Wednesday, April 2, 2014

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥

க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||

க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம்  = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன்
ப்ரப⁴வ: = தொடக்கமும்
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை
அவ்யயம் = அழியாத


இவ்வுலகத்தின்  வழி,  தலைவன்,  சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.

சாட்சி - என்ன நடந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருப்பது சாட்சியின் வேலை. நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, லீலை என்று அனைத்தையும் இரசிக்கும்  மனம் வேண்டும். நானே எனக்கு சாட்சி என்றால், நான் கர்மாவை செய்கிறேன், ஆனால் அதன் விளைவுகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. நான் செய்வதை நானே பார்த்துக்  கொண்டிருக்கிறேன், மூன்றாவது மனிதனைப் போல.  இது ஒரு தவம். இந்த உடல் தான் நான் என்று இருக்காமல், இந்த உடல் செய்வதை  நான் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.

ஒரு நாள் அப்படி செய்து  பாருங்கள்.உங்களையே நீங்கள் கவனித்துப் பாருங்கள். பற்று விலகும்.

உலகிலேயே மிகப் பெரிய பற்று எது என்றால் இந்த உடலின் மேல் கொண்ட பற்று. அந்த பற்று விட வேண்டுமானால், சாவை வெல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு நீங்களே சாட்சியாக இருந்து பாருங்கள். நீங்கள் வேறு, உங்கள் உடல் வேறு  என்பது உங்களுக்குப்  புரியும்.

நண்பன் -  நாம் தான் நமக்கு மிகப் பெரிய நண்பன். நம்மை விட்டு எப்போதும் விலகாமல் , நம் நன்மை ஒன்றே நினைபப்து நமக்குள் இருக்கும் நான் தான். நட்பு என்பது   கூடவே பிறந்து வருவது அல்ல. பின்னால் வந்து சேர்ந்து கொள்வது. அது போல தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது பிறவியிலேயே வருவது அல்ல.  பின்னால் நிகழும் ஒரு நிகழ்வு. அது நிகழ்ந்த பின், நம்மைத் தவிர  நமக்கு பெரிய துணை யாரும் இல்லை.

தொடக்கம் அழிவு (முடிவு): அறிவின் தொடக்கம், அறியாமையின் முடிவு. வடிவங்களும், பெயர்களும் அழிந்து இந்த உலகம் முழுதும் ஒன்று என்ற புதுமையின் தொடக்கம்; புற வேற்றுமைகள் அழியும், எல்லாம் ஒன்றே என்ற ஞானம்  பிறக்கும். அதுவே தொடக்கம், அழிவு இரண்டும் சங்கமிக்கும் இடம்.  அறியாமை  அழியும்போது அறிவு பிறக்கிறது.

இறைவனிடம் வேண்டும் போது , மெய்ஞானம் வேண்டும் என்று மாணிக்க வாசகர் கேட்க்க வில்லை. பொய் ஞானம் அழிந்தால் போதும் என்று  வேண்டுகிறார்.

பொய் ஆனவை எல்லாம் போய் அகல வந்தருளி

 என்பார். பொய் அழியும்போது மெய் தானே பிறக்கும்.

ஆணவம் அழியும்போது அடக்கம் பிறக்கும்.

அஞ்ஞானம் அழியும்போது ஞானம் பிறக்கும்.

கயிறா பாம்பா என்ற சந்தேகம் உண்மை தெரிந்த போது அழிந்தது. கயிறு தான் என்ற  பிறந்தது. பொய் அழிந்தது உண்மை நின்றது.

எனவே நானே தொடக்கம் , நானே முடிவு.

"அழியாத விதை "...செடி தோன்றும் போது விதை அழிகிறது. ஆனால் இந்த உலகில்  இத்தனை விதமான பொருள்களும், உயிர்களும் தோன்றினாலும் இவற்றின்  மூலமான "நான்" என்பது அழியாமல் அப்படியே இருக்கிறது.  அது அப்படியே இருப்பதால்தான்  அதை அறிய முடியும். எல்லாவற்றிற்கும் அடி நாதமாக இருக்கும்  அந்த நான் என்பது நீறு பூத்த நெருப்பாய் அழியாமல் இருக்கிறது.  அதை அறிய வேண்டும்.

மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.  


இவற்றைத் தாண்டியும் கூட ஆழ்ந்த அர்த்தங்கள் உங்களுக்குத் தோன்றலாம்.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் - கீதை.

தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

உண்மை புலப்படும்.


Tuesday, April 1, 2014

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 1

கீதை - 9.18 -  நானே சாட்சி - பாகம் 1  


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥

க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||

க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம்  = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன் 
ப்ரப⁴வ: = தொடக்கமும் 
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை 
அவ்யயம் = அழியாத 


இவ்வுலகத்தின்  வழி,  தலைவன்,  சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.

பெரிய பட்டியலைத் தருகிறான் கண்ணன்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கதி, வழி, குறிக்கோள்:  கதி அல்லது வழி எப்போது தேவைப்படும் ? எது வரை தேவைப்படும் ?

ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைய ஒரு வழி வேண்டும். அந்த வழியாக சென்று நாம் அடைய நினைத்ததை அடையலாம். நாம் அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய துணையாக இருப்பது வழி.

கண்ணன் தான் வழி என்றால், அந்த வழி கொண்டு சேர்க்கும் இடம் யார் ? வழியை  விட அது கொண்டு சேர்க்கும் இடம் உயர்ந்தது அல்லவா ?

அடுத்து கண்ணன் சொல்கிறான் - "நானே காப்பவன் அல்லது தலைவன் அல்லது தாங்குபவன்  (பர்தா)".

இந்த உலகம் பல்வேறு பொருள்களாலும், மனிதர்களாலும் ஆனது. ஒவ்வொன்றும் ஒரு  வடிவம்,ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இத்தனை பெயர்களையும், வடிவங்களையும், தனித் தனியாக அடையாளம் கண்டு, அவற்றோடு உறவாடி அவற்றை தாங்கிப் பிடிப்பது என்னுள் இருக்கும் நான் என்ற அந்த ஒன்று (Self ).

"தலைவன்":  ஐந்து புலன்கள், புலன்கள் கொண்டு வரும் உணர்வுகள், உணர்வுகளை பகுத்து அறியும் மூளை, மூளை சொல்வதை கேட்கும் புலன்கள் என்று இவை அனைத்தையும் ஆளும் என் அறிவே இவற்றின் தலைவன். இவை அனைத்தையும் ஆளும் அறிவு இவை எல்லாவற்றிற்கும் தலைவன். அதை அறிவு என்று சொல்லலாம், ஞானம், தன்னுணர்வு, Self  எப்படி வேண்டுமானாலும்  சொல்லிக்  கொள்ளலாம்.எது இவற்றை ஆளுகிறதோ அது தலைவன்.

"புகலிடம்" - உண்மை ஒன்றுதான். அதன் பல் வேறு வடிவங்கள் தான் இந்த உலகம். எத்தனை ஆயிரம் அலைகள், கடல் ஒன்று தான். எத்தனை ஆபரணங்கள், தங்கம் ஒன்று தான். இத்தனை வடிவங்களும், பெயர்களும் கடைசியில்  ஏதோ ஒன்றின் பல்வேறு வடிவங்கள். அதுவே இவை அனைத்தின் புகலிடம். ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை.

"சரண் அடையும் இடம்"

 

 


Monday, March 31, 2014

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன்
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்


நான் தாய், தந்தை, பாட்டன், எல்லாவற்றையும் தாங்குபவன் :  இந்த உலகம் எல்லாம்  ஒன்றானாது, பெயர்களும், வடிவங்களும் மாறுமே தவிர அடிப்படையில்  இந்த உலகம் ஒன்று தான் என்று முன்பு பார்த்தோம்.

ஒன்று தான் என்றால் அந்த ஒன்று எது என்ற கேள்வி வரும். அந்த ஒன்று ஒரு பொருளா ? ஆளா ? அறிவா ? சக்தியா ? எது அந்த ஒன்று என்ற கேள்விக்கு விடை  தந்தாக  வேண்டும்.

இங்கே சொல்கிறான். 


அந்த ஒன்றின் குணங்கள் என்ன ? 

அன்பு முதல் குணம்,  அனைத்தையும் கடந்து நிற்பது அன்புதான்.  

தாய், தந்தை, அவர்களின் தாய் தந்தை, அதாவது பாட்டன் என்று எல்லோரும் நான்  என்பதன் அர்த்தம் அளவு கடந்த அன்பு நான் என்பது. ஒரு குழந்தையின் மேல்  தாயும் தந்தையும் விட வேறு யார் அதிகம் அன்பு செலுத்தி விட முடியும் ? 

அன்புதான் அனைத்தையும் தாண்டி நிற்பது. 

தாய் , தந்தை, பாட்டன் / முன்னோன் என வழி வழியாக வரும் அன்பு எனும் ஆறு. 

 அனைத்தையும் தாங்குபவன்: ஒரு தாய், தந்தை தங்கள் குழந்தையிடம் அன்பு காட்டலாம்.  அது ஒரு விதத்தில் சுயநலம். இன்னொரு பிள்ளையின் மேல் அன்பு காட்டுவார்களா ?   எல்லோர் மேலும் அன்பு செலுத்த மனதில்  கருணை வேண்டும். எனவே, நான் அனைத்தையும் தாங்குபவன் என்றான். எல்லோரையும் காக்கும்  குணம் - கருணை.

இந்த அன்பும் கருணையும் எதையும் தூய்மை  படுத்தும்.பாவங்களை    மன்னிக்கும். துன்பங்களைத் துடைக்கும். எனவே, தூய்மை படுத்துபவன்  என்ற மூன்றாவது  குணத்தை சொன்னான். 

வெறும் அன்பு மட்டும் இருந்தால் போதுமா ? 

அன்போடு அறிவும் சேர வேண்டும். 

எனவே , அடுத்த குணமாக நானே நான்கு மறைகளும் என்றான். மறைகளில்  கண்ட  உண்மை மூன்றாவது குணம்.

அன்பு - கருணை - அறிவு. 

இந்த மூன்றும் எங்கிருந்து உதிக்கிறது ? இவை நமக்குள் இருந்து தோன்றுகின்றன. எங்கிருந்து இவை  தோன்றுகிறதோ அதுவே நான்.

எங்கிருந்து தோன்றுகிறது என்று சிந்திப்போம்.


கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன் 
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது 
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்



Saturday, March 29, 2014

கீதை - 9.16 - நானே நான்

கீதை - 9.16 - நானே நான் 


अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥९- १६॥

அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||


அஹம் க்ரது = நான் ஹோமம்
அ ஹம் யஜ்ஞ: = நான் யாகம்
அஹம் ஸ்வதா = நான் ஸ்வதா என்ற மந்திரம்
அஹம் ஔஷதம் = நான் மருந்து
அஹம் மந்த்ர = நான் மந்திரம்
அஹம் = நான்
அஹம் = நான்
எவ = நிச்சயமாக
ஆஜ்யம் = நெய்
அஹம் = நான்
அக்னி = நெருப்பு
அஹம் = நான்
ஹுதம் = அவி


நான் ஹோமம். நான் யாகம். நான் ஸ்வதா என்ற மந்திரம். நான் மருந்து. நான் நெய்; நான் தீ; நான் அவி.நான் நானே.


எல்லாம் ஒன்றுதான்.

பெயரும் வடிவங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

இந்த செய்தியை கீதை பல இடங்களில் பல விதமாக சொல்லிக்  காண்பிக்கிறது.

எல்லாம் ஒன்றுதான் என்பதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படி  எதிர்  எதிர் துருவங்கள் ஒன்றாக இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை.

அதை தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டால் நாம் அந்த சந்தேகத்துடன் எப்போதும்  இருப்போம்.

 வகுப்பில் ஆசிரியர் ஒரு கணித விதியை சொல்லித்  தருவார்.பிதாகரஸ் விதி என்று  வைத்துக் கொள்வோம். விதியை சொல்லியாகி விட்டது. அது அனைத்து  வடிவ செங்கோண முக்கோணத்திற்கும் பொருந்துமா என்ற சந்தேகம்  வரும் அல்லவா ?

அந்த சந்தேகத்தை போக்க சில பல செங்கோண முக்கோணங்களை வரைந்து அதன் அளவுகள்  அந்த விதிப்படி இருக்கிறதா என்று சோதித்து அறிவது போல...

இங்கே கிருஷ்ணன் அனைத்தும் ஒன்றே என்ற விதியை ஒவ்வொன்றாக சொல்லிக் காண்பிக்கிறான்.

நானே யாகம். நானே யோமம். நானே மந்திரம். நானே மருந்து. நானே நெய். நானே ஆவி.....என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போனான்.

இப்படி சொல்லிக் கொண்டு போனால் என்று இந்த அட்டவணை முடிவது ?

நானே நான் - என்று எல்லாம் நானே என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த சிக்கல் அபிராமி பட்டருக்கும் வந்தது....

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும், கல்வி தரும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். இப்படி சொல்லிக் கொண்டு போனால் இது என்று முடிவது....

எனவே "நல்லன எல்லாம் தரும்" என்று சொல்லி  முடிக்கிறார்.

அது போல. அது நான், இது நான் என்று சொல்லிக் கொண்டு வந்த கண்ணன், கடைசியில் நான் நானே என்று சொல்லி முடிக்கிறான். 

இந்த ஸ்லோகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாம். 

இராமாயணத்தில் , விஸ்வாமித்திரன் யாகம் செய்ய இராம இலக்குவனர்களை காவல் வைத்தான். 

என்ன பைத்தியகாரத்தனம்.

யாருக்காக யாகம் செய்கிறானோ அவர்களை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போய் யாகம் செய்கிறான். 

காலமும் கணக்கும்  நீத்த காரணன் வெளியே நிற்கிறான். 

அது அறியாமையின் உச்சம். 

அது போல 

யாகமும், அதில் உள்ள ஹோம நெருப்பும்,  அதில் விடும் நெய்யும் நானே என்கிறான் கண்ணன். பின் எதற்கு ஹோமமும், யாகமும் ?

நேரே அவனையே அடைந்து விடலாமே ?

இந்த  பூஜைகளும்,மற்ற சடங்குகளும் ஏன் ?

சிந்திப்போம். 




கீதை - 9.15 - ஞான வேள்வி

கீதை - 9.15 - ஞான வேள்வி 


ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥९- १५॥

ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||

ஜ்ஞாநயஜ்ஞேந = அறிவை வளர்த்து

சா = மேலும்

அபி = நிச்சயமாக

அந்யே = மற்றவர்கள்

யஜந்தோ =  வேள்வியில்

மாம் = என்னை

உபாஸதே = உபாசிக்கிறார்கள்
|
ஏகத்வேந = ஒன்றாக

ப்ருத²க்த்வேந  = இரண்டாக

ப³ஹுதா⁴ = பலவிதமாக

விஸ்²வதோமுக²ம் = உலகம் தழுவிய ஒன்றாக


மற்றவர்கள் ஞான வேள்வியால் என்னை ஒன்றாகவும், இரண்டாகவும், பலவிதமாகவும், உலகம் அனைத்தும் தழுவிய ஒன்றாகவும் என்னை வழிபடுகிறார்கள்

இதில் மற்றர்வர்கள் யார் ?

பக்தியில் ஈடுபடாதவர்கள் மற்றவர்கள்....

முந்தைய ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளர்கிறது, பரிணமிக்கிறது என்று பார்த்தோம்.  பக்தி என்ற மலர் எப்படி  மலர்கிறது என்று பார்த்தோம்.

இந்த ஸ்லோகத்தில் அறிவு, ஞானம் எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.

பக்தி  சமயம் சார்ந்தது. பக்தி செய்வதற்கென்று கடவுள் வேண்டும், வழி படும் முறை வேண்டும் ஆனால் ஞானம் அப்படி அல்ல. அது சமய வேறுபாடுகளை கடந்தது.  இந்த மதம், இந்த கடவுள் , இந்த வழிபாட்டு முறை என்று கிடையாது.

இது ஞானத்தின் முதல் படி.

ஞானம் எப்படி பரிணமிக்கிறது ?

ஞானம் முதலில் தான் வேறு, மற்றவர்கள் வேறு என்று அறிகிறது. உலகில் உள்ள ஒவ்வொன்றும்  தனித் தனி என்று நினைக்கிறது.

வடிவங்களும், பெயர்களும் வேறு வேறு என்று நினைக்கிறது.

அடுத்த கட்டம்.

உலகை இரண்டு கூறாகப் பார்க்கிறது. பார்க்கும் தான், பார்க்கப்படும் வெளி உலகம்  என்று இரண்டு கூறாகப் பார்க்கிறது.

பார்ப்பவன், பார்க்கப் படுபவை என்ற இரண்டு கூறுகள்.

Observer and the Observed.

அடுத்த கட்டம்

உலகம் தழுவிய ஒன்றாக - Universal Oneness

அனைத்தும் ஒன்றே என்ற எண்ணம் வருகிறது.

தான் வேறு , உலகம் வேறு என்று தோன்றினாலும் இவை அனைத்தும் ஒன்றே  என்று அறிகிறது.

ஒன்றாகி,பலவாகி, உலகம் எங்கும் நிரம்பி நின்றதை அபிராமி பட்டர் இப்படி குறிப்பிடுகிறார்

“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”

ஒன்றாய்  அரும்பி,பலவாய் விரிந்து , இவ் உலகம் எங்குமாய் நின்றாள்

இப்படி உலகை , அதில் உள்ள உயிர்களை , பொருட்களை ஒன்றாக காண்பது அறிவினால் முடியும்.

அதுவே ஞான வேள்வி.

அந்த ஞான வழியில் செல்வதும் வழிபாடு தான்.







Thursday, March 27, 2014

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன - பாகம் 2

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன  - பாகம் 2

கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 2


सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||

ஸததம்  = எப்போதும்
கீர்தயந்தோ  = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா:  = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

கீர்த்தனைகளை பாடிக் கொண்டு, எப்போதும், பெரு முயற்சியுடன் , திட சித்தத்துடன், என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள். 

இது பக்தி யோகம்.

பக்தி பற்றி கிருஷ்ணன் சொல்கிறான்.

எது பக்தி, பக்தி எப்படி  படுகிறது, என்று இந்த ஸ்லோகத்தில் ஆழமாக விவரிக்கிறான்.

மேலும் சிந்திப்போம்...

---பாகம் 2 ------------------

பக்தியின் பரிணாம வளர்ச்சியை பற்றி  சொல்கிறது இந்த சுலோகம்.

"கீர்த்தனைகள் பாடிக் கொண்டு " : பக்தியின் தொடக்கம் கீர்த்தனை, பஜனை , பூஜை, புனஸ்காரம் என்று ஆர்பாட்டமாக  இருக்கும்.மணி அடிப்பது, மேளம் அடிப்பது, பாட்டு பாடுவது இவை எல்லாம் அதன் முதல்  படி.ஆரவாரம் இருக்கும்.  பெரும்பாலனவர்கள்  இது தான் பக்தி என்று நினைத்து அதோடு நின்று விடுகிறார்கள். "நான் ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்கிறேன், வெள்ளி சனி  என்றால் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன், ஒரு பஜனை, கதா கலாட்சேபம்  விடுவது கிடையாது ...." என்று பெரிய பட்டியல் வைத்து இருப்பார்கள். அது முடிவு அல்ல....அதையும் தாண்டி போக  வேண்டும்.

"எப்போதும்": பக்தி என்பது ஏதோ காலையில்  ,கொஞ்ச நேரம், மாலையில் கொஞ்ச நேரம்,  மற்ற படி நாளு கிழமைகளில் பொங்கல் வைப்பது, சுண்டல் வைப்பது, விரதம் இருப்பது  என்று ஒரு வேலை மாதிரி இருக்கக் கூடாது. பக்தி என்பது எப்போதும்  மனதில் இருக்க வேண்டும். அது எப்படி இருக்கும் ?

 "பெரு முயற்சியுடன் , திட சித்ததுடன்" : பக்தி செய்வது என்பது சாதாரண  விஷயம்  இல்லை. பாட்டு பாடுவதும், நைவேத்தியம் செய்வதும் பக்தி அல்ல. அதற்கு பெரு முயற்சி வேண்டும். திட சித்தம் வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியமானவை

என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள் :  அது என்ன வணங்கி பின் வழிபடுதல் ?

வணங்குதல் என்று சொல்லும் போது , வணங்கப் படும் பொருள் நம்மை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதை நாம் வணங்குவோம். அதன் மேல் மதிப்பும் மரியாதையும் வேண்டும்.

வழி படுதல் என்றால் அதன் வழியில் செல்லுதல்.  வழியைப் பின் பற்றுதல், வழியைத்  தொடர்தல், வழியில் செல்லுதல் என்று பொருள்.

ஒரு வணங்கத்தக்க வழியைக் கண்டு பெரு முயற்சியுடனும், திட மனத்துடனும், அதன்  வழியில் செல்லுதல் என்பது இந்த ஸ்லோகத்தின் அறிவுரை.

நீங்கள் எதை உயர்வாகக் கொள்கிறீர்களோ, எதை புனிதமாகக் கொள்கிறீர்களோ அதன் வழியில்  செல்லுதல் எப்போது செல்வது என்பது பக்தி, வழிபாடு.

அது மனிதர்களாக  இருக்கலாம்,. கொள்கைகளாக இருக்கலாம், நீங்கள் நம்பும் தெய்வங்களாக இருக்கலாம் .... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

எதன் வழியில் செல்கிறீர்களோ, அது உங்கள் பக்தி , அது உங்கள் வழிபாடு.

உடனே, சில பேர்  கேட்கலாம்,நான் திருட்டு வழியில் செல்கிறேன், கொலை கொள்ளை  என்ற அதர்ம வழியில் செல்கிறேன்...அதுவும் பக்தி, வழிபாடா என்று.

 அவர்களுக்கு ஒரு கேள்வி ...

நீங்கள் அதை எல்லோரிடமும் சொல்வீர்களா (கீர்த்தனம் ?). நாம் திருடிச் சேர்த்தது இந்த சொத்து  என்று எல்லோரிடமும் சொல்ல முடியுமா ?

திருடன் கூட அவன் செயலை நியாயப் படுத்துவானே தவிர அது உயர்ந்த செயல் என்று  அதை வணங்க மாட்டான். தன் பிள்ளை அந்தத் துறையில் வர வேண்டும் என்று  விரும்ப மாட்டான்.

எனவே அவற்றை விட்டு விடுவோம்.

பக்தி என்பது உயர்ந்த, சிறந்த, புனிதமான (வணங்கத்தக்க) வழியை தேர்ந்தெடுத்து, திட மனதுடன், விடா முயற்சியுடன், எப்போதும் அந்த வழியில் செல்வது.

யோசியுங்கள்....எது உங்கள் வழி என்று...உங்கள் பக்தி என்று, உங்கள் வழி பாடு என்று....

அந்த சிந்தனை உங்களை வழி நடத்தும்.