Thursday, July 14, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 8

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 8


ஸ்லோகம் 19: குழப்பமும் தடுமாற்றமும் இன்றி , எவன் நானே புருஷோத்தமன் என்று அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன். அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.

குழப்பமும் தடுமாற்றமும் ஏன் வருகிறது ? அனைத்தும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்ற ஞானம் இல்லாததால் வருகிறது.

"அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்."

என்கிறது கீதை.

நான் வணங்கும் கடவுள் இப்படித்தான் இருப்பார். அவர் வேறு மாதிரி இருக்க மாட்டார். அவரை மட்டும் தான் வணங்குவேன் என்பதெல்லாம் குழப்பம் மற்றும் தடுமாற்றத்திற்கே வழி வகுக்கும். அனைத்து வடிவிலும், நிலையிலும் அவன் ஒன்றுதான்.

அவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்
இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என் றெழுதிக் காட்டொணாதே

என்பார் திருநாவுக்கரசர்.

ஸ்லோகம் 20: குற்றம் அற்றவனே, இவாறாக இரகசியமான  இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரத குலத்தவனே ,  இதை  உணர்ந்தவன்  புத்திமானாவான். அவனே செய்யத் தகுந்ததை செய்வான். 

எது அனைத்திலும் இருப்பதோ, இதில் இருந்து அனைத்தும் வருமோ, எது அனைத்துமாய்  பரந்து விரிந்து நிற்கிறதோ அதை அறிபவன் புத்திமான். மயக்கமும் குழப்பமும் அற்றவன் புத்திமான். பற்றற்று இருப்பவன் புத்திமான். வினைகளுக்கு காரணம் தெரிந்து அவற்றை தவிர்ப்பவன் புத்திமான். அவன் செய்யும் காரியங்கள் சரியானதாக இருக்கும். அந்த புத்தி, ஞானம் இல்லாதவன் இதைச் செய்தாலும் அது தவறாகத்தான் போகும்.

எனவே, அந்த புத்தி, ஞானம் , உணர்வு வராதவரை பேசாமல் இருப்பது உத்தமம்.

பதினைந்தாம் அத்யாயம் தொகுப்பு முற்றியது.

மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.

மூலத்தைப் படியுங்கள். குழப்பம் இல்லாதவர் வியாசர்.

என் உரை தவறாக இருக்கலாம். மூலம் தவறாக இருக்க முடியாது. உரைகள்  மூலத்தை படிக்க ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான். உரையே மூலமாக முடியாது. உரைகளை படித்து விட்டு நின்று விடாதீர்கள். மூலத்தை அறிய, உரைகள் ஒரு படிக்கட்டு. அவ்வளவே.

எதெதெற்கோ நேரம் ஒதுக்கும் போது, கீதையின் மூலத்தை படிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.

புரிந்தவரை அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

வாழ்த்துக்கள்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-8.html





No comments:

Post a Comment