Thursday, July 21, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 2

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 2


श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||


ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாயஸ்தப = ஆழ்ந்து சிந்தித்து

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, தீர்க்க சிந்தனை, நேர்மை மற்றும் எளிமை. 


தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

அதில் முதலாவது

பயமின்மை.....

பொதுவாகவே மத சம்பந்தப் பட்ட நூல்கள், பணியாக இரு, பெரியோர் சொல்வதைக் கேள், கீழ் படிந்து நட என்று நம்மை எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவர்களாக மாற்றி வைத்து விடும். சொன்ன படி கேட்காவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று சின்ன வயதில் தொடங்கி, பாவம் செய்தால் நரகம் என்று பயமுறுத்தும். எண்ணெய் சட்டி, நெருப்பு, என்று ரொம்ப பயமுறுத்தும்.

கீதை தான் முதன் முதலில் பயமின்றி இரு என்கிறது.

தெய்வ சம்மதம் உள்ளவன் பயம் இன்றி இருப்பான். அவன் யாருக்கும், எதற்கும் பயப்படமாட்டான்.

உங்களுக்கும் பயம் எங்காவது இருந்தால், இன்னும் தெய்வ சம்மதம் ஏற்படவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

"காலா என் கால் அருகில் வாடா " என்று சொன்ன பாரதியின் துணிவு இருக்க வேண்டும்.

பயம் எதனால் வருகிறது ?

அறிவின்மையால் பயம் வருகிறது. அறிவின்மையால் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் பயம் வருகிறது.

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்கள் என்னென்ன என்று பட்டியல் போட வந்த கீதை முதலில் சொன்னது "பயமின்மை" யைப் பற்றி.

"அச்சம் தவிர்"

எதற்கும் பயம். உண்மை என்று தெரிந்ததை செய்யப் பயம்.

பயம் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

தெய்வத்தை அணுக வேண்டுமா ? முதலில் பயத்தை விட வேண்டும்.



(வளரும்)

================= பாகம் 2 =============================================

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

உள்ளம் தூய்மையாய் இருக்க வேண்டும். தூய்மை என்றால் அதில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். 

ஒருவன் வள்ளுவரிடம் சென்று சொன்னான் "ஐயா, அறம் தான் உலகத்தில் சிறந்தது என்று சொல்கிறார்கள். நீங்கள் கூட திருக்குறளை அறத்துப் பால் என்று அறத்தில் தான் ஆரம்பிக்கிறீர்கள். இந்த அறம் என்றால் என்ன ? எல்லாவற்றையும் படித்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதை சுருக்கமாக சொல்ல முடியுமா " என்று கேட்டான். 

வள்ளுவரும் சிரித்துக் கொண்டே, "ஒரே வரியில் சொல்கிறேன் கேட்டுக் கொள் " என்று சொல்லி விட்டு உலகில் உள்ள அனைத்து அறங்களையும் ஒரே வரியில் , ஐந்தே  வார்த்தையில் சொன்னார் 

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் "

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. 

உலகில் உள்ள அனைத்து அறங்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

நல்லதோ , தீயதோ, அது முதலில் மனதில் தோன்றி பின் வார்த்தையாக செயலாக பரிணமிக்கிறது. 

மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். 

எனவே, கீதை சொல்கிறது - மனத் தூய்மை வேண்டும் என்று. 


அடுத்தது 

"ஞான யோகத்தில் உறுதி"

ஞானம் கொட்டிக் கிடக்கிறது. திரும்பும் திசை எல்லாம் ஞானம் தான். 

நிறைய படிக்கிறோம். நிறைய கேட்கிறோம். சரி என்று பட்டாலும் செய்வது இல்லை. 

ஏன் ?

ஒன்று சந்தேகம். ஒரு வேளை அது சரியாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற  சந்தேகம்.

இரண்டாவது, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டு உலக விஷயங்களின் பின்னே போவது. 

ஞான யோகத்தில் உறுதி இல்லாமை. ஒரு வழி சரியான வழி என்றால் அதில் உறுதியுடன், தைரியத்துடன் செல்ல வேண்டும். இல்லை என்றால் படிப்பது எதற்கு ? ஞானத்தை தேடுவானேன் ?


"தானம்"

தானத்திற்கும் , தெய்வ சம்பந்தத்திற்கும் என்ன தொடர்பு ? 

பொருள்களின் மேல் பற்று வளர வளர , மேலும் மேலும் வேண்டும் என்று மனம் ஆசைப் படும். அதை பெருக்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தொலைந்து போகுமோ, யாரும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும். இதெல்லாம் தெய்வ சிந்தனைக்கு ஒரு தடைதான் ?

தானம் செய்வதன் மூலம், இந்த பொருள்கள் என்னுடையவை அல்ல.  இவை இல்லாமலும் நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நமக்குத் தெரிய வரும். நாளை பொருள் காணாமல் போனால் கூட ஒரு பெரிய துக்கம் வராது. "என்ன , நானே கொடுப்பதற்கு பதில் யாரோ எடுத்துக் கொண்டார்கள் " என்ற மன நிலை வரும். அது மட்டும் அல்ல, சம்பாதித்ததை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழும் போது நமக்கும் ஒரு மகிழ்ச்சி வரும். நான் அனுபவித்தால் என்ன அவர்கள் அனுபவித்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றும் போது அனைத்துக்குள்ளும் இருக்கும் அந்த ஒன்றைப் பற்றிய ஞானம் தோன்றும். அதன் பெயர் ஆத்மாவோ, உயிரோ, இறைவனோ ...ஏதோ இருந்து விட்டுப் போகட்டும். பிற உயிரை தன் உயிர் போல நினைக்கும் அந்த அருள் உள்ளம் பிறக்கும். 

அன்பும், அருளும் பிறக்கும். 

தானம் துறவுக்கு இட்டுச் செல்லும். 

துறவு துன்பங்களில் இருந்து விடுதலை தரும். 

தானம் பற்றி மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/161-2.html

No comments:

Post a Comment