Monday, April 22, 2013

கீதை - 1.01 - நம்மவர்களும் பாண்டுவின் பிள்ளைகளும்

கீதை - 1.01 -  நம்மவர்களும் பாண்டுவின் பிள்ளைகளும் 


धृतराष्ट्र उवाच

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச 

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:| 
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்; 

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்  
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி 
யுயுத்ஸவ: = யுத்தம்போ செய்ய வந்திருக்கும் 
மாமகா: = நம்மவர்களும்; 
பாண்ட³வா: = பாண்டவரும்; 
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள் 


திருதராஷ்டிரன் கேட்கிறான் :  சஞ்ஜயா, தர்ம க்ஷேத்ரமான குருக்ஷேத்ரத்தில்  போர் செய்ய வந்திருக்கும் நம்மவர்களும் பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள் 

பகவத் கீதையில், ஒரே ஒரு இடத்தில் திருதராஷ்டிரன் பேசுகிறான்

"தர்ம ஷேத்ரமான குரு ஷேத்ரத்தில் நம்மவர்களும், பாண்டுவின் பிள்ளைகளும் என்ன செய்கிறார்கள் " என்று சஞ்சயனிடம் கேட்கிறான்.

இந்த ஒரு சுலோகத்திற்கு ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.

முதலில், குருஷேத்ரம் என்பது ஒரு உருவகம். நாம் வாழும் இந்த வாழ்க்கை தான் குருஷேத்ரம். நல்லதும் , கெட்டதும் நிறைந்த இந்த வாழ்க்கை தான் குருஷேத்ரம்

நல்லதும் கெட்டதும் போராடிக்கொண்டே இருக்கிறது

தர்மம் நிலைக்கும் என்பது உண்மை. எனவே தர்ம ஷேத்ரமான குருஷேத்ரம் என்று கீதை ஆரம்பிக்கிறது

சில சமயம் நல்லது எது கெட்டது எது என்று நம் மனம் மயங்கும். ஒன்றை செய்யலாமா, கூடாதா என்று குழம்புவோம். சில சமயம் போராடத் தோன்றும், சில சமயம் போராடி என்ன அடையப் போகிறோம் என்று தோன்றும்

நாம் பாசம் செலுத்தும் குடும்பம் ஒருபுறம், கடமை மறுபுறம். குடும்பத்திற்காக கடமையை விட்டுக் கொடுக்கலாமா

இப்படி பல குழப்பங்களுக்கு நடுவில் நாம் சிக்கித் தவிக்கிறோம். எப்படி முடிவு செய்வது, எது சரி, எது தவறு என்று எப்படி அறிந்து கொள்வது ?

நாம் தான் அர்ஜுனன். அவனுடைய குழப்பம் நம்முடைய குழப்பம். காலம் காலமாய் தொடர்ந்து வரும் மயக்கம்

இத்தனைக்கும் கீதை ஒரு வழி காட்டுகிறது

திருதராஷ்டிரனுக்குத் தெரியும் , கௌரவர் படை , பாண்டவர் படையை விட மிகப் பெரியது என்று. இருந்தும் அவனுக்கு வெற்றியின் மேல் சந்தேகம்.

அறம் இல்லாத இடத்தில் அமைதி இருக்காது. சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். படை பலமும், ஆயுத பலமும் வெற்றியை நிர்ணயிப்பது அல்ல.

அப்படித்தான் நினைத்து அழிந்த அரக்கர்கள் ஏராளம்.

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

என்பார் அபிராமி பட்டர். 

அரணம் என்றால் கோட்டை. கோட்டை கொத்தளங்கள் , படை, ஆள், அம்பு, சேனை தங்களை காத்து விடும் என்று நினைக்கும் அருள் ஒன்றும் இல்லாத அரக்கர்கள் என்பார்.

எத்தனையோ விதமான மனிதர்கள், எத்தனையோ விதமான மன நிலைகள், காலச் சக்கரம் உருண்டோடிக்கொண்டே இருக்கிறது. இத்தனை காலம் கழித்தும் கீதை நமக்கு வழி காட்டுமா ?

பார்ப்போமே ?

http://bhagavatgita.blogspot.in/2013/04/101.html

No comments:

Post a Comment