கீதை - 16.4 - அசுர சம்பந்தம்
दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम् ॥१६- ४॥
த³ம்போ த³ர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச |
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||
தம்போ = தம்பம்
தர்போ = இறுமாப்பு
அபிமாந = கர்வம்
ச = மேலும்
க்ரோத: = கோபம்
பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஜ்ஞாநம் = அறிவீனம்
சா = மேலும்
அபிஜாதஸ்ய = பிறந்தது
பார்த = பார்த்தா
ஸம்பதசம் = சம்பந்தம் உள்ளது
அஸுரீம் = அசுர குணங்கள்
டம்பம், இறுமாப்பு, கர்வம், கோபம் , கடுமை, அஞ்ஞானம் போன்ற குணங்கள் அசுர சம்பந்தம் உள்ளவர்களிடம் காணப் படுகிறது.
முதலில் தெய்வ சம்பந்தமான குணங்களை கூறிய கீதை , அடுத்து அசுர சம்பந்தமான குணங்களை கூறுகிறது.
நல்லதை மட்டும் சொல்லி விட்டு விட்டால், தீயதை இனம் காண முடியாமல் போகும். எனவே, தீய குணங்களையும் பட்டியல் போடுகிறது கீதை.
டம்பம் ...இதற்கு வஞ்சனை, சூது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்று சொல்லலாம்.
அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று வைத்து பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
என்பார் வள்ளலார்.
உள்ளும் புறமும் ஒன்றாக இருந்து விட்டால், நாட்டில் ஒரு குழப்பமும் இருக்காது. மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றை சொல்வதால்தான் அத்தனை சிக்கல்களும்.
உள்ளே நினைப்பதை எல்லாம் எப்போது வெளியே சொல்ல முடியும் ?
நினைவு ஒழுங்காக இருத்தால், நினைப்பதை வெளியில் சொல்ல முடியும்.
"நினைவு நல்லது வேண்டும் " என்றார் பாரதியார்.
மனம் தூய்மையாக இருந்தால், வெளிப்படும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்.
தர்பா ..இறுமாப்பு ..அகந்தை திமிர்.
நான் தான் எல்லாம், என்னால் தான் எல்லாம் என்ற அகந்தை. கர்வம் போக வேண்டும். கர்வம் வரும் போது அரக்க குணம் வெளிப்படும்.
குரோதம் - கோபம்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர். சினம் தன்னைச் சேர்ந்தவர்களை கொல்லும் . யாரிடம் சினம் இருக்கிறதோ, அவர்களின் சுற்றத்தையும் கொல்லும்.
மற்ற அனைத்து குற்றங்களும் வெளியில் இருந்து உள்ளே வருவன. காமமும், கோபமும் உள்ளிருந்து வெளியே செல்லும் குற்றங்கள்.
தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்ட விஸ்வாமித்ரன் கூறுவான் "கானகத்தில் முனிவர்கள் செய்யும் யாகத்தை கெடுக்க காமம் மற்றும் கோபம் போன்ற தீய குணங்கள் போல அரக்கர்கள் வந்து இடையூறு செய்கிறார்கள்...."
“தரு வனத்துள் யான் இயற்றும்
தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.
காமமும் கோபமும் அவ்வளவு தீய குணங்கள். அசுரர்கள் யாகத்தை கலைப்பது போல நம் வாழ்க்கை என்ற தவத்தை கலைக்கும் அசுரர்கள் இந்த காமமும் கோபமும்.
பாருஷ்ய = கடுமை, முரட்டுத் தானம்
கோபம் வரும் போது மற்றவர்கள் பக்கம் உள்ள ஞாயம் தெரியாது. நாம் சொல்வதே சரி என்று அடம் பிடிக்கத் தோன்றும். மற்றவர்களின் மனதை வார்த்தைகளால் , செயல்களால் வருத்தம் அடையச் செய்வோம்.
மற்றவர்களை துன்பப் படுத்துவதுதானே அசுரர்களின் குணம்.
முரட்டுத்தனம் வரும்போது நாமும் அசுரர்கள் ஆகி விடுவோம்.
எதிலும் ஒரு மென்மையை கடைபிடிக்க வேண்டும்.
அறிவீனம்....தன்னை அறியாத அறிவீனம், தன்னை சுற்றி உள்ள உலகை அறியாத அறிவீனம், தனக்கும் தன்னை சுற்றி உள்ளவற்றிற்கும் உள்ள தொடர்பை, உறவை அறியாத அறிவீனம். இந்த அறிவு இல்லாமல் மனிதன் பல தவறுகளை செய்கிறான்.
அனைத்து தீய குணங்களுக்கும் அடிப்படை காரணம் அறிவீனம்.
ஞானத்தை வளர்ப்போம். அசுர குணங்களை விட்டு தெய்வ சம்பத்தை அடைவோம்.
அடைய வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment