Wednesday, August 3, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 4

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 4


श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||


ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாய = படித்து ஆராய்ந்து 

ஸ்தப = தவம் செய்து 

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, படித்து ஆராய்ந்து, தவம் செய்து, நேர்மை மற்றும் எளிமை. 


தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

புலனடக்கம் ...புலன்களை அடக்கவில்லை என்றால் அது தன் விருப்பத்துக்கு நம்மை  இழுத்துக் கொண்டு போய் விடும். 

போனால் போகட்டுமே. அதனால் என்ன. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத்தானே. எதற்காக அதை அடக்க வேண்டும் ? 

சட்டத்திற்கு உட்பட்டு, சமுதாய எல்லைகளுக்குள் இன்பத்தை அனுபவித்தால் என்ன ?

நாம் நமது புலன்களை இரண்டு விதத்தில் பயன் படுத்தலாம். ஆக்க பூர்வமாகவும் பயன்  படுத்தலாம். அழிவு வழியிலும் பயன்படுத்தலாம். புலன்களின் தன்மை இன்பத்தை  நுகர்வது. அதை கட்டுப் படுத்தாவிட்டால் அளவுக்கு அதிகமாக இன்ப நுகர்ச்சியில் சென்று , அழிவை அடைவோம். 

சுவையான தின் பண்டங்களை உண்பது நல்லதுதான். இனிமையானது தான். அதற்காக கண்டதையும் உட்கொண்டால், ஆரோக்கிய கேடு நிகழும். 

மேலும், நமது புலன்களை இன்பம் அனுபவிக்க மட்டும் பயன் படுத்தாமல் , நம் அறிவை வளர்த்துக் கொள்ள, வாழ்வில் உயர பயன் படுத்தலாம். 

கீதை இன்பம் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. 

புலன்களை எவ்வளவு தூரம் இன்பம் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும், எவ்வளவு தூரம்  ஆக்கபூர்வமான வழியில் செலுத்துவது என்று அறிந்து அதை செலுத்துவதே புலனடக்கம் என்பது. 

தன்னலமின்மை...புலனடக்கம் எப்படி வரும் ? புலன்கள் எப்போதும் இன்பம் வேண்டும் இன்பம் வேண்டும் நம்மை தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவு நேரம் தான் அவற்றோடு சண்டை போடுவது ? புலன்களை எப்படி அடக்குவது ? புலன்களை அடக்கி , அளவோடு இன்பம் அனுபவிக்க அனுமதித்து , அவற்றை ஆக்க பூர்வமான வழியில் செலுத்துவது எப்படி ? 

அதற்கும் கீதை வழி சொல்கிறது. 

தன்னலமின்மை. எப்போது சுயநலம் தலை தூக்கி நிற்கிறதோ, அப்போது உலகில் உள்ள அனைத்து இன்பங்களும் நமக்கே வேண்டும் என்று மனம் ஆலாய் பறக்கும். அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்தும் வேண்டும் என்று தாவித் திரியும்.

புலனடக்கத்திற்கு வழி தன்னலமின்மை. நமக்கு கிடைத்த இன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது புலன் இன்பத்தில் அமிழ்ந்து போகாமல் இருக்க முடியும். 

பகிர்ந்து அனுபவிக்கும் போது , ஒன்று நாம் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க மாட்டோம். இன்னொன்று, மற்றவர்கள் சந்தோஷப் படுவதை பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. 

தானத்தின் ஒரு வகை தான் சுயநலமின்மை. தானமும், சுயநலமின்மையும் சேரும்போது புலனடக்கம் தானே வரும். 

வீட்டில் இனிப்பு செய்தால், அண்டை அயல் வீட்டுக்கு கொடுத்து உண்டால், அனைத்தும் நாமே உண்டு அதனால் வரும் ஆரோக்கிய குறைவை தவிர்க்கலாம். அவர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மோடு சினேகமாக இருப்பார்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் நட்புடன் வாழ இந்த சுயநலமின்மை உதவும். 

மேலும், சுயநலம் வருவதால் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு நடுவில் விரிசல், சகோதர்களுக்கிடையே புகைச்சல், சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்கும் இன்னோர் பிரிவினருக்கும் பகை வருகிறது. சுயநலமில்லாத சமுதாயம் மிக உயர்ந்த சமுதாயமாக இருக்கும்.

அதுவே கீதை காட்டும் வழி. 


படித்து ஆராய்ந்து ...எதையும் படித்து அப்படியே கடை பிடிக்கச் சொல்லவில்லை கீதை. படித்ததை தீர ஆராய்ந்து, சரி தவறு எது என்று அறிந்து பின் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் வியாசர் சொல்கிறேன், கேள் என்று கீதை அறிவுறுத்தவில்லை.


தவம் செய்து .... நமது உடலில் ஓரளவு சக்தி உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது ? உலக இன்பங்களை அடைய அதை பயன்டுத்தலாம். அதே சக்தியை கொண்டு நான் யார், இந்தப் பிறவியின் நோக்கம் என்ன என்று அறிய முற்படலாம். பின்னது தவம் என்று சொல்லப் படுவது. தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , புற்று மேலே வளரும்படி ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் ஒன்று அல்ல. உயர்ந்த நோக்கங்களுக்காக நமது சக்தியை செலவிடுவதும் ஒரு விதத்தில் தவம் தான். 


நேர்மை மற்றும் எளிமை ...எளிமையாக இருக்கும்போது புலனடக்கம் தானே வரும். புலனடக்கம் வரும் போது தானம் கை  கூடும். சுயநலம் போகும். சுயநலம் இல்லாத இடத்தில் நேர்மை தானே வரும். 

இந்த ஸ்லோகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்து சிந்தித்து வாழ்வில் நடைமுறை படுத்த வேண்டிய ஒன்று.

முடிந்தவரை முயற்சியுங்கள்.

நல்லதே நடக்கும். 

http://bhagavatgita.blogspot.com/2016/08/161-4.html

No comments:

Post a Comment