந்த இயற்கை - பூமா தேவி, கங்காதேவி, காவிரித் தாய், வாயு தேவன் , அக்னி தேவன், வருண தேவன், என்று நம்மை சுற்றியுள்ள இயற்கை ஒவ்வொன்றும் ஒரு தேவர், தேவதை தான்.
அர்ப்பணம் செய்யாமல் - நமக்கு அந்த இயற்கையில் இருந்து கிடைத்ததை கொஞ்சம் திருப்பி தராமால் எடுத்துக் கொண்டே இருத்தல்.
இது உங்களுக்கு சரி என்று படாவிட்டால்....மற்றவர்களின் உறையும் தருகிறேன் . படித்துப் பாருங்கள்
மனிதன் இயற்கை மற்றும் தான் சார்ந்து வாழும் சமுதாயம் இரண்டையும் போற்ற வேண்டும். மதிக்க வேண்டும். அவற்றில் இருந்து எடுப்பதை விட கொடுப்பது அதிகம் இருக்க வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள்.
எடுப்பது அதிகமா. கொடுப்பது அதிகமா என்று.
தனி மனிதனை ஒழுங்கு படுத்துவதன் மூலம் கீதை ஒரு சமுதாயமும், நாடும் வாழ வழி சொல்கிறது.
No comments:
Post a Comment