Tuesday, July 25, 2023

பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு

 பகவத் கீதை - 2.61 - நிலையான அறிவு 


तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।

वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥


தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|

வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||


பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2023/07/261.html


(please click the above link to continue reading)


தாநி = அவர்கள் 


ஸர்வாணி = எல்லோரும் 


ஸம்யம்ய = கட்டு படுத்திய பின் 


யுக்த = இணைந்த பின் 


ஆஸீத = அமர்ந்து 


மத்பர:| = பர என்றால் உயர்ந்த, சிறந்த என்று அர்த்தம். மத் என்றால் நான், என்னில், தன்னுள்.. இதை பின்னால் விரிவாகப் பார்ப்போம். 


வஸே = வசப்படுத்தி 


ஹி = உறுதியாக 


யஸ்யே = அவர்களின் 


இந்த்³ரியாணி = புலன்கள், இந்திரியங்கள் 


தஸ்ய = அவர்கள் 


ப்ரஜ்ஞா = அறிவு, முடிவு, 


ப்ரதிஷ்டி²தா = உறுதியுடன் இருக்கும் 


அறிவில் சிறந்தவர்கள் கூட, புலன்களால் உந்தப்பட்டு தவறான முடிவுகள் எடுத்து விட முடியும் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். 


சரி, அப்படி என்றால் என்னதான் செய்வது?


புலன்களை எல்லாம் விட்டு விட முடியுமா?  பசிக்கிறது என்று வயிறு சொல்லும் போது, சாப்பிடாமல் எப்படி இருப்பது?  ஒவ்வொரு புலனும் ஏதேனும் ஒன்றை பற்றுகிறது. அவற்றின் மூலம் நமக்கு இன்பம் கிடைக்கிறது. 


புலன் இன்பத்தை விட்டு விட்டால் பின் வாழ்வது எதற்கு? கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறதா?


இல்லை. 


புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவம் என்பது அறிவின் கீழ் வர வேண்டும். 


எப்படி என்று சிந்திப்போம். 


இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக எந்நேரமும், பார்க்கும் போதெல்லாம் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா?  நாக்கு சொல்லும். அதன் பின்னால் போக முடியுமா?  சிந்திக்கிறோம் அல்லவா?  இது நல்லது அல்ல. அளவுக்கு மேல் உண்ணக் கூடாது என்று அந்த புலன்களை கட்டுக்கொள் கொண்டு வருகிறோம் அல்லவா?


நாக்குக்கு சொன்னது தான் மற்ற புலன்களுக்கும். அனுபவம் என்பது அறிவோடு சேர்ந்து நிகழ வேண்டும். 


காமம் வேண்டும்தான். அது நல்லது. சுகமானது. அதற்காக மனம் போனபடி எல்லாம் போனதால் இராவணன் அழிந்தான். அவனிடம் அறிவு இருந்தது. ஆனால், அது புலன்களுக்கு கீழே சென்று விட்டது. 


அது சரிதான், ஆனால் அது எங்கே இந்த ஸ்லோகத்தில் வருகிறது?


 யுக்த ஆஸீத மத்பர:| வஸே


யுக்த என்றால் இணைத்து, சேர்த்து என்று அர்த்தம். யோகம் என்பது இணைப்பது. 


ஆசீத - அமர்ந்து. அதாவது நிதானமாக யோசித்து. 


மத்பர = பர என்றால் உயர்ந்த, சிறந்த. மத் என்றால் தன்னில், என்னில், தனக்குள் 


இங்குதான் சிக்கல் வருகிறது. இங்கே, பொருள் சொல்பவர்கள், "மத்" என்பதை கண்ணன் தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, புலன்களை என்பால் (கண்ணன்) செலுத்தி என்று பொருள் கொள்கிறார்கள்.   இறை பக்தி உள்ளவர்கள் கூட தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இராவணன் செய்யவில்லையா?


அதை விட, தன்னில் என்பதை நம்மிடம் உள்ள சிறந்த விடயத்தில் செலுத்தி என்று பொருள் கொண்டால் அது நம் அறிவை குறிக்கும். நம்மில் சிறந்தது எது என்றால் நம் அறிவு, நம் ஞானம்தான். சிறந்தது. புலன்களை அறிவோடு இணைத்து செயல்பட வேண்டும் என்பது சரியான பொருளாக இருக்கும். 


யுக்த என்றால் இணைத்து - புலன்களை அறிவோடு இணைக்க வேண்டும். புலன்கள் அறிவின் கட்டுப்பாட்டுகுள் இயங்க வேண்டும். அதுவும் உறுதியான அறிவாக இருக்க வேண்டும். 


பக்தி சார்ந்து பொருள் சொல்வதாக இருந்தால், புலன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து என்று பொருள் சொல்லலாம். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். 



2 comments: