கீதை - 16.9 - பார்வையும் விளைவுகளும்
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥
ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய: |
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோஹிதா: || 16- 9||
ஏதாம் = இவர்கள்
த்ருஷ்டிம் = இந்த நோக்கத்தால், பார்வையால்
அவஷ்டப்ய = அவ + ஸ்தாபிபிய = நிலை நிறுத்த (அந்த கொள்கைகளை)
நஷ்டாத்மாநா = தங்களை தாங்களே அழித்துக் கொண்டு
அல்ப புத்தய: = அற்ப புத்தியுடன்
ப்ரபவந்தி = உருவாகி இருக்கிறார்கள்
உக்ரகர்மாண: = உக்ர + கர்மான = கொடிய செயல்களுடன்
க்ஷயாய = அழிவை நோக்கி
ஜகத் = உலகை
அ ஹிதா: = ஹிதம் என்றால் நன்மை. எ ஹிதம் என்றால் நன்மை இல்லாத. அதாவது தீமை.
அந்த எண்ணம் கொண்டவர்கள், தங்களை தாங்களே அழித்துக் கொள்வது மட்டும் அன்றி உலகையும் தங்களது தீவிர செயல்களால் தீமை நோக்கி இட்டுச் செல்வார்கள்.
அந்த எண்ணம் கொண்டவர்கள் என்றால் எந்த எண்ணம் ?
முந்திய ஸ்லோகத்தில் பார்த்தோம்
- உலகம் என்பது ஒரு விபத்து. அது எந்த விதிக்கும் கட்டுப் படாதது.
- உலகை யாரும் தோற்றி வைக்க வில்லை, அதை யாரும் பரி பாலனம் செய்வது இல்லை.
- உலகம் ஆசையால் சுழல்கிறது. ஆசையால் உந்தப் பட்டு காரியங்கள் நிகழ்கின்றன.
- அதற்கு மேல் ஒன்றும் இல்லை
என்ற இந்த எண்ணங்களைக் கொண்டவர்கள் என்ன செய்கிறாரகள் என்றால் ...
முதலில் தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது, அற்ப புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள்
மூன்றாவது, தீவிரமாக செயல் படுகிறார்கள்
நான்காவது, இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்கிறார்கள்.
அதாவது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அற்ப புத்தி உள்ளவர்கள். அவர்கள் தங்களையும் இந்த உலகையும் அழிவு பாதையில் இழுத்துச் செல்வார்கள் என்பது போலத் தோன்றும் இந்த சுலோகம்.
சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
இந்த உலகில் எதுவம் விதிப்படி நடப்பது இல்லை என்று நினைப்பவன் என்ன செய்வான் ?
முதலாவது, ஏதாவது விதி இருக்கிறதா என்று தேட மாட்டான். அது தான் முதலிலேயே முடிவு செய்து விட்டானே ஒரு விதியும் , கோட்பாடும், இல்லை என்று. அறிவியல் என்பது நிகழ்வுகளுக்கு பின்னே உள்ள காரணங்களை அறிவது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று சிந்திப்பவன் அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முயல்வான். ஏன் நோய் வருகிறது என்று சிந்திப்பவன் மருத்துவம் என்ற இயலை கண்டு பிடித்து தான் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழ வைப்பான். நோய் வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணமும் இல்லை என்று நினைப்பவன், தான் நோயில் அழிவது மட்டும் அல்ல, உலகத்தையும் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வான். மருந்து மட்டும் அல்ல , இன்பம், துன்பம், பசி, போர், போன்ற அனைத்துக்கும் காரணங்களை ஆராய்பவன் அவற்றில் இருந்து விடு பட வழி காண்பான். மற்றவர்களையும் அந்த துன்பத்தில் இருந்து விடுபட உதவி செய்வான்.
இரண்டாவது, இந்த உலகில் ஒரு விதியும் கிடையாது, என்று நினைப்பவன் ஒரு விதிக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டான். அப்படிப்பட்டவன் சீக்கிரம் அழிவான் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டும் அல்ல, மற்றவர்களின் அழிவுக்கும் துணை போவான்.
"அற்ப அறிவு"
விதி, ஒரு கட்டுப்பாடு, ஒரு கோட்பாடு என்று ஒன்று இல்லை என்று நினைப்பவன் மேற்கொண்டு சிந்திப்பதை நிறுத்தி விடுகிறான். அவனது அறிவு வளர வழி இல்லை. எல்லாமே ஒரு காரணமும் காரியமும் இல்லாமல் நடக்கிறது என்று நினைக்கிறான். ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் அல்லவா அது என்ன என்று காண முயல்வான். ஒன்றும் இல்லை என்று நினைப்பவனின் அறிவு வளர ஒரு வழியும் இல்லை.
"தீவிர செயல்பாடுகளோடு "
இந்த உலகம் தோன்றியதும், செயல்படுவதும் ஒரு விபத்து (accident ) என்று நினைப்பவன் , வாழ்க்கை, அதன் போக்கு, அதன் தொடர்ச்சி என்றெல்லாம் நினைக்க மாட்டான். இருக்கிற கொஞ்ச காலத்துக்குள் அனைத்தையும் வாழ்ந்து தீர்த்துவிடுவோம் என்று நினைப்பான். அவசரம் அவசரமாக செயல் படுவான். எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துவிட வேண்டும் என்று நினைப்பான். செயலில் ஒரு தீவிரம் இருக்கும். அவனுடைய அனுபவிப்பிற்கு தடையாக இருப்பவற்றை எப்படியாவது விலக்கிவிட துடிப்பான. ஒரு வேகமும் பதட்டமும் இருக்கும் அவனது செயல்களில்.
"உலகையும் அழிவுப் பாதையில் இழுத்துச் செல்வான் "
எதிலும் பரந்த மனப்பான்மை கிடையாது. தீர்க்க சிந்தனை கிடையாது. விதி, சட்டம், கோட்பாடு என்று எதுவும் கிடையாது. எதிலும் ஒரு அவசரம், வேகம்.
அப்படிப்பட்டவன் தான் அழிவுப் பாதையில் செல்வது மட்டும் அல்ல, மற்றவர்களையும் குழப்பி உலகையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வான்.
எதையும் ஆராயுங்கள். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கர்த்தா இல்லாமல் காரியம் இல்லை. நிதானமாக யோசியுங்கள்.
அப்படி யோசிக்காமல் இருப்பவன் எப்படி செயல்படுவான் தெரியுமா ?
அடுத்த ஸ்லோகத்தில் பார்ப்போம்.
No comments:
Post a Comment