கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 4
மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒரு விதத்தில் வளர்கிறது. வேர் நீர் தேடி கீழ் நோக்கி போகிறது.
கிளைகள் ஒளி தேடி வளைந்து நெளிந்து பரந்து விரிகிறது. மேலும் மேலும் சூரிய ஒளி வேண்டும் என்று ஒரு மரத்திற்கு இன்னொரு மரம் போட்டி போட்டுக் கொண்டு மேல் நோக்கி வளர்கின்றன.
இப்படி தேவைகளால் மரம் பல விதங்களில் வளர்கிறது.
அது போலத்தான் நாமும், நமது ஆசைகளால், தேவைகளால் உந்தப்ப பட்டு காரியங்களை செய்கிறோம்.
ஓட்டம் நிற்க வேண்டும் என்றால், ஏன் ஓடுகிறோம் என்று சிந்தியுங்கள். எது உங்களை செலுத்துகிறது என்று சிந்தியுங்கள். பணம், புகழ், அதிகாரம், எதிகாலத்தைப் பற்றிய பயம் என்று ஏதோ ஒன்று உங்களை செலுத்திக் கொண்டு இருக்கும்.
உங்களின் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஒரு ஆசை அல்லது தேவை மறைந்து கிடக்கிறது. அது என்ன என்று ஆராய்ந்தால், உங்களை நீங்கள் அறிய முடியும்.
அவற்றை அறியும் போது , அலைச்சல் நிற்கும். அலை ஓயும். அமைதி நிலவும்.
சரி, ஆசை மற்றும் தேவைகளை அறிந்து விட்டேன். இருந்தும் அவற்றை விட முடியவில்லையே ?
பிள்ளைகள் மேல் உள்ள பாசம், கணவன்/மனைவி மேல் உள்ள பாசம், உடன் பிறப்புகளின் மேல் உள்ள காதல், பணத்தின் மேல் உள்ள பற்று , அது தரும் சுகம் இது எல்லாம் தெரிகிறது. எப்படி விடுவது ?
மீண்டும் மரத்திற்கே போவோம்.
வேர் வளர்கிறது, கிளை வளர்கிறது, இலை துளைக்கிறது, பூ பூக்கிறது....இவை எல்லாம் வரமால் நிறுத்த என்ன செய்ய வேண்டும் ?
கிளைகளை வெட்டலாம். எப்படி வெட்டுவது ? அப்படியே வெட்டி போட்டு விட்டால் மரம் மொட்டையாகி ஒரு பயனும் இல்லாமால் அல்லவா போய் விடும் ? குளிர் தரும் நிழல், மணம் தரும் மலர், பசி தீர்க்கும் கனிகள், பறவைகளுக்கு கூடு என்று இவை எதுவும் இல்லாமல் எல்லா கிளைகளையும் வெட்டி விட்டால் என்ன செய்வது ?
மரத்தை கோடாலியால் வெட்டுவது போல, மன ஆசைகளை பற்றின்மை என்ற கோடாலியால் வெட்ட வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், ஆசைகளை துறக்க வேண்டாம், அன்பை, காதலை துறக்க வேண்டாம்....அவற்றின் மேல் பற்று இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி பற்று இல்லாமல் இருந்தால் அதுவே மரத்தை கோடாலியால் வெட்டுவதற்கு சமம்.
பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள், சொத்து சுகம் இவை இல்லாம இருக்கட்டும். அனுபவியுங்கள். ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்காதீர்கள்.
இருந்தால் சந்தோஷம்.
இல்லாததும் இன்னொரு வகை சந்தோஷம் என்று இருங்கள்.
பற்று வைக்காமல் இருப்பது என்றால் என்ன ?
இது என்னது என்று பற்றிக் கொள்ளாமல் இருப்பது.
இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும்.
முன்பே சொன்னது போல, ஒரு ஆகாய விமானத்தில் போகிறீர்கள், இரயில் வண்டியில் போகிறீர்கள், பேருந்தில் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போய்ச் சேர வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி போய் கொண்டே இருப்பீர்கள் அல்லவா.
அடடா, எனக்காக இந்த வண்டி எவ்வளவு செய்திருக்கிறது. இந்த வண்டியை விட்டு விட்டு நான் எப்படி போவேன் என்று யாரும் பயணம் செய்த வண்டியை கட்டி பிடித்துக் கொண்டு இருப்பது இல்லை.
பயணத்திற்கு அது உதவியது. அவ்வளவுதான்.
உங்கள் வாழ்க்கை பயணத்தில் பெற்றோர், உடன் பிறப்பு, நட்பு, செல்வம் எல்லாம் முடிந்த வரை உதவும். அந்த வசதியை அனுபவித்துக் கொள்ளுங்கள். வசதி நின்று போய் விட்டதா, மேலே செல்லுங்கள்.
போகும் வழியில் வண்டி brake down ஆகி நின்று விட்டால், அடுத்த வண்டி பிடித்து போய் கொண்டே இருப்பது போல.
பயணத்தை தொடருங்கள். இவர்கள் மற்றும் இவைகள் இடையில் வந்தவை.
இன்னும் வரும். போகும்.
உங்கள் பயணம் , தனிப் பயணம் தான்.
உங்கள் வழியில் சில பேர் சேருவார்கள். சிறிது காலம் கழித்து அவர்கள் தங்கள் வழியில் போவார்கள். நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள்.
பயணம் இனிதே செல்ல வாழ்த்துக்கள்.
http://bhagavatgita.blogspot.in/2016/07/15-4.html
No comments:
Post a Comment