கீதை - 16.14 - நானே பலவான், சுகவான்
असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥१६- १४॥
அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி |
ஈஸ்வரோஹமஹம் போகீ ஸித்தோ ஹம் பலவாந் ஸு கீ || 16- 14||
அஸௌ = அந்த
மயா = என்னால்
ஹத: = அழிக்கப்பட்டது
ஸத்ரு = எதிரிகளை
ஹநிஷ்யே = நான் கொல்வேன்
ச = மேலும்
அபரன் = மற்றவர்களையும்
அபி = மேலும்
ஈஸ்வர = ஈஸ்வரன், தலைவன்
அஹம் = நான்
அஹம் = நான்
போகி = அனுபவிக்கப் பிறந்தவன்
சித்தா = சித்தன்
அஹம் = நான்
பலவான் = பலம் உள்ளவன்
ஸுகி = சுகங்களை அனுபவிப்பவன்
என் எதிரிகளை வெல்லுவேன். நானே ஈஸ்வரன். நானே பலவான். நான் சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவன். நான் சித்தன் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தீயவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா என்று வியாசர் தொடர்கிறார்.
அவர்கள் வாழ் நாள் முழுவதும் யாரிடமாவது சண்டை இட்டு வெற்றி கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
யாரோ என்றால் ஏதோ எதிரிகள் என்று நினைத்து விட வேண்டாம்.
சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாதத்தில் வெல்ல வேண்டும். அதனால் உறவில் விரிசல் வந்தால் கூட பரவாயில்லை. யார் காயப் பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு வாதத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள், பிள்ளைகள் , கணவன், மனைவி என்று யாரிடமாவது ஏதாவது வாதம் இருக்கும். ஏதாவது வாதத்தில் தோற்றுவிட்டால் ஏதோ இழந்த மாதிரி உணர்வார்கள். தோல்வி என்பது சகிக்க முடியாது அவர்களால்.
எப்போதும் யாரையாவது வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது சதா சர்வ காலமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இது ஒரு அசுர குணம்.
தானே எல்லாம் என்று நினைப்பார்கள்.
எல்லா சுகமும் தனக்கே வேண்டும் என்று சுயநலம் கொண்டு அலைவார்கள். மற்றவர்களுக்குத் தந்து, அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டு தாங்கள் மகிழ மாட்டார்கள். தான், தன் சுகம் என்று இருப்பார்கள்.
அது மட்டும் அல்ல, தனக்கு எல்லாம் தெரியும் என்று ஆணவம் கொண்டு இருப்பார்கள். நான் சித்தன் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும். எனக்குத் தெரியாதா, நான் பார்க்காததா என்று இறுமாப்புடன் அலைவார்கள்.
சுயநலம் - ஆணவம் - எந்நேரமும் சண்டை பிடிக்கும் குணம்....இவை எல்லாம் நம்மிடமும் கூட இருக்கலாம்.
இருந்தால் , என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ ?
No comments:
Post a Comment