Monday, August 15, 2016

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம் - பாகம் 2

கீதை - 16.2 தெய்வ சம்பந்தம் - பாகம் 2 



अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥

அஹிம்ஸா ஸத்யமக்ரோத ஸ்த்யாக: ஸாந்திரபைஸு²நம் |
த³யா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் || 16- 2||


அஹிம்ஸா = அஹிம்ஸை

ஸத்யம்ஸ = சத்யம்

அக்ரோத = கோபமின்மை

தியாகம் = தியாகம், துறவு

ஸாந்தி = அமைதி

அபைஸு²நம் = நேர் வழி, குறுக்குத் தன்மை யில்லாத

தயா = தயை

பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

அலோலுப்த்வம் = ஆசை இன்மை

மார்தவம் ஹ்ரீ = மென்மை

அரசாபலம் = சலனம் இன்மை


அகிம்சை, வாய்மை, கோபம் இல்லாமை, தியாகம்,  அமைதி, வன்மை , உயிர்கள் மேல் தயை , ஆசை இன்மை,  மென்மை, நாணுடைமை, விடா முயற்சி


எந்தெந்த நல்ல  குணங்கள் இருந்தால், அல்லது கெட்ட குணங்கள்  இல்லாவிட்டால் நாம் தெய்வ  சம்பந்தம் பெறுவோம் என்று கீதை பட்டியல் தருகிறது.

தொடரும் பட்டியல்


அமைதி...அகிம்சை, வாய்மை, கோபம் இளமை, தியாகம் என்று இவற்றை  எல்லாம் செய்தால், வாழ்வில் எதையோ இழந்த மாதிரி ஒரு   ஏக்கம் இருக்கும். தியாகம் செய்து விட்டு வாழ்வில் எதை அனுபவிப்பது ? ஒரு வேளை இந்த கீதை சொல்வது நடை முறைக்கு சரி வராதோ   என்ற  சஞ்சலம் வரலாம். சந்தேகம் வரலாம்.

அமைதி எப்போது வரும் ? தியாகமும் துறவும் மன மகிழ்வை தந்தால் , அதில் இருந்து அமைதி வரும். இல்லை என்றால் ஏக்கம் தான் வரும்.

அபைஸு²நம் = நேர் வழி, குறுக்குத் தன்மை யில்லாத


மனதில் குறுக்கு புத்தி எப்போது வரும் ? தவறான எண்ணங்களும், தீய எண்ணங்களும் மனதில் இருந்தால் குறுக்கு புத்தி வரும். எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனமும் செயலையும் ஒழுங்காக இருக்கும். 


தயா = தயை
பூதேஷு = புவியில் உள்ள உயிர்களிடம்

உயிர்களின் மேல் கருணை. உள்ளத்தில் அன்பிருந்தால் கருணை தானே வரும். கருணை என்பது ஏதோ ஏழைகள் மேல், துன்பப் படுபவர்கள் மேல் மட்டும் வருவது அல்ல. தவறு செய்பவர்கள் மேலும், வலிமையானவர்கள் மேலும் வருவதுதான் தயை. தன்னை சிலுவையில் வைத்து அறைந்தவர்களுக்காக பிரார்த்தித்தார் கர்த்தர். அது தயை. அது கருணை. தன்னை கொன்ற துரோகியைக் கூட "தத்தா நமர் என தடுத்து வீழ்த்தார் " மெய் பொருள் நாயனார். அனைத்து உயிர்கள் மேலும் இரக்கம் கொள்ளச் சொல்லுகிறது கீதை. 

அருட் பெருஞ் ஜோதி, தனிப் பெருங் கருணை என்பார் வள்ளலார். 


கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை ”  என்பார் மணிவாசகர்




முகம் பொழி கருணை போற்றி என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

கருணை என்பது தெய்வாம்சம்.


அலோலுப்த்வம் = ஆசை இன்மை

இதை படித்தவுடன் எல்லோருக்கும் ஒரு ஆயாசம் வரும். என்னடா இது ஆசை இல்லாமல் இரு , ஆசை இல்லாமல் இரு என்று ஒரே போதனையா போச்சு என்று.  அன்பா இரு, உயிர்கள் மேல் அன்பு செலுத்து என்று சொல்வதெல்லாம் சரி . ஆசை இல்லாமல் எப்படி இருப்பது ?

ஆசையின் மூலம் இன்பம் வரும் என்று நினைக்கிறோம். ஆசையின் மூலம் முன்னேற்றம் வரும் என்று நினைக்கிறோம். புலன் இன்பங்கள் ஒரு போதும் நிறைவைத் தருவது இல்லை. ஒன்று முடிந்தால் , அடுத்தது என்று இழுத்துக் கொண்டே போகும். அதற்கு முடிவே இல்லை. அனைத்து ஆசைகளும் நிறைவேறிய ஆள் யாரவது ஒருவன் உண்டா இந்த உலகில். ஓட்டைப் பாத்திரத்தில் நீர் விட்டு நிரப்பவும் வேலை  அறிவான செயல் தான.

கீதை சொல்கிறதே என்பதற்காக ஆசையை விடக் கூடாது. ஆசையின் அர்த்தம் அற்ற தனத்தை அறிந்து , அதை விட வேண்டும்.

எல்லா ஆசையையும் ஒரே நாளில் விட முடியாது.

கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பாருங்கள்.

விட விட இன்பம்தான்.



மார்தவம் ஹ்ரீ = மென்மை

எதையும் மென்மையாக அணுகிப் பாருங்கள். குரலை உயர்த்தாமல், சண்டை பிடிக்காமல், கோபம் கொள்ளாமல், பொறுமையாக மென்மையாக  அணுகிப் பாருங்கள். எல்லா பிரச்சனைகளும் தீரும். நாம் குரலை   உயர்த்த, எதிராளி அதற்கு மேல் போக...எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு.  ஆசை அற்றவன், மென்மையாக இருப்பான்.

நாம் நம் மேலேயே மென்மையாக இருப்பது இல்லை. அப்புறம் அல்லவா மற்றவர்கள் மேல் மென்மை வர. நாம் சரி இல்லை, இன்னும் கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம், இன்னும் கொஞ்சம் நிறமாக இருக்கலாம், இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இருக்கலாம் என்று  நம்மை நாமே மறுதலித்துக் கொண்டு இருக்கிறோம். முதலில் நம் மீதே   நாம் மென்மையாக இருக்கப் பழகுவோம். நமது பாவங்களை நாம்  மன்னிப்போம். நமது இறந்த காலத்தோடு சமரசம் செய்து கொள்வோம்.  என்னை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது  மற்றவர்களையும் ஏற்றுக் கொள்ளுவேன்.

அளவுக்கு அதிகமாக உபயோகப் படுத்தாமல் இருப்பது கூட ஒரு மென்மை தான். சுற்றுச் சூழல் மேல் மென்மை. குப்பை போடாமல் இருப்பது,



அரசாபலம் = சலனம் இன்மை.

நமது மனம் நம்  உடல் போன வழியெல்லாம் போகும். கண் எங்கே போகிறதோ, அதன் பின்னால் மனம் போகும். காது எங்கே போகிறதோ , அதன் பின்னால் மனம் போகும்.

மனதை அடக்க வேண்டும் என்றால், புலன்கள் அலைவதை நிறுத்த வேண்டும்.

பெரிய பாத்திரத்தில் சிறிய துளை இருந்தால் கூட , அதன் வழியே அனைத்து நீரும் கசிந்து வெளியேறுவதைப் போல, ஒரு புலன் வெளியே போனாலும்  , அனைத்தும் கூடவே போய் விடும்.

சீதையை காணக் கூட இல்லை இராவணன். சூர்ப்பனகை சொல்லக் கேட்டான்.  காது வழி வந்த செய்தி, அதன் மூலம் மனம் காம வசப் பட்டது. அழிந்தான்.

தவமும், கல்வியும், கேள்வியும், வீரமும் புலன் அடக்கம் இல்லாததால் அழிந்தே போனது.

சலனம் இன்றி இருக்க வேண்டும்.

இந்த இராஜ்யம் என்ற போதும் இராமன் மகிழவில்லை.

இராஜ்யம் இல்லை, கானகம் போ என்ற போதும் கலங்கவில்லை.

அது சலனம் அற்ற மனம்.

ஓடுகின்ற மனத்தை நிறுத்த முடியாது. அது ஓடுகின்ற திசையை மாற்றலாம்.

உங்கள் மனம் உங்களை எங்கே இழுத்துக் கொண்டு போகிறது என்று சற்று கவனியுங்கள். அது போகும் இடத்திற்கு போக ஆசையா ?

http://bhagavatgita.blogspot.in/2016/08/16.html




No comments:

Post a Comment