கீதை - 3.14 - மழை போல் கர்மாவைச் செய்
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥१४॥
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:|
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: ||3-14||
அந்நாத் = உணவு
பவந்தி = இருக்கிறது
பூதாநி = உயிர்களுக்கு
பர்ஜந் = மழையின் மூலம்
அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது
யஜ்ஞாத் = வேள்வியினால்
பவதி = இருக்கிறது
பர்ஜந்யோ = மழையின்ய மூலம்
யாங்கய = வேள்வியின் மூலம்
கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது
உணவால் உயிர்கள் வாழ்கின்றன. உணவு மழையின் மூலம் வருகிறது. மழை வேள்வியின் மூலம் வருகிறது.
உணவால் உயிர்கள் வாழ்கின்றன - சரி, புரிகிறது
உணவு மழையின் மூலம் வருகிறது - சரி , புரிகிறது.
மழை, வேள்வியின் மூலம் வருகிறது = இல்லை. இது புரியவில்லை.
வேள்விக்கு மழைக்கும் என்ன சம்பந்தம் ? வேள்வி செய்தால் மழை வருமா ?
உனவு, உயிர், மழை, வேள்வி என்பது எல்லாம் ஒரு உருவகம்.
மழையின் குணம் என்ன ?
பிரதி பலன் பாராமல் பெய்வது. இவ்வளவு பெய்தால் , எவ்வளவு கிடைக்கும் என்று மழை எதிர் பார்ப்பதில்லை. பெய்வது அதன் குணம். அது இயற்கையாக இருக்கிறது.
அது மட்டும் அல்ல, மழை வேண்டியவன் வேண்டாதவன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், பணக்காரன் ஏழை , படித்தவன் முட்டாள் என்று பாகு பாடு பார்ப்பது இல்லை. எல்லோருக்கும் ஒன்றாய் பெய்கிறது.
தன்னலமில்லாமல் எல்லோருக்கும் வேண்டி செய்யும் எந்த கர்மமும், வேலையும் மழை போன்றதுதான்.
உணவு என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.
அப்படிப்பட்ட சேவையால் வாழ்க்கைக்கு வேண்டியது கிடைக்கிறது.
அதன் மூலம் உயிர்கள் வாழ்கின்றன.
அந்த தன்னலமற்ற உழைப்பு இல்லாவிட்டால் உற்பத்தி இல்லை. உற்பத்தி இல்லாவிட்டால் உயிர்கள் வாழ முடியாது.
உணவு உற்பத்தி மட்டும் அல்ல. எந்த உற்பத்திக்கும் இது பொருந்தும்.
தொழிற்சாலைகள், கதவடைப்பு (strike ) போன்றவை இல்லாத காலத்தில் எழுதப் பட்டது கீதை.
தொழிலாளிகளும், முதலாளிகளும் சுயநலத்திற்காக போராடி தொழிற்சாலைகளை மூடும் போது (சம்பள உயர்வு, ஊக்கத் தொகை என்று பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு) உற்பத்தி நிற்கிறது. உற்பத்தி நின்று போனால், உயிர்கள் துன்பப்படும்.
மழை என்பது விளை பொருட்களை உருவாக்கும் ஒரு சூழ்நிலை. அந்த சூழ்நிலை வேள்வியால் - சுயநலமற்ற சேவையால் உருவாகிறது.
இதை படிக்கும் போது கீதை ஏதோ தொழிளார்களுக்கு எதிரான, ஒரு முதலாளித்துவ நோக்கம் கொண்ட நூல் போல தோன்றலாம்.
சுயநலமற்ற என்று கூறிய கீதை அதை எல்லோருக்கும் பொதுவாக கூறியது. முதலாளிக்கும், தொழிலாளிக்கும் பொதுவாக கூறியது.
அவர்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொவொரு நபருக்கும் ....
பெற்றோர் , ஆசிரியர், மருத்துவர், பிள்ளைகள், அரசன், வீரர்கள் என்று எல்லோருக்கும் பொதுவாக கூறியது.
சுயநலம் இன்று கல்வியை, மருத்துவத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது ?
பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள்.
சகோதரர்கள் நீதி மன்ற படி ஏறுகிறார்கள்.
கணவன் மனைவி விவாகரத்து கோருகிறார்கள்.
தொழிலாளிகள் வேலை செய்ய மறுக்கிறார்கள்.
முதலாளிகள் கூலி தர மறுக்கிறார்கள்.
அரசாங்க ஊழியர்கள் வேலை செய்ய இலஞ்சம் கேட்கிறார்கள்.
திருட்டு, கொள்ளை, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கற்பழிப்பு என்ற அத்தனை சமுதாய நோய்களுக்கும் காரணம் - சுயநலம்.
எல்லாம் சுயநலம்.
சமுதாய சீரழிவுக்கு காரணம் - சுயநலம்.
இதை வேரோடு அறுக்க முயல்கிறது கீதை.
யோசித்துப் பாருங்கள், இதை விட ஒரு சிறந்த வழி இருக்குமா என்று ?
ஆண்டாண்டு காலத்திருக்கும் பலன் தரும் முறை இது.
எத்தனை ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் தீராத பிரச்சனைகளை ஒரே ஒரு ஸ்லோகத்தில் தீர்கிறது கீதை.
மழை போன்ற தன்னலமற்ற சேவையால், உணவு போல உயிர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். அதன் மூலம் உயிர்கள் வாழும்.
எப்படி சுயநலம் இல்லாமல் வேலை செய்ய முடியும் ?
மீண்டும் இந்த ஸ்லோகத்தை பார்ப்போம்.
மழை பொழிகிறது. அது பிரதி பலன் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும், பெய்த மழை ஆவியாகி மீண்டும் மேகத்திற்கே வந்து சேர்கிறது. அது எதிர் பார்க்காவிட்டாலும் அதற்கு கிடைக்கிறது.
அது போல, பலனை எதிர் பார்க்காவிட்டாலும், சுயநலமற்ற சேவைக்கு பலன் எப்படியோ வந்து சேரும். அதைப் பற்றி நீ கவலைப் படாதே என்கிறது கீதை.
No comments:
Post a Comment