Tuesday, June 27, 2017

கீதை - 16.12 - தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள்

கீதை - 16.12 -  தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள் 


आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥१६- १२॥


ஆஸா பாஸ ஸதைர்ப³த்தா: காமக்ரோத பராயணா: |
ஈஹந்தே காமபோகார்த மந்யாயேநார்த ஸஞ்சயாந் || 16- 12||


ஆஸா பாஸ = ஆசா பாசங்களில்

சதா = சதம் என்றால் நூறு. பல வழிகளில்

பத்தா: = கட்டுண்டு

காம க்ரோத = காமத்திலும் கோபத்திலும்

ப்ரயணா: = வழிகளில் செல்வார்கள்

ஈஹந்தே = அடைய

காமபோகார்த = ஆசைகளை அனுபவிக்க

அநன்யேன  = அல்லாத வழிகளில்

அர்த = ஸ்ஸ செல்வத்தை

சஞ்சயாந்  = குவிப்பார்கள்

ஆசா பாடங்களில் பல நூறு வழிகளில் கட்டுண்டு; அவைகளை அனுபவிப்பதற்காக தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பார்கள். 

ஆசை தெரிகிறது. அது என்ன பாசம் ?

பாசம் என்பது பாசக் கயிறு. காட்டும் கயிறு. ஆசை, நம்மை ஆசைப் படும் பொருளோடு சேர்த்து கட்டிப் போட்டு விடுகிறது.


அது பொருளானாலும் சரி, மற்ற உருவானாலும் சரி, அல்லது நாய் குட்டியானாலும் சரி , ஆசை நம்மை பிணைக்கிறது. எனவே தான் அதை ஆசா பாசம் என்று குறிப்பிடுகிரார்கள்.

 ஒரு கயிறால் கட்டினாலே  .துன்பமாக இருக்கும். நூற்றுக் கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டால் , எப்படி இருக்கும் ?

இப்படி நூற்றுக்கணக்கான கயிறுகளால் கட்டப் பட்டு வாழும் வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில் , நாம் சுதந்திரமாக இருப்பதாக வேறு எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

பண ஆசை, செல்வாக்கு, புகழ், கவலைகளில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற ஆசை, பிள்ளைகள் மெடல் வாங்க வேண்டும் என்ற ஆசை, அவர்களுக்கு வேலை, நல்ல திருமணம்,  ஆயுள், ஆரோக்கியம் , மதிப்பு, மரியாதை , என்று எத்தனை ஆயிரம் ஆசைகள். ஒவ்வொரு ஆசையும் நம்மை ஒவ்வொரு விதத்தில் கட்டிப் போடுகிறது.

ஆசை ஒரு பக்கம் கட்டிப் போடுகிறது என்றால், அந்த ஆசைகள் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற பயம் மறுபுறம் கட்டிப் போடுகிறது.

ஆசையும் , பயமும் இப்படி இருக்க, வேறு யாராவது நாம் ஆசைப் படுவதை கொண்டு போய் விட்டால்  , அவர்கள் மேல் கோபம் வருகிறது.


இப்படி, ஆசை, பயம், கோபம் என்ற மூன்றும் நம்மை கட்டுகின்றன . ஒவ்வொரு ஆசைக்கும் பல பயங்கள், ஒவ்வொரு பயத்துக்கும் பல கோபங்கள்.

யோசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது என்று.

மிகப் பெரிய சிக்கல் , முடிச்சுகள் நிறைந்து இருக்கிறது.

இந்த மஹா சிக்கலுக்கு நடுவில் , அவ்வப்போது நிறைவேறும் ஆசைகளில் மகிழ்ந்து , அவற்றை மேலும் அடைய பல் வேறு தவறான வழிகளில் பணம் சேர்ப்பார்கள் கெட்டவர்கள்.

கெட்டவர்களின் குண நலன்களை பற்றி சொல்லவந்த வியாசர் கூறுகிறார்


அவர்கள் ஆசை, பயம், கோபம் என்ற கயிறுகளால் கட்டுண்டு, தவறான வழியில் பணம் சேர்த்து வாழ்வார்கள் என்று.

நாம் தவறான வழியில் பணம் சேர்க்காமல் இருக்கலாம்.

ஆனால் எவ்வளவு ஆசைகள், பயங்கள், கோபங்கள் ?

சிந்தித்துப் பார்ப்போம்.

மெல்ல மெல்ல இந்த சிக்கல்களில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும்.


ஆசைகள் குறைய குறைய , பயம் குறையும். கோபம் குறையும். வாழ்க்கை லேசாகும்.

பயமற்ற வாழ்க்கை வாழலாம். யார்மேலும், எதன் மேலும் கோபம் இல்லாமல் எல்லோரிடமும் இதமாக பழகி வாழலாம்.

எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவு நல்லது.

முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment