கீதை - 16.7 - அசுரர்கள் யார் ?
प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥१६- ७॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: |
ந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||
ப்ரவ்ருத்திம் = விருத்தி என்றால் பெருக்குவது. ப்ர என்றால் உயர்ந்தது. ப்ர + விருத்தி = உயர்ந்த செயல்கள். நல்ல செயல்கள் செய்வதையும்
ச = மேலும்
நிவ்ருத்திம் = செயல்கள் செய்யாமல் இருப்பதையும் (நி என்றால் எதிர்மறை)
ச = மேலும்
ஜநா = ஞானம்
ந = இல்லை
விதுர் = அறிதல்
அஸுரா: = அசுரர்கள்
ந = மேலும்
ஸௌ²சம் = தூய்மை
ந = இல்லை
அபி = அது அன்றி
சா = மேலும்
அக்ரோ = நல்ல குணங்கள்
ந = மேலும்
ஸத்யம் = சத்யம்,உண்மை
தேஷு = அவர்களிடம்
வித்யதே = இருப்பது
அசுரத் தன்மை கொண்டோர் செய்வதையும் , செய்யாமல் இருப்பதையும் அறிய மாட்டார்கள். தூய்மையும், ஒழுக்கமும், வாய்மையும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
கீதை இரண்டு விதமான மனிதர்களைப் பற்றி கூறுகிறது.
இந்த ஸ்லோகத்தில் இருந்து அசுரர்களின் இயல்பைத் பற்றிக் கூறுகிறது.
அசுரர்கள் என்றால் ஏதோ கறுப்பாக , குண்டாக, கோரை பற்கள் தெரியும் படி, மண்டை ஓடு மாலை எல்லாம் அணிந்து கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.
அசுரர் என்பது ஒரு காரணப் பெயர்.
சில செயல்களை செய்பவர்கள் அசுரர்கள் அல்லது சில செயல்களை செய்யாமல் இருப்பவர்கள் அசுரர்கள். அவ்வளவுதான்.
அசுரர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியாது. செய்யக் கூடாததை செய்வார்கள். செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள்.
அது என்ன செய்யவேண்டியது, செய்யக் கூடாதது ?
சில உதாரணங்கள் பார்ப்போம்.
ஒரு மாணவன் என்றால் படிக்க வேண்டியது அவன் செய்ய வேண்டியது. அதை விட்டு விட்டு டிவி, சினிமா என்று திரிந்தால் அவை செய்ய வேண்டாதது. படிப்பதை விட்டு விட்டு , டிவி சினிமா என்று திரிந்தால் அவன் ஒரு அசுரன்.
உடல் நிலை காரணமாக மருத்துவர் இன்ன இன்னது சாப்பிடலாம், இன்ன இன்னது சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருப்பார். சாப்பிட வேண்டியதை விட்டு விட்டு சாப்பிடக் கூடாததை சாப்பிடுபவன் அசுரன்.
கோக், பெப்சி , பிஸ்சா போன்றவை உடலுக்கு நல்லது இல்லை. அவற்றை உண்பது அசுரர் செய்கை.
உடற் பயிற்சி செய்வது, ஓய்வு எடுப்பது , தேவையான அளவு உறங்குவது என்பது செய்ய வேண்டிய செயல். நேரமே இல்லை, நாளை செய்கிறேன், இன்று ரொம்ப அசதியாக இருக்கிறது என்று செய்ய வேண்டிய உடற் பயிற்சியை தள்ளிப் போடுபவன் ஒரு அசுரன்.
எதை எப்போது செய்ய வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த நேரத்தில் அவற்றை செய்யாமல் இருப்பதும், மற்றவற்றை செய்வதும் அசுரர் குணம்.
இதையே வள்ளுவரும்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
என்றார். காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதை காலம் தாழ்த்தி செய்ய வேண்டும். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்ய வேண்டும். மாற்றிச் செய்பவன் அசுரன்.
அதி காலையில் தூங்குவது. இரவில் விழித்து டிவி பார்ப்பது போல.
அது மட்டும் இன்றி, அவர்களிடம் மூன்று இருக்காது.
1. தூய்மை
2. ஒழுக்கம்
3. வாய்மை
இந்த மூன்றைப் பற்றியும் பாகம் 2 -ல் பார்ப்போம்.
இன்றிலிருந்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
எல்லா நேரமும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
"நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? இது இப்போது செய்ய வேண்டிய வேலைதானா ? இந்த நேரத்தில் நான் வேறு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறதா ? அதை விட்டு விட்டு நான் இதைச் செய்கிறேனா ? "
என்று கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவை இல்லதாதை விட்டு விலகி, எது தேவையோ அதை மட்டுமே செய்யத் தொடங்குவீர்கள்.
முன்னேற்றமும், உயர்வும் சர்வ நிச்சயம் உங்களுக்கு.
உங்கள் பதிவுகளை பார்த்தேன். ஏன் இதனோடு முடித்துவிட்டீர்கள். மீதி அதிகாரங்கள் காணவில்லை. லிங்க தர முடியுமா?
ReplyDelete