Thursday, August 18, 2016

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3

கீதை - 16.3 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3


तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌ²சமத்ரோஹோ நாதிமாநிதா |
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத || 16- 3||

தேஜ: = தேஜஸ், ஒளி

க்ஷமா = மன்னிக்கும் குணம்

த்ருதி: = உறுதி

ஸௌ²சமத் = தூய்மை

அ த்ரோஹ = த்ரோஹமின்மை

 நா = இல்லை

அதி மாநிதா = கர்வம் , ஆணவம்

பவந்தி = இவை

ஸம்பதம் = அடைதல்

தைவம் = தெய்வம்

அபிஜாதஸ்ய = தொடர்பு உடையவனாகிறான்

பாரத = பாரத குல தோன்றலே


ஒளி, மன்னிக்கும் மனம்,  உறுதி, சுத்தம், துரோகமின்மை , கர்வம் இன்மை  போன்ற இந்த குணங்கள் தெய்வ சம்பத்தை அடைந்தவனிடம் காணப்படுகின்றன. 


ஒளி ... உடல் ஒளி விடுமா ? விடும் என்று சொல்கிறார்கள். ப்ரதீப என்று ஒரு   இராஜா இருந்தார். தீபம் போல ஒளி விடுமாம் அவர் உடல்.

இராமன் கானகம் போகிறான். பட்டுடை இல்லை, தங்கக் கிரீடம் இல்லை, ஒரு பகட்டும் இல்லை. இருந்தும் அவன் உடல் ஒளி விட்டதாம். அந்த ஒளியில், சூரியனின் ஒளி மங்கிப் போய்விட்டதாம்.


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

வெய்யோன் ஒளி என்றால் சூரியனின் ஒளி, இராமனின் உடலில் இருந்து கிளம்பும்  ஜோதியின் தோற்றத்தில் மறைந்து போனதாம்.  இராமனின் மேனி அவ்வளவு பிரகாசம் கொண்டது. சூரிய ஒளியை மங்க வைக்கும் அளவுக்கு பிரகாசமானது.

அது சத்தியத்தின் ஒளி. அஞ்ஞானத்தை போக்கும் ஞான ஒளி.



மன்னிக்கும் குணம் ....பிறர் செய்யும் தவறுகளை, குற்றங்களை  மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள் , ஒன்று வருந்துவார்கள் அல்லது  எப்படி தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு  விடிவு காண்பது என்று பழி வாங்கத் துடிப்பார்கள்.

ஏதோ கையாலாகாமல் பொறுத்துப் போவது அல்ல பொறுமை. தனக்கு தீமை செய்தவர்களை தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தண்டிக்காமல் இருப்பது தான் மன்னிக்கும் குணம்.


பொறுமை என்பது மிகப் பெரிய வலிமையான குணம் என்கிறார் வள்ளுவர்.


இன்மையுள்  இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.


துன்பத்தில் பெரிய துன்பம், வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிக்க முடியாமல் போவது .  வலிமையான குணங்களில் பெரிய வலிமை மிக்க குணம்  பொறுமை ஆகும்.

பாரதம் காட்டும்   மிகப் பெரிய பொறுமையை.

நாடிழந்து, வீடிழந்து , தம்பியரை இழந்து , தாரத்தையும் இழந்து நிற்கிறான் தர்மன். மனைவியை மான பங்கம் செய்ய நினைக்கிறான்  துரியோதனன். அப்போதும் பொறுமையாக இருக்கிறான் தர்மன். நினைத்து பார்க்க முடியுமா ?

கொதித்து எழுந்த பீமன் சொல்லுவான், துரியோதனின் துரோக சிந்தனையை விட உன்  அற சிந்தனைக்கு அஞ்சினேன் என்று.

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான் பீமன். 

மன்னிக்கும் குணம் எதோ இயலாமையில் வந்த , பலவீனமான செயல் என்று   எண்ணி விடாதீர்கள். மிக மிக பலம் வாய்தவர்களால் தான் மன்னிக்க முடியும். 

உறுதி ...உடலில் மட்டும் அல்ல, உள்ளத்திலும். பெரும்பாலானோருக்கு படிக்க படிக்க உறுதி குறையும். குழப்பம் அதிகமாகும். எதைச் செய்வது, எப்படி செய்வது என்று  தெரியாமல் குழப்புவார்கள். அந்த குழப்பத்தில் மேலும் படிப்பார்கள். மேலும் குழப்புவார்கள். எதிலும் உறுதி கிடையாது. படித்ததை எல்லாம் ஊருக்குச்  சொல்லுவார்கள்.தங்கள் வாழ்வில் எதை கடை பிடிப்பது என்று தெரியாமல் தவிப்பார்கள். 

கீதையை வாசிப்பார்கள். பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள். அதை நடை முறையில்   கடை பிடிப்பார்களா என்றால் "இதெல்லாம் நடை முறைக்கு சாத்திய படாது" என்று கூறி தள்ளி வைத்து விடுவார்கள். 

அவர்களை போன்ற முட்டாள் உலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். 

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்கா பேதையரில் பேதையர் இல் 

தீயவர்களுக்கு தீமை செய்வதில் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நன்மை செய்வதில் இருப்பது இல்லை. உலகில் உள்ள பல சிக்கல்களுக்கு அதுவே காரணம்.

சரி என்று மனதிற்குப் பட்டதை, உறுதியுடன் செயல் படுத்துங்கள். வெற்றி உங்களதே


http://bhagavatgita.blogspot.in/2016/08/163-3.html

No comments:

Post a Comment