கீதை - 3.15 - காரியங்களின் தன்மை
कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்|
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் ||3-15||
கர்ம = செயல்கள்
ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது
வித்தி = என்று உணர்
ப்ரஹ்மம் = ப்ரம்மம்
அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய) =
ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது
தஸ்மாத் = எனவே
ஸர்வகதம் = எங்கும் நிறைந்த
ப்ரஹ்ம = பிரமம்
நித்யம் = நிரந்தரமாக இருக்கும்
யஜ்ஞே = யாகத்தில்
ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது
||3-15||
கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் இருக்கிறோம். இது கர்ம யோக அத்யாயம்.
நாம் செய்யும் வினைகளை பற்றி பேசுகிறது இந்த அத்யாயம். இதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் புனிதத் தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும்.
செயல்கள் பிரமத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொன்னால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவ்வளவு உயர்ந்தது. பிரம்மத்திர்க்கு இணையானது. இது ஒரு அர்த்தம்.
இன்னொரு அர்த்தம், ஒவ்வொரு செயலின் விளைவுகளும் மிக நீண்ட காலத்திற்கு இருக்கப் போவது. சாஸ்வதமானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், இந்த உலகத்தின் போக்கை நிரந்தரமாக மாற்றி விடுகிறீர்கள். செயல்கள் தொடர் விளைவினை கொண்டவை ஒன்றிலிருந்து ஒன்றாக அவை நீண்டு கொண்டே போகும். எப்படி பிரமத்தில் இருந்து எல்லாம் தோன்றியதோ, அது போல உங்கள் செயல்கள் இனி வரப் போகும் எத்தனையோ விளைவுகளுக்கு வித்திடும்.
இது, அடுத்த வரியில் இன்னும் தெளிவாகும்.
பிரமம் அமிர்தத்தில் இருந்து தோன்றுவது.
அமிர்தம் இறவா நிலை தருவது. அதில் இருந்து வரும் பிரமமும் இறவா நிலை கொண்டது. அதில் இருந்து வரும் உங்கள் செயல்களும் இறவா நிலை கொண்டவை.
ஒரு காரியம் செய்யுமுன் அந்த காரியத்தின் நீண்ட கால விளைவு (long term effect ) என்ன என்று ஆய்ந்து செய்யுங்கள்.
ஏதோ, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள்.
நிறுத்தி, நிதானமாக, தீர ஆராய்ந்து சிறப்பாக செய்யுங்கள்.
நான் செய்யும் இந்த காரியம் யுக யுகத்திற்கும் தொடரும் என்ற நினைவோடு செய்யுங்கள்.
எத்தனையோ தலைமுறை இதனால் பாதிக்கப் படப் போகிறது என்று எண்ணி செய்யுங்கள்.
செயல்களுக்கு ஒரு புனிதத் தன்மை, ஒரு நீண்ட கால நோக்கு இவை இரண்டும் இருக்க வேண்டும்.
இது முதலில் தீய செயல்களை விலக்கும் .
நான் செய்யும் இந்த திருட்டுத் தொழில் மிகப் புனிதமானது என்று யாராவது நினைக்க முடியுமா ?
இப்படி எந்த தவறான தொழிலும் புனிதத் தன்மை பெற முடியாது.
இரண்டாவது, ஒரு நல்ல காரியம் செய்யும் போது அது நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நினைவோடு செய்ய வேண்டும்.
எங்கும் நிறைந்த இந்த பிரமம் சுயநலமற்ற கடமைகளை செய்வதில் அடங்கி இருக்கிறது.
யாரவது, மக்களின் பொது நலத்திற்க்காக நான் இந்த வங்கியை கொள்ளை அடிக்கிறேன் என்றோ, பொது நலத்திற்க்காக நான் கற்பழிக்கிறேன் என்றோ சொல்ல முடியுமா.
சுயலமற்ற அந்த செயல்களில் பிரமம் நிறைந்து இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு செயலையும் நாம் அணுகும்போது சில நிகழ்வுகள் ஏற்படும்:
1. எல்லா செயலும் புனிதமானது என்றால், அதை செய்பவர்களும் நல்லவர்கள் என்ற எண்ணம் வரும்.
2. நல்ல காரியங்களுக்கு துணை போகும் எண்ணம் வரும்.
3. முடியாவிட்டால் அதை கெடுக்கும் எண்ணம் வராது
4 நல்ல காரியங்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். படித்தால் முதல் மாணவனாக வர வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
5. செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் ஏற்படும்.
6. தொழிலில் ஏற்ற தாழ்வு பாராட்ட தோன்றாது
7. தொழிலின் மகத்துவம் விளங்கும் (diginity of labour )
நீங்கள் ஒரு மரத்தை நடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வளர்ந்து, பல விதைகளைத் தரும். அதில் இருந்து இன்னும் பல மரங்கள் வரும்.
நீங்கள் ஒரு மரத்தை வெட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து எத்தனையோ மரங்கள் வந்திருக்கலாம். அனைத்தையும் நீங்கள் நிறுத்தி விட்டீர்கள்.
மரம் மட்டும் அல்ல.
நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்கிறீர்கள். வீடு கட்டுகிறீர்கள். இப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறீர்கள். அனைத்தும் நீண்ட கால தாக்கம் கொண்டவை.
எந்த கர்மாவும் அதோடு போய் விடுவது இல்லை. எந்த கர்மாவுக்கும் ஒரு நீண்ட தொடர்ச்சி உண்டு.
எவ்வளவு உயர்ந்த விசயங்கள் இந்த இரண்டு வரியில் இருக்கிறது. காலம் காலமாய் வழி காட்டும் வாசகங்கள்.
No comments:
Post a Comment