Tuesday, August 26, 2014

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப


अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥

அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||

அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.

பஸ்²யாமி = காண்கிறேன்

த்வாம் = உன்

ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை

நா = இல்லை

அந்தம் = முடிவு

 ந = இல்லை

மத்யம் = நடு

ந = இல்லை

புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்

பஸ்யாமி = காணுதல்

விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே  

விஸ்வரூப = விஸ்வ + ரூபம் =  அனைத்தையும் கொண்ட வடிவமாணவனே

பல தோள்களும், பல வாய்களும் , பல வயிறுகளும், பல விழிகளையும் கொண்ட உன் தோற்றத்திற்கு தொடக்கத்தையும், நடுவையும், முடிவையும் நான் காண்கிலேன். 


தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, நடுவும் இல்லை. எங்கும் நிறைந்து இருக்கிறது.

நாம் முன்பே சிந்தித்தது போல அனைத்து உலகும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உருவை, வடிவை கற்பனை செய்து பார்த்தால் அது தான் விஸ்வ ரூபம்.

என்ன அர்த்தம்.

எல்லா உலகும் என்று  சொல்லும் போது சில விஷயங்கள் நமக்கு புரிபடுகிறது.

முதலாவது, அனைத்தும்  ஒன்றுதான்.ஏற்றத் தாழ்வு இல்லை. அனைத்தும் இறை  வடிவம் தான்.

இரண்டாவது, ஒன்று மற்றொன்றாய் மாறும். ஆனால், இங்கே புதிதாக ஒன்று வருவது இல்லை, இருப்பது இல்லாமல் போவதும் இல்லை.

மூன்றாவது, அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. எதுவும் தனித்து இல்லை. என்னது, உன்னது என்று பிரித்துப் பார்ப்பது அர்த்தம் அற்ற செயல்.

 நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி  தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

விச்வேஸ்வரா - விஸ்வ ரூப ...

சிந்திப்போம்.




Monday, August 25, 2014

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில் காண்கிறேன்

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில்  காண்கிறேன் 


अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥

அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பஸ்²யாமி = நான் காண்கிறேன்

தேவாம்ஸ் = தேவர்களை 

தவ = உன்னுடைய

தேவ = தேவா !

தேஹே = தேகத்தில்

ஸர்வாம்ஸ் = அனைத்தும்

ததா = அந்த வகையில்

பூதவிஸே = அனைத்து உயிர்களின் 

ஷஸங்கா⁴ந் = கூட்டத்தை

ப்ரஹ்மா = பிரம்மா

ஈசம் = ஈசன்

கமலாஸநஸ்தம் = தாமரை மலரில் அமர்ந்து இருப்பவன்

ரிஷி = ரிஷிகள்

ச = மேலும்

ஸர்வ = அனைத்து

உரகன்  = பாம்புகள்

ச = மேலும்

தி³வ்யாந் = தெய்வீகமான


அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே ! உன் உடலில் அனைத்து தேவர்களையும், ,தாமரை மலாரில் இருக்கும் ஈசனான பிரமனையும், எல்லா ரிஷிகளையும், அனைத்து பூதங்களின் தொகுதிகளையும், தேவ சர்பங்களையும்  இங்கு காண்கிறேன் 

அது என்ன பிரம்மா, பூதங்களின் தொகுதி  சொல்லி விட்டு உடனே தேவ சர்ப்பங்கள் என்று  சொல்கிறார்.அதில் என்ன அர்த்தம் இருக்கும் ?

விசரூபம் என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது என்று பார்த்தோம்.

ஒரு கோடியில் பிரம்மா. இன்னொரு கோடியில் கீழான பாம்பு.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்வது போல.

வானும் நிலமும் சாட்சியாக என்று சொல்வது போல.

இரண்டு எதிர் எதிர் துருவங்களை சொல்லிவிட்டால் இடையில் உள்ளதை அனைத்தும்  சொன்ன  மாதிரி.

உரகன் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு - மார்பில் நகர்வது என்று  பொருள்.உர்ஸ் என்றால்  மார்பு என்று பொருள். மார்பில் நகர்வது பாம்பு.

பிரமா முதல் பாம்பு வரை அனைத்து பூதங்களின் தொகுதிகளையும் நான் காண்கிறேன்  என்றான் அர்ஜுனன்.

பிரமாவும் , பாம்பும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் இரண்டு துருவங்கள். இடைப்பட்ட  அனைத்தும் அதில் அடக்கம்.

இதில் தாத்தா, மாமா, குரு , பங்காளிப் பிள்ளைகள் , அண்ணன் , தம்பி என்பதெல்லாம்  புறத்  தோற்றங்கள்.

பாசத்தைக் காட்டி, கடமையில் இருந்து விலகப் பார்த்தான் அர்ஜுனன்.

பாசம் என்பது பிரித்துப் பார்பதால்  வருகிறது.

பகையும் அப்படியே.

என் பிள்ளை, என்  மனைவி,என் நாடு, என்று பிரிக்கும் போது பாசமும் வருகிறது, பகையும் வருகிறது.

இதைப் போக்க கண்ணன் விஸ்வரூபத்தை  காட்டினான் அல்லது உணர்த்தினான்.

வெவ்வேறு நாடு, வெவ்வேறு சமயம், வெவ்வேறு உறவுகள் என்று பிரித்துப் பார்க்காமல்  அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் சக்தியை தந்தான் அர்ஜுனனுக்கு கண்ணன்.



Sunday, August 17, 2014

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி 


ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनंजयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥११- १४॥

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||


தத: = அப்புறம். அதன் பின்

ஸ = அவன்

விஸ்மயாவிஷ்டோ = ஆச்சரியப்பட்டு

ஹ்ருஷ்ட ரோமா = மயிர் கூச்செரிந்து 

த⁴நஞ்ஜய: | = தனஞ்சயன்

ப்ரணம்ய = வணங்கி

ஸி²ரஸா = தலையால்

தே³வம் = தேவனை

க்ருதாஞ்ஜலி = கைகளால் கும்பிட்டு

அ பா⁴ஷத = சொல்லத் தொடங்கினான்

அப்போது தனஞ்ஜயன் ஆச்சரியம் அடைந்து , மயிர் கூசெறிந்து , அந்த தேவனை தலையால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு, சொல்லத் தொடங்குகிறான்

நேரில் பார்த்தது அர்ஜுனன்.

எங்கோ அமர்ந்து இருக்கும் தனஞ்சயன், அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்க்கிறான்.

அவன் ரோமம் எல்லாம் குத்திட்டு நிற்கிறது.

கை கூப்பி, தலையால் வணங்குகிறான்.

வணங்கி மேலும் சொல்கிறான்...



Wednesday, August 13, 2014

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான்

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான் 


तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥११- १३॥

தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||

தத்ர = அங்கு

ஏக ஸ்தம் = ஒரே இடத்தில்

ஜகத் = உலகம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ப்ர வி பக்த = பல கூறுகளாய்

அ நேக தா = பல வடிவங்களில்

அபஸ்²யத் = அவன் கண்டான்

தேவ தேவஸ்ய = கடவுள்களின் கடவுள்

 ஸரீரே = உடலில்

பாண்டவ ஸ்ததா = பாண்டவன் கண்டான்



அங்கே, பல கூறுகளைக் கொண்ட, உலகம் முழுவதும், அந்த தேவ தேவனுடைய சரீரத்தில் ஒன்றாக இருப்பதை பாண்டவன் கண்டான்

இறைவன் இந்த உலகைப் படைத்தான், இறைவனால் எல்லாம் கூடும் என்றால் உலகில் ஏன் இவ்வளவு துன்பங்கள், வலிகள் , துரோகங்கள், நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்....

கடவுளால் இவற்றை போக்க முடியாதா ? பசியால் உயிர்கள் வருந்துகின்றன, போரில் மடிகின்றன...இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் கடவுள்  எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும் ?

இந்த கேள்வி காலம் காலமாக கேட்கப் பட்டு வருகிறது.

சரியான விடை வியாசர் தருகிறார்.

இறைவன் என்பவன் அல்லது என்பது ஒரு தனி மனிதன் என்று நாம் நினைப்பதால் வரும் குழப்பம் இது. தனி மனிதனுக்கு பொறுப்புகள் இருக்க  வேண்டும்.இறைவனை தனி மனிதனாக நினைத்து நாம் அவன் இப்படி பொறுப்பு இல்லாமல்  இருக்கிறானே என்று வருந்துகிறோம்.

இறைவன் என்பவன் தனி மனிதன் அல்ல. அனைத்தின் தொகுதிதான் இறை என்பது.

நல்லதும், கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்ந்ததும் அனைத்தும் சேர்ந்த கலவைதான் இறைவன்.

உலகின் அத்தனை கூறுகளையும் தன்னில் கொண்டதுதான இறைவன் என்ற தத்துவம்.

இதை விட தெளிவாக கூற முடியாது.

அதை பாண்டவன் கண்டான்.

பாண்டவன் அப்படி பார்த்ததை சஞ்சயன் கண்டான்.

உங்களுக்கும் அந்த காட்சி கிடைக்கட்டும்.


Tuesday, August 12, 2014

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம்

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம் 



दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥११- १२॥

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

திவி = ஒளி பொருந்திய

ஸூர்ய ஸஹஸ்ர ஸ்ய = ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தாற்போல

பவேத் = அதுவானது

யுகபத் = ஒன்றாக, ஒரே சமயத்தில் 

உதுத்திதா = உதித்தால்

யதி = எப்படி இருக்குமோ

பா = அவ்வளவு பிரகாசத்துடன்

ஸத்ருஸீ =  அதைப் போல

ஸா = அது

ஸ்யாத்  = இருந்தது

பா⁴ஸஸ்தஸ்ய = அதன் ஒளியும்

மஹாத்மந: = மகா ஆத்மா

ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் தோன்றினால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படி இருந்தது அந்த மகாத்மாவின் வடிவம் .

உலகில் ஒளியும் இருக்கிறது. இருளும் இருக்கிறது.

இரண்டும் தனித்தனியே இருக்க முடியுமா ?

ஒளி இல்லாதது இருளா ? அல்லது

இருள் இல்லாதது ஒளியா ?

ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும்.

Is the absence of light is darkness or absence of darkness is light ?

This is the core of Existentialism. Which one exists ? Darkness or Light ?

வாழ்வில் இன்பமும் துன்பமும் இருக்கிறது ?

இன்பம் இல்லாதது துன்பமா ?

துன்பம் இல்லாதது இன்பமா ?

ஒரு துன்பமும் இல்லை என்றால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுவீர்களா ?

ஒரு இன்பமும் இல்லை இன்றால் துன்பப் படுகிறேன் என்று சொல்லுவீர்களா ?

Is the absence of happiness is sadness or absence of sadness is happiness ? Which exists ? Happiness or Sadness ?

விஸ்வரூபம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றால் இருளும் இருந்திருக்க  வேண்டும்.

ஏன் ஆயிரம் சூர்ய பிரகாசம் என்று சொல்ல வேண்டும் ? ஆயிரம் அம்மாவாசை  இருள் என்று ஏன் சொல்ல வில்லை. ?

ஏன் என்றால் இருள் என்று ஒன்று கிடையாது. ஒளி  மட்டும்தான்   உண்டு. ஒளி இல்லாததை  நாம் இருள் என்கிறோம். என்று தனியாக ஒன்று கிடையாது.

இருக்கும் அனைத்தின் தொகுதி என்றதால், இருப்பது ஒளி மட்டும்தான்.  அத்தனை  ஒளியையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த  உருவம்.

உலகில் ஒளி மட்டும்தான் உண்டு. இருள் கிடையாது. ஒரு விளக்கைக் கொண்டு வந்து  இருளைத் தேடித் பாருங்கள். கிடைக்கவே கிடைக்காது.

அது போல

வாழ்வில் இன்பம் மட்டும்தான் உண்டு.  துன்பம் என்பது கற்பனை. இல்லாத ஒன்று. இருப்பதாய் நாம் நினைத்துக் கொண்டு வருந்துகிறோம்.

இன்பத்தை விட்டு நாம் விலகினால் துன்பத்தில் இருப்பது போல  தெரியும். விலகியது  நம் குற்றம்.

உருகி, பெருகி, புவனம் அனைத்தும் நிறைத்து தத்தி கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரிநாதர்


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை என்பார் அபிராமி பட்டர்

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

நினைக்கும் போதெல்லாம், காணும்போது எல்லாம், பேசும்போது எல்லாம் எப்போதும் ஆனந்தத் தேன் சொரியும் என்பார் மணிவாசகர்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

உலகில் இன்பம், ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத ஆனந்தம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்பார் நாவுக்கரசர்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே


விஸ்வரூப தரிசனம் காட்டுவது எல்லாம் வாழ்வில் நல்லவையே நிறைந்து கிடக்கிறது  என்ற உண்மையத்தான்.

- சிறந்த நறுமணம்,
- ஆயிரம் சூரிய ஒளி

என்று இப்படி பட்டியல் போகிறது. எல்லாமே உயர்ந்தவை, சிறந்தவை இவற்றின்  தொகுதிதான் இந்த உலகம். அதுதான் இறைவன்.

இந்த விஸ்வரூப் தரிசனம் உங்களுக்கும் கிடைக்கட்டும்


Monday, August 11, 2014

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு 


दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥११- ११॥

தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||

திவ்யமால்யாம்பரதரம் = திவ்ய + மாலா + அம்பற + தர = திவ்யமான மாலைகளை மற்றும் உடைகளை

திவ்யகந்தாநுலேபநம் = திவ்ய + கந்த + அனுலுபேன = திவ்யமான மணம் வீசும் பொருள்களை பூசிக் கொண்டு
 
ஸர்வாஸ்சர்யமயம் = சர்வ + ஆச்சர்ய +   மயம் =  அனைத்து   ஆச்சரியங்களையும் கொண்ட

தேவமநந்தம் = தேவம் + அநந்தம் = முடிவில்லா தேவ வடிவம் 

விஸ்²வதோமுக²ம் = அனைத்து திக்குகளிலும் பார்க்கும் முகங்கள்

திவ்ய மாலையும், ஆடையும் அணிந்து கொண்டு, வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு, மிக மிக ஆர்ச்சரியப்  படத்  வகையில் அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த வடிவம். 

அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவை எப்படி வர்ணிப்பது. நம்மால் நினைத்து பார்க்க முடியும்.  அதை எழுத்தில் வடிப்பது என்றால் எவ்வளவு சிக்கல்.

உலகனைத்தையும் ஒன்றடக்கிய உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உருவம் , வியாசர் காட்டும் விஸ்வ ரூபத்தோடு மிகச் சரியாக  பொருந்தும்.

அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு. உலகில்  உள்ள அனைத்து ஜீவராசிகளும்  சேர்ந்த ஒரு உருவம் என்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு  பக்கம் பார்த்துக் கொண்டு  இருக்கும் தானே ? அதனால், "அனைத்து  திசைகளிலும் பார்த்துக் கொண்டு"  என்றார்.

இப்படி ஒரு வடிவை இது வரை நாம் கற்பனை செய்து கூட பார்த்து இருக்க மாட்டோம்.

அப்படி  நினைத்துப் பார்க்கும் போது "அட, ஆமா, சரியாத்தான் இருக்கு " என்ற ஆச்சரியம்   மேலிடும்.அதைத்தான் சொல்கிறார் "மிகவும் ஆச்சரியப் படத் தக்க வகையில் " என்று.

 இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல.

எல்லாம் சேர்ந்த ஒன்றைத்தான்  இறைவன் என்று நாம் சொல்கிறோம்.

அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உயர்வும் உண்டு, தாழ்வும் உண்டு.

அப்படிப் பட்ட விஸ்வரூபத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


Saturday, August 9, 2014

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம்

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம் 


अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥११- १०॥

அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||

அநேக வக்த்ர நயநம் = பல வாய்களையும் பல விழிகளையும் கொண்டது. ஏகம் என்றால் ஒன்று. அந் - ஏகம் என்றால் ஒன்று அல்ல. அப்படி என்றால் பல. வக் என்றால் பேசுவது. வக்த்ர என்றால் பேசும் புலன், அதாவது வாய்  

அநேக அத்புத தர்ஸநம் = பல வித அற்புதமான தரிசனம்

அநேக திவ்யாபரணம் = பல வித திவ்ய ஆபரணங்கள்

 திவ்ய அநேக உத்யாத ஆயுதம் = பல வித உயர்ந்த ஆயுதங்கள்

அந்த வடிவம் பல வாய்களையும், விழிகளையும், திவ்ய படைகளையும் கொண்டது. பல அற்புத வடிவங்களை கொண்டது.

விவரூபத்தை விளக்க வேண்டும். இது வரை யாரும் கண்டிராத ஒன்று. காணாத ஒன்றை எப்படி விளக்குவது ?

தெரிந்த ஒன்றில் இருந்துதான் தெரியாத ஒன்றை விளக்க முடியும்.

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது.

அது பூனை போல இருக்கும், கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று சொன்னால் புரியும்.

அது போல, வியாசர் ஆரம்பிக்கிறார். 

அந்த உருவத்திற்கு பல வாய்கள் இருக்கின்றன, பல விழிகள் இருக்கின்றன , பலவிதமான ஆபரணங்களை அணிந்து இருக்கிறது என்று.

என்ன அர்த்தம்.

அது ஒரு தொகுதி. பல உயிர்களின் தொகுதி...எனவே அதற்கு பல வாய்கள், பல விழிகள். 

இறை என்பது அனைத்தின் தொகுதி. இந்த உலகம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பாருங்கள்...ஒன்றான அந்த உருவத்திற்கு எத்தனை வாய்கள் இருக்கும் , எத்தனை விழிகள் இருக்கும் ?

அதைத்தான் சொல்கிறார். 

பிரித்தது போதும். சேர்த்துப் பாருங்கள். 

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று பாரதி கூறியது போல...எல்லாம் ஒன்று சேர்ந்த தொகுதி தான் இறைவன். 

மணிகளின் நடுவே ஊடாடும் நூல் போல, அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்த்து வைத்து இருப்பது இந்த இறை சக்தி.

நீங்களும், நானும், அவரும், இவரும் , அதுவும் , இதுவும் எல்லாம் ஏதோ ஒன்றின் கூறுகள் என்று பறை சாற்றுவதுதான் இறை சக்தி. 

இதை விளக்குவத்தான் விஸ்வரூபம்.