Monday, June 30, 2014

கீதை - 10.32 - முதலும், நடுவும்,முடிவும் நானே

கீதை - 10.32 -  முதலும், நடுவும்,முடிவும் நானே 


सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम् ॥१०- ३२॥

ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||

ஸர்கா³ணாம் = படைப்புகளில்

ஆதி ³ரந்தஸ்ச மத்யம் = ஆதி, அந்தம், மத்யம் 

சை வா அஹம் = நான் இருக்கிறேன்

அ ர்ஜுந  = அர்ஜுனா

அத்யாத்ம வித்யா வித்யாநாம் = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாய் இருக்கிறேன்

 வாத: ப்ரவத³தாமஹம் = பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்

படைப்பில் நான் ஆதி, அந்தம் நடுவாக இருக்கிறேன். 
வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாக இருக்கிறேன்.
பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்.

காலம் என்பது அறிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது. என்று தொடங்கியது, எப்படி இயங்குகிறது, என்று  முடியும் என்று அறிய முடியாமல் இருக்கிறது. 

படைப்பு என்று தனியாக ஒன்று  இல்லை. படைக்கப்பட்ட கணம் முதல் படைக்கப்பட்டவை இறக்கத்  தொடங்குகின்றன.ஒன்று அழிந்து இன்னொன்று தொடங்குகிறது. படைப்பு முதலிலும் இருந்தது, நடுவிலும் இருக்கிறது, இறுதியிலும் இருக்கும். இறந்தது பிறக்கத்தான் வேண்டும். இல்லை என்றால் உலகம் முடிந்து  போய் விடாதா ? படைப்பின் அனைத்து கட்டங்களிலும் நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன். 

வாழ்வில் ஏதேதோ படிக்கிறோம். எதை எதையோ அறிந்து கொள்ள  முயல்கிறோம். அறிய அறிய அறியாமை தான் வளர்கிரது. 

 பொருள்களும்,அதன் வடிவங்களும், தன்மைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றம் அனைத்தையும் நம்மால் படித்து அறிந்து கொள்ள முடியுமா ? ஒரு ஆயுள் போதுமா அதற்கு ? எதை அறிந்து கொண்டால் பின்  வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டாமோ அந்த வித்தை அத்யாத்ம வித்தை. எல்லா அறிவுக்கும் அடிப்படை அறிவு ஆத்ம அறிவு. அந்த அறிவாக நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன். 


ப்ரவத³தா என்ற சொல்லுக்கு பேசுவோர் என்று துல்லியமாக சொல்ல முடியாது. வாதம் புரிபவர்களில், ,ஆராய்பவர்கள், என்று  கொள்ளலாம்.

வாக்கு வாதம் பல தளங்களில் நடக்கும்.

சண்டை போடுவது, எதிராளியை மடக்குவது, தவறான உதாரணங்களை காட்டுவது, பலத்தை உபயோகப் படுத்துவது என்று பல தளங்களில் இயங்குகிறது. இதில் முக்கியமான ஒன்று வாதம்  புரிவது. வாதம் என்பது நூல்களை  கற்றுத் தேர்ந்து, அதில் சொல்லப் பட்ட உண்மைகளை பேச்சின் மூலம் நிலை  நிறுத்துவது. இது உண்மையை கண்டறியப் பயன்படுவது. அந்த வாதமாக  இருக்கிறேன் என்கிறான் கண்ணன்.

வாதம் உண்மையை அறியும் கருவி.


Sunday, June 29, 2014

கீதை - 10.31 - ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை)

கீதை - 10.31 - ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை) 



पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥

பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||


பவந: பவதாமஸ்மி = தூய்மை செய்பவற்றில் நான் காற்று

ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் = ஆயுதம் தான்கியவர்களில் நான் இராமன்

ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி = மீன்களில் நான் சுறா

ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ  = ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை )


தூய்மை செய்பவற்றில் நான் காற்று; ஆயுதம் தாங்கியவர்களில் நான் இராமன். மீன்களில் நான் சுறா. ஆறுகளில் நான் கங்கை.

இங்கே கங்கை என்பதற்கு பதில் ஜாஹ்ணவி என்ற பெயரை வியாசர்  பயன்படுத்துகிறார்.

ஏன் ?

முன்பொரு காலம் ஜ்ஹாணவி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் கங்கை ஆற்றை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து விட்டார். பின் , எல்லோரும் கேட்டு கொண்டதற்கு இணங்க  கங்கை ஆற்றை அவருடைய காதின் மூலம் வெளியில் விட்டார்.

இது என்ன ஆற்றை குடிப்பதாவது, பின் காதின் வழியே விடுவதாவது...அர்த்தமற்ற கதையாக இருக்கிறதே என்று நினைக்கலாம்.

இதன் அர்த்தம்.....


ஒரு விஷயத்தை நன்றாக படித்து முடித்தவர்களை "...அதை கரைத்து குடித்து விட்டான் " என்று சொல்லுவது வழக்கம். கங்கை என்பது அறிவின் குறியீடு. அந்த  அறிவை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து முடித்தார் என்று அர்த்தம்.

பின் காதின் வழியாக விட்டார் என்றால் அந்த அறிவை மற்றவர்களுக்குச் சொல்லித் தந்தார் என்று அர்த்தம்.

அவர் சொல்ல மற்றவர்கள் கேட்டார்கள். அவர்களின் காதின் வழியே அந்த அறிவு பரிமாறப் பட்டது.

அப்படி அறிவின் மூலமாக கருத்தப்பட்ட கங்கை போல நான் இருக்கிறேன் என்கிறான்  கண்ணண்.




Thursday, June 26, 2014

கீதை - 10.30 - பறவைகளில் நான் கருடன்

கீதை - 10.30 -  பறவைகளில் நான் கருடன் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன்

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.

பறவைகள்,  தான் செல்லும் வழியில் தங்கள் காலடித் தடத்தை  விட்டுச் செல்வது இல்லை

அவை போன பாதையை நாம் பின் பற்ற  முடியாது.

அவை வந்த பாதை கண்ணுக்குத்  தெரியாது.

 அங்கிருந்தது.இப்போது இங்கு  இருக்கிறது. எந்த வழியாக வந்தது என்பதற்கு பாதை இல்லை.

உண்மையும் அப்படித்தான்.  

அதை கண்டு அடைய  வழி இல்லை. யாரும் சொல்லித்தந்து அறிந்து விட முடியாது.

நாமே முயன்று அறிய  வேண்டும்.

கண்ணன் சொல்கிறான் நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன் என்று.

கண்ணன் சென்ற பாதையில் நாம் செல்ல முடியாது என்பது அர்த்தம்.

உங்கள் உண்மையை  நீங்கள் தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

புத்தகங்கள்,  மந்திரங்கள்,தந்திரங்கள், என்ற வழி முறையும்  உதாவது.

அவை உதவும் என்றால் எல்லோரும் அவற்றின் உதவியோடு இந்நேரம் கண்டு  பிடித்து இருப்பார்கள்.

உண்மையை கண்டறிய பாதை இல்லை.

பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்.


Tuesday, June 24, 2014

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம்

கீதை - 10.30 - இயக்குபவர்களில் நான் காலம் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன் 

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

அசுரர்களில் நான் பிரகலாதன். பிறப்பால் பிரகலாதன் ஒரு அசுரன். ஆனால் அவனை வைணவ உலகம் பிரகலாத ஆழ்வார் என்றே கொண்டாடுகிறது. பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாகவோ  தாழ்ந்தவனாகவோ ஆவதில்லை. அவன் செயலே  அவனை தீர்மானிக்கிறது. அசுர குலத்தில் பிறந்தாலும் நல்ல ஒழுக்கத்தால் உயர்ந்த அவனை தனக்கு இணையாக கூறுகிறான் கண்ணன்.

இயக்குபவர்களில் நான்  காலம்.

காலம் எப்படி நம்மை இயக்குகிறது ?

காலம் பல தளங்களில் இயங்குகிறது.

ஒன்று நம் கடிகாரம் காட்டும் காலம் - காலையில் எழ வேண்டும்,வேலைக்குப் போக வேண்டும், மதியம் உணவு, இரவு உறக்கம் என்று கடிகாரம் நம்மை செலுத்துகிறது.

இன்னொன்று, நாட்காட்டி சொல்லும் நேற்று , இன்று நாளை என்ற காலக் கணக்கு. எதிர் காலம் பற்றிய நம் கனவுகள், பயங்கள் , மற்றும் அவற்றால் நாம் செய்யும் செயல்கள். வரும் காலத்திற்கு என்று நாம் சேர்த்து  வைப்பது போன்றவை.

 கடிகாரத்தையும், நாள் காட்டியும் தவிர்த்து நம் மன அளவில் செயல் படும் காலம்.  நாம் ஏதோ ஒருவராக  இருக்கிறோம். நாம் யாரோ ஒருவராக ஆக விரும்புகிறோம். இதற்கு இடையில் உள்ள கால இடைவெளி. பணக்காரனாக, அறிவாளியாக என்று ஏதேதோ ஆக விரும்புகிறோம். நமக்கும் நம் இலட்சியத்திற்கும் இடையில் இருப்பது காலம். நம்மை நம் இலட்சியங்களை நோக்கி செலுத்துவது காலம். ஆசைகள் இல்லை என்றால் காலம் நின்று போகும்.

எதிர் காலம் பற்றிய கனவில் பயத்தில் நாம் நிகழ் காலத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.

காலம் நம்மை செலுத்துகிறது.

செலுத்து பவர்களில் நான் காலமாக இருக்கிறேன்.

நாளை என்று ஒன்று இல்லை என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் "இன்று" எப்படி மாறுகிறது என்று  தெரியும்.

சொல்லப் போனால் நாளை என்று ஒன்று கிடையவே கிடையாது. நாளை என்பது  ஒரு கற்பனை.

காலத்தைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையைப் புரிந்து  கொள்ளலாம்.






Monday, June 23, 2014

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் - பாகம் 2

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன்  - பாகம் 2


अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||


அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம்  = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில்  அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன். 

ஆள்வோரில் நான் யமனாக  இருக்கிறேன்.

எமன் உயிரை  எடுப்பவன் என்றுதான் அறிந்து இருக்கிறோம். அவன் எப்படி  ஆள்பவனாக  முடியும். அதிலும், காக்கும் கடவுளான கண்ணன் (திருமால் ) எப்படி நான்  எமனாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும் ?

இறப்பு என்பது என்ன ? அழித்தல் என்பது என்ன ? அழிதல் என்றால் என்ன ?

மலர் பார்க்க அழகாக இருக்கிறது ? அந்த அழகு எப்படி வந்தது ? விதை அழிந்ததால்  வந்த செடியில் இருந்து மலர் வந்தது. விதை அழியாமல் இருந்திருந்தால்  மலர் வந்தே இருக்காது.

மழை அழகு. மேகம் அழிந்தால் தான் மழை வரும்.

பட்டாம் பூச்சி அழகு. கூட்டுப் புழு அழிந்தால் தான் பட்டாம் பூச்சி வரும்.

கூட்டுப் புழுவுக்கு வருத்தம் இருக்கும், விதைக்கு வருத்தம் இருக்கும், மேகத்திற்கு வருத்தம் இருக்கும்   நாம் அழிகிறோமே என்று.

ஆனால் அந்த அழிவில் தான் அதை விட சிறந்த ஒன்று பிறக்கப் போகிறது என்று  அவைகளுக்குத்  தெரியாது. நமக்குத் தெரியும்.

ஒவ்வொரு ஆக்கத்தின் , தோற்றத்தின் பின்னால் ஒரு அழிவு இருக்கிறது. சொல்லப் போனால்   அழிவும் ஆக்கமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு  கொண்டவை.

இன்னும் சொல்லப் போனால் அவை இரண்டுமே ஒன்றுதான்.

அழிவும் ஆக்கமும் ஒரு தொடர்ச்சியான செயல்.

நாம் அழிவை மட்டும் பார்த்து விட்டு வருந்துகிறோம். விதையைப் போல, மேகத்தைப் போல.

அழிவு என்பது ஆக்கத்தின் ஒரு கூறு.

ஆக்கம் என்பது அழிவின் ஒரு கூறு.

அப்படி என்றால் இந்த இரண்டுக்கும் இடையே சில காலம் இருக்கிறதே அதைத்தான்  நாம் காத்தல்  என்கிறோம்.

ஆனது எல்லாம் அழிவை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறது.

அழிவு என்பது ஆக்கம் என்பதை தன் கருவில் வைத்து இருக்கிறது.

 அழிவு ஆக்குகிறது.

இதை இரண்டையும் செய்பவன் எல்லாவற்றையும்  ஆள்பவன் தானே ?

எனவே நான் ஆள்வோரில் யமனாக இருக்கிறேன் என்றான்.

 சிந்திப்போம்.


Friday, June 20, 2014

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன்

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் 


अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||


அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம்  = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில்  அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன். 

நாகம் என்பது பல தலைகளை உடையது. பல தலை நாகம் உண்டா என்றால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு தலையும் ஒரு குணத்தை குறிப்பது. ஆசை, கோபம், காமம், வெறுப்பு, பொறாமை, என்று நமக்கு ஆயிரம் தலைகள். எல்லாம் தலையில் இருந்துதானே வருகிறது. ஒரு நாள் அன்பு, மறு நாள் கோபம், இன்னொரு நாள் பொறாமை, மற்றும் ஒரு நாள் காமம் என்று நமக்குத்தான் எத்தனை தலைகள்.

இவற்றை எல்லாம் அடக்கி ஆள்பவன் இறை தன்மை அடைகிறான்.

காளிங்க நர்த்தனம்.

ஆதிசேஷ சயனம்....எல்லாம்  புலன் வழி பிறக்கும் குணங்களை அடக்கி ஆண்டதின்  குறியீடு.

ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனை  படுக்கையாக போட்டு, அதன் மேல்   நிம்மதியாக உறங்குவது என்றால் நடக்குமா ?

காமம் தலைக்கு ஏறினால் தூக்கம் வருமா ? பொறாமை நெஞ்சில் குடி கொண்டால் தூக்கம்   வருமா ?

அத்தனையையும் அடக்கி படுக்கையாக போட்டு ஒருவன் நிம்மதியாக தூங்குகிறான்  என்றால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

அவன் நாகமாகவும் இருக்கிறான், நாகத்தை அடக்கியவனாகவும் இருக்கிறான்.

ஆசையும் இருக்க வேண்டும். அது கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தொடரும்

Thursday, June 19, 2014

கீதை - 10.28 - நான் மன்மதன்

கீதை - 10.28 - நான் மன்மதன் 



आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥१०- २८॥

ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||

ஆயுதா⁴நாம் = ஆயுதங்களில்

அஹம் வஜ்ரம் = நான் வஜ்ராயுதம்

தேநூநாம் = பசுக்களில் 

காமது⁴க் அஸ்மி = நான் காமதேனு

ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிபவர்களில் நான் மன்மதன்

ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும், பாம்புகளில் நான் வாசுகி


ஆயுதங்களில் வஜ்ராமாகவும், பசுக்களில் காமதேனுவாகவும், பிறப்பிபவர்களில் மன்மதனாகவும், பாம்புகளில் வாசுகியாகவும் இருக்கிறேன். 


மதம் , மனிதனின் காம ஆசைகளுக்கு எதிரானதா ? காமம் கூடாது என்று சொல்கிறதா ?

கீதை அப்படி சொல்லவில்லை.

இந்த உலகம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால் பிறப்பு நிகழ வேண்டும். பிறப்பு  நிகழ வேண்டும் என்றால் ஆசை வேண்டும். ஈர்ப்பு வேண்டும்.

கண்ணன் சொல்கிறான், இந்த பிறப்புகளுக்கு பல விஷயங்கள் வேண்டும்....அவற்றில் நான் மன்மதனாக  இருக்கிறேன்  என்கிறான்.ஆசையைத்  தருவதே அவன் என்று சொல்லும் போது அந்த ஆசை  எப்படி தவறாக  முடியும்.

இந்து மதம் இல்லறத்தை போற்றுகிறது.


பாம்புகளில் நான் வாசுகியாக இருக்கிறேன்.

வாசுகி என்ற பாம்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய கயிறாக இருந்து  உதவியது.

வாழ்கை என்ற பாற்கடலை கடைந்து உண்மை என்ற அமிர்தத்தை அடைய நான்  உறுதுணையாக இருப்பேன் என்கிறான் கண்ணன்.

வாசுகி மிகப் பெரிய பாம்பு. மேரு மலையை சில சுற்றுகள் கயிறு போல சுற்றி அதை வைத்து கடைந்தார்கள்.

அதே வாசுகி என்ற பாம்பு சிவனின் கை விரல் மோதிரம் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி முடியும் ?

உண்மை எல்லாவற்றையும் விட பெரியது.

உண்மை எல்லாவற்றையும் விட நுணுக்கமானது.

அந்த உண்மை வாழ்வில் சாகா நிலை அடைய அமிர்தத்தை அடைய உதவும்.

உறவு கோல் நாட்டு உணர்வு கயிற்றினால் முருக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்றார் அப்பர்.


 இறை அருளால் அமிர்தத்தை கடைந்து எடுங்கள்.

அந்த பாலில் இருந்து வந்த வெண்ணை உண்ட கண்ணன், பாற்கடல் கடைந்த அமிர்தத்தை  அடைய அருள்  புரியட்டும்.