Sunday, January 29, 2017

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம்

கீதை - 16.8 - இந்த உலகைப் பற்றி அவர்களின் எண்ணம் 


असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥



அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||

சீர் பிரித்தபின்

அசத்தியம் அப்ரதிஷ்டம் தெ ஜகத் ஆஹு அ(ந் ஈஸ்வரம் 
அ பரஸ்பர ஸம்பூதம் கிம் அந்யத் காம ஹைதுகம் 

பொருள்

அசத்தியம் = சத்யம் அல்லாதது

அப்ரதிஷ்டம் = பிரதிஷ்டம் என்றால் அடிப்படை, நிலை, கொண்டது என்று அர்த்தம். அப்ரதிஷ்டம் என்றால் நிலை இல்லாதது

தெ = அவர்கள்

ஜகத் =இந்த உலகம்

ஆஹு = சொல்கிறார்கள்

அ(ந் ஈஸ்வரம் = படைப்பவன் இல்லாதது

அ பரஸ்பர = பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று. அ பரஸ்பரம் என்றால் ஒன்றோடு ஒன்று அல்லாத

ஸம்பூதம் = அனைத்து உலகும்

 கிம் = எப்படி

அந்யத் = அவர்கள் , அந்நியர்கள்

காம = காமத்தினால்,

ஹேது கம் = உருவான காரணம்.

இந்த உலகமும் உயிர்களும் எப்படி உருவாயின ? இவை எதனால் எப்படி மேற்கொண்டு செல்லுகின்றன ?

இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன.

ஒன்று இந்த உலகும், அதில் உள்ள உயிர்களும் இறைவனால் படைக்கப் பட்டவை. இறைவனே அனைத்தையும் செலுத்துகிறான்.

இது ஒரு கருத்து.

இன்னொரு கருத்து , அதை இந்த ஸ்லோகத்தில் கீதை சொல்கிறது.

சிலர் நினைக்கிறார்கள், இந்த உலகம் எந்த விதிக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று (அசத்தியம்). சத்யம் என்றால் நிலையானது. உண்மையானது. எந்த உண்மைக்கும் கட்டுப் பட்டது அல்ல என்று நினைக்கிறார்கள்.

நாம் இன்று அறிவியலில் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.

 இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற அனைத்து துறைகளிலும் மிக மிக முன்னேறி விட்டோம்.

இன்று , இந்த உலகம் சில விதிகளுக்கு கட்டுப் பட்டு இயங்குகிறது என்று நமக்குத் தெரியும். கோள்களும், நட்சத்திரங்களும்,  அணுக்களும், உடலில் உள்ள செல்களும் சில விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன என்று அறிகிறோம். ஆனால் , கீதை எழுதப் பட்ட காலத்தில், இவை எல்லாம் இல்லை.

அப்போது சில பேர் இந்த உலகம் எந்த விதிக்கும் உட்பட்டது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் வியாசர் சொல்கிறார் "அவர்கள் அப்படி சொல்கிறார்கள்" என்று. அதாவது, வியாஸருக்குத் தெரிந்திருக்கிறது இந்த உலகம் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு இயங்குகிறது என்று.

அடுத்ததாக, அவர்கள் இந்த உலகம் ஈஸ்வரன் இல்லாதவன் என்று கூறுகிறார்கள்.

எப்படி உலகம் விதி இல்லாமல் செயல் படுகிறதோ, அது ஒரு கர்த்தா இல்லாமலும் செயல் படுகிறது என்று சொல்கிறார்கள்.

நாம், இன்று, இந்த உலகம் எந்தெந்த விதிகளில் செயல் படுகிறது என்று கண்டு பிடித்து விட்டோம்.

ஆனால், இந்த உலகம் ஈஸ்வரன் அல்லது ஒரு சக்தியால் செயல் படுகிறது என்று அறியவில்லை - இன்னும்.

விதி ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள் - விதிகளை கண்டு பிடித்து விட்டோம்.

இறைவன் இல்லை என்று சொன்னார்கள் -இறைவனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. கண்டு பிடிக்காததால் இல்லை என்று  சொல்ல முடியுமா  ? ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடுகள்  கூடத்தான் கண்டு பிடிக்கப் படவில்லை.

 மூன்றாவது, அவர்கள் இந்த உலகம்  ஒன்றில் இருந்து ஒன்று  வந்தது என்று ஒப்பு கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் இந்த உலகம் காமத்தினால், ஆண் பெண் சேர்க்கையால் வந்தது என்று நினைக்கிறார்கள்.

ஆண் பெண் கலவி தேவை தான். ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ? காமம் தான் இன விருத்திக்கு அடிப்படை. ஆனால், அந்த ஆணும் பெண்ணும் எப்படி வந்தார்கள் ?

ஏதிலிருந்தோ படைக்கப் பட்டிருக்க வேண்டும். எதிலிருந்தோ என்றால் அந்த ஏதோ ஒன்று எதில் இருந்து வந்தது ? இப்படி கேட்டுக் கொண்டே போனால், தொடக்கத்தின் ஆரம்பப் புள்ளிக்கு போய் விடுவோம். அந்த புள்ளி எப்படி வந்தது என்ற கேள்வியில் நிற்போம்.

அந்த முதல் உயிருக்கு, அல்லது பொருளுக்கு ஆண் பெண் என்ற இரண்டு கிடையாது . அப்படி என்றால் காமம், அன்பு, ஈர்ப்பு என்பது அந்த புள்ளியில் கிடையாது.

இப்படி ஒரு விதி இல்லாத, ஒரு ஈஸ்வரன் இல்லாத, காமத்தை அடிப்படையாக கொண்ட உலகத்தை பற்றி எண்ணுவதால் என்ன நிகழும் ?

மேலும் பார்ப்போம். 

No comments:

Post a Comment