Monday, April 7, 2014

கீதை - 9.23 - எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே

கீதை - 9.23 - எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே 


येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥९- २३॥

யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||

யே = அவர்கள்
அபி = மேலும்
அன்ய = வேறு
தே³வதா = தேவதைகளை
ப⁴க்தா = பக்தர்கள்
யஜந்தே = வணங்குபவர்கள்
ஸ்²ரத்³த⁴யாந்விதா:  = நம்பிக்கையுடன்
தே = அவர்கள்
பி = மேலும்
மாம் = என்னையே
எவ = மட்டும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யஜந்த்யதி = (அவர்கள்) வணங்குகிறார்கள் 
அவிதி⁴பூர்வகம் = தவறான வழியில்

மற்ற அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் வணங்குபவர்களும் , தவறான வழியில் என்னையே தொழுகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு குறிக்கோள். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிக்கோள்.

படிக்கிற காலத்தில் நல்ல மதிப்பெண் வேண்டுமே என்று,
படித்து முடித்த பின், நல்ல வேலை வேண்டும்,
பின் நல்ல துணை வேண்டும்,
பின் நல்ல குழந்தைகள் வேண்டும்,
பின் அவைகளுக்கு படிப்பு, வேலை, திருமணம்,
பின் வாழ்க்கை பற்றிய சிந்தனை, மூப்பு, மோட்சம், பிறவியில் இருந்து விடுதலை என்று எண்ணங்களும் குறிக்கோள்களும் மாறிக் கொண்டே  இருக்கின்றன.

எது தான் நிரந்தரம் ? எதுவும் இல்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை தேடி, அலைகிறோம்.

அந்த தேடல் நிறைவேற வேண்டுமே என்று ஏங்குகிறோம்.

நிறைவேறும் என்று நம்புகிறோம்.

அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.

நீங்கள் எதை நம்பினாலும், அவை எல்லாம் ஒன்றுதான்.


பொருள்களுக்குள் வேறு பாடு இல்லை - புரிகிறது
மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை -   புரிகிறது.

நம்பிக்கைகளுக்குள்ளும் வேறு பாடு இல்லை - எல்லா நம்பிக்கைகளும் ஒன்று தான்.

ஜாதி மத வேறு பாடு இல்லை.

பணக்காரன் ஏழை வேறுபாடு இல்லை

இளையவன் முதியவன் என்ற வேறுபாடு இல்லை

எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒன்றைப் பற்றிதான்.

"வேறு வேறு தெய்வங்களை தொழுதாலும், தவறான வழியில் என்னையே தொழுகிறார்கள்"

யார் எதை வழி பட்டாலும், அது என்னையே வழி படுவதற்கு சமம்.

அது எப்படி எல்லா வழிபாடுகளும், நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?

பணம் வேண்டுபவனும், பதவி வேண்டுபவனும், அதிகாரம் வேண்டுபவனும், முக்தி  வேண்டுபவனும், இறைவனை அடைய வேண்டும் என்று விரும்புவனும்  - அவற்றை அடைய வேண்டி காரியங்களை செய்து, அவை கிடைக்கும் என்று நம்புகையில், எப்படி எல்லா நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?

பின் வரும் சுலோகங்களில் அதை விளக்குகிறார் வியாசர்....

நம்புங்கள்....

Sunday, April 6, 2014

கீதை - 9.22 - செயலில் பக்தி

கீதை - 9.22 - செயலில் பக்தி


अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥९- २२॥

அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||

அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||

அநந்யா =  வேறு ஒன்றிலும்

சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்

மாம் = என்னை

யே = அவர்கள்

ஜநா:  = மக்கள்

பர் உபாஸதே  = முறையுடன் உபாசித்து

தேஷாம் = அவர்களின்

நித்யா = எப்போதும்

அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்

யோக³ = தேவைகளை

க்ஷேமம் = பாதுகாத்து

வஹாம்ய = பொறுப்பு

அஹம் = நான்




வேறு எந்தவித நினைப்பும் இன்றி என்னையே  வழிபடுவோர், அந்த நித்திய யோகிகளின் தேவைகளையும், பாதுகாப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

யோக க்ஷேம - என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் சொல்கிறார்கள். நன்மை தீமை என்று ஒரு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது பக்தர்களின்  நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பு என்ற அர்த்தத்தில். அது அவ்வளவு  சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. நன்மை சரி. தீமை ?


இன்னொரு அர்த்தம் - அவர்களின் தேவைகளைத் தந்து, அவர்களிடம் இருப்பவற்றை பாதுகாக்கிறேன் (protection ).


இந்த ஸ்லோகத்தை மேலோட்டமாக பார்த்தால் இது ஏதோ , கிருஷ்ணன் நமக்கு வேண்டிய  குளிர் சாதன பெட்டி, தொலை காட்சி பெட்டி, கணணி போன்ற பொருள்களை தந்து அவை நல்ல படியாக செயல் படவும், அதை வேறு யாரும்  திருடிக் கொண்டு போகாமல் இருக்கவும் உதவி செய்வான் என்று சொல்வது  போல  இருக்கிறது.


நடக்கிற காரியமா ? வியாசர் அப்படி சொல்வாரா ?

அப்படி அல்ல பொருள்.

நாம் எப்படி வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்று சொல்லித் தருகிறது இந்த சுலோகம்.

நாம் எந்த காரியத்தை செய்தாலும், அதில் வெற்றி பெற, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறது.


நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை பாதிக்கிறது. நம்மை மாற்றுகிறது.

அப்படி என்றால் காரியங்களை சிறப்பாகச் செய்தால் நம்மிடம் நல்ல பாதிப்பு இருக்கும். ஏனோ தானோ என்று செய்தால், அதன் பாதிப்பும் அப்படித்தான் இருக்கும்.

காரியங்களை செய்வதன் மூலம் நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்.

பக்தி யோகம் , கர்ம யோகத்துடன் இணையும் சுலோகம் இது.

செய்யும் காரியத்தை பக்தியுடன் செய்யலாம்.

எப்படி ?

மூன்று படிகள்.

முதலாவது:

"வேறு ஒன்றிலும் மனதைச் செலுத்தாமல்": (concentration ). ஒரு காரியத்தை செய்யத் தொடங்கிவிட்டால் வேறு எதிலும் மனதைச் செலுத்தக் கூடாது. எடுத்த காரியத்திலேயே கவனம் முழுவதும் இருக்க வேண்டும். படிப்பு என்றால் படிப்பில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். வேலை என்றால் அதில் மட்டும் கவனம். ஒன்றை செய்யும்போதே மற்றொன்றில் மனம் தாவக் கூடாது.

இரண்டாவது,


"முறையுடன் உபாசித்து" : ("Completely engaged "): உபாசனை என்றால் இலயித்தல். அதோடு ஒன்றி. அது வேறு தான் வேறு என்று இல்லாமல், அதனோடு இணைந்து விடுவது. மனமும், உடலும், சிந்தனையும் செய்யும் வேலையில் இணைந்து செயல் படுவது.

மூன்றாவது,

"பக்தியுடன்" (Devotion ): செய்யும் வேலையில் ஒரு அர்ப்பணிப்புடன் செய்தால் அந்த வேலை வெற்றிகரமாக முடிவது மட்டும் அல்ல, அந்த வேலை நம் மீது ஒரு சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

பொதுவாக நாம் எப்படி வேலை செய்கிறோம் ?

ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும் போதே   முதலில் அதில் ஒரு சந்தேகம். இது சரிதானா, இதை நாம் செய்ய முடியுமா என்று .

பின் குழப்பம் , இதை விட அது சிறந்ததா, அப்படி  செய்யலாமா,இப்படி செய்யலாமா என்று குழப்பம்.

பின்  பயம், சரியாக வருமா, வராவிட்டால் என்ன செய்வது என்று.

பின் ஆசை, சரியாக வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று.

இப்படி ஆயிரம் சலனங்களுக்கு நடுவே நாம் காரியம் செய்கிறோம்.

கீதை சொல்கிறது

- ஒன்று பட்ட சிந்தனையுடன்
-   முழுமையாக ஈடுபட்டு
- ஒரு அர்ப்பணிப்பு மன நிலையில் இருந்து செயல் பட வேண்டும் என்கிறது.

சரி, அப்படி செய்தால் என்ன கிடைக்கும் ?





Saturday, April 5, 2014

கீதை - 9.21 - பூஜையின் பலன்கள் கால எல்லைக்கு உட்பட்டது

கீதை - 9.21 - பூஜையின் பலன்கள் கால எல்லைக்கு உட்பட்டது 


ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥९- २१॥

தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||

தே  = அவர்கள்
தம் = அதை
பு⁴க்த்வா = அனுபவித்து
ஸ்வர்க³லோகம் = சுவர்க்க லோகத்தை
விஸா²லம் = பரந்து விரிந்த
க்ஷீணே = தீர்ந்த பின்
புண்யே = புண்ணியங்களின் பலனாக
மர்த்யலோகம் = இறக்கும் உலகமான இந்த பூமியில்
விஸ²ந்தி = மீண்டும் வருகிறார்கள் 
ஏவம் = இப்படி
த்ரயீ = மூன்று (வேதங்கள் ?)
த⁴ர்மம் = தர்மங்களை
அநுப்ரபந்நா = கடைப்பிடித்து
க³தாக³தம் = இறந்து பிறந்து
காமகாமா = உலக பொருள்களில் பற்று வைத்து
லப⁴ந்தே = அடைகிறார்கள்

பரந்து விரிந்த வானுலகில் இன்பமாக வாழ்ந்து, செய்த புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மறுபடிம்,  அழிவுடைய இந்த பூலோகத்திற்கு திரும்புகிறார்கள். இப்படி மூன்று வித்தைகளில் (வேதங்கள் ?) தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

முந்தைய ஸ்லோகத்தில், எப்படி யாகங்கள் செய்து, பாவங்கள் விலக்கி , மூன்று வித்தைகளை  அறிந்தவர்கள் எப்படி விண்ணுலகை அடைந்து இன்பம் அடைகிறார்கள் என்று  பார்த்தோம்.

அது தான் கீதை காட்டும் வழியா ?

யாகங்கள் செய்து சுவர்க்கம் அடைய  முடியும் என்றால் பின் எதற்கு கர்ம யோகமும், பக்தி யோகமும், ஞான யோகமும் என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதை இங்கே விளக்குகிறார்.

ஆசைகள், ஆசைகள் தான். ஆசை எதன் மேல் என்றாலும், அது ஆசை தான். சாதாரண  பொருள்கள் மேல் கொள்ளும் ஆசையும் ஆசை தான். விண்ணுலகம்  வேண்டும் என்று கொள்ளும் ஆசையும் ஆசைதான். இந்த இரண்டு ஆசைகளில்  ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று வித்தியாசம் இல்லை.

வேதங்களை அறிந்து, யாகங்கள் செய்து, பாவங்கள் தவிர்த்து, தூய்மையாகி விண்ணுலகை  ஆசைப் படுவோர், அதை அடைவார்கள்.

என்ன பிரயோஜனம் ?

விண்ணுலகை அடைந்தாலும், செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் மீண்டும் இங்கே  வந்து பிறப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து இந்த  சுழலில் இருந்து விடுபட மாட்டார்கள்.

பொருள் வேண்டி, சுகம் வேண்டி, பூஜை செய்வதை கீதை ஏற்றுக் கொள்ளவில்லை  என்று தான் சொல்ல வேண்டும்.

சுவர்க்கமே அடைந்தாலும், பின் கொஞ்ச காலம் கழித்து மீண்டும், புண்ணிய பலன்கள் தீர்ந்த  பின், மீண்டும் இங்கே வந்து தான் தீர வேண்டும்.


அதாவது, அனைத்து பூஜைகளும்,  சடங்குகளும் தரும் பலன்கள்  ஒரு கால எல்லைக்கு  உட்பட்டவை. அவை நிரந்தர தீர்வு அல்ல.

யோசித்து பாருங்கள், சுவர்க்கம் சென்று, அதன் இன்பங்களை அனுபவித்து, பின்  மீண்டும் இங்கு வருவது என்றால் எவ்வளவு கடினம் என்று.

எல்லா பூஜைகளும் கொஞ்ச காலம் பலன் தரும், பின் தீர்ந்து போகும். மீண்டும்  பழைய கவலைகள், சிக்கல்கள் தான்.

கீதை "சுவர்க்கம் அடைந்து, அதன் இன்பங்களை அனுபவித்து " என்று சொல்வதை  ஒரு குறியீடாகக் கொள்ளலாம்.

யாகம், வேள்வி, பாவம் தவிர்த்து என்பது பூஜையின் உச்சம்.

சுவர்க்கம் அடைவது என்பது பலன்களின் உச்சம்.

எவ்வளவுக்கெவ்வளவு பூஜை செய்கிறோமோ, அவ்வளவுக்களவு பலன் கிடைக்கும்.

சரி, புரிகிறது.

பூஜையின் பலன்கள் ஒரு கால எல்லைக்கு உட்பட்டது என்று புரிகிறது.

வேறு வழி தான் என்ன ?

சிந்திப்போம்.


Friday, April 4, 2014

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும்

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும் 


त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥९- २०॥

த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||


த்ரை வித்³யா = மூன்று வித்தைகள்.  இதை மூன்று வேதங்களை அறிந்தவர்கள் என்று பொருள்  சொல்கிறார்கள்.ஏன் மூன்று வேதங்கள், ஏன் நாலாவது வேதம் இல்லை ?

மாம் = என்னை

ஸோமபா:  = சோம பானம் அருந்தி

பூத = தூய்மை அடைந்து

பாபா = பாவங்களில் இருந்து

யஜ்ஞை = வேள்விகளில்

இஷ்ட்வா = வணங்கி

ஸ்வர்க³திம் = சுவர்க + கதி = விண்ணுலக வழி 

ப்ரார்த²யந்தே = பணிவுடன் 

தே = அவர்கள்

புண்யம் = புண்ணியம்

ஆஸாத்³ய = அடைகிறார்கள்

ஸுரேந்த்³ர = இந்திரனின்

லோக = உலகம்

அ ஸ்²நந்தி = அனுபவிக்கிறார்கள்

தி³வ்யா = வானுலக

தி³வி = சொர்கத்தை

தே³வபோ⁴கா³ந்  = தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்


சோம பானம் அருந்தி,  பாவம் அகன்றோர் , மூன்று வித்தைகளை (வேதங்களை ?) அறிந்தோர், என்னை வேள்விகளால் வணங்கி வான் உலகைத் தர வேண்டுகின்றனர் . அவர்கள்,  புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து வானுலகில்  திவ்யமான தேவ போகங்களைத் அனுபவிக்கிறார்கள்.

சோம பானம் அருந்தி - இந்த சொற்றொடர் மிகுந்த சர்ச்சைக்குள்ளான ஒன்று. கீதை  "தண்ணி" அடிக்கச் சொல்கிறது. அந்த காலத்தில் முனிவர்கள் "சோம பானம் " குடித்தார்கள். குடிப்பது பாவம் இல்லை. சொல்லப் போனால் அது ஒரு பிரசாதம். என்றெல்லாம் மக்கள் சொல்லத் தலைப் பட்டார்கள்.

தகுதி இல்லாதவனுக்கு உயர்ந்த விஷயங்களை சொல்லக் கூடாது. சொன்னால் அவன்  அதை கீழ்மை படுத்துவான். உயர்ந்த விஷயங்களை தன்னுடைய  கீழ் நிலைக்கு கொண்டு வருவான் என்று நம் முன்னவர்கள் சொல்லி இருந்தார்கள்.

அந்த காலத்தில் உயர்ந்த விஷயங்கள் எல்லோருக்கும் சொல்லப் படுவது இல்லை. அது குலம் பற்றியது இல்லை. தகுதி பற்றியது.

நீண்ட யாகங்கள் செய்த பின், யாக குண்டத்தின் அனலின் முன்னாள் நீண்ட நேரம் இருந்த பின் , யாகம் முடிவுற்றும் நேரத்தில் சோம பானம் என்ற அந்த   பானத்தை  சிறிது உட்கொள்வார்கள் - ஒரு பிரசாதம் மாதிரி.

சோம பானம் அருந்தி என்றால், யாகம் நிறைவு பெற்றது என்று பொருள்.

இன்றைய வழக்கில் சொல்வது என்றால், "தட்சிணை வாங்கிச் சென்றார்கள் " என்று சொல்லலாம். தட்சிணை வாங்கிச் சென்றார்கள் என்றால் செய்ய வேண்டிய  சடங்குகளை நல்ல விதமாக செய்து முடித்தார்கள் என்று பொருளே தவிர, தட்சிணை வாங்குவது மட்டும்தான் அதன் அர்த்தம் அல்ல.

இங்கே நாம் பார்க்க வேண்டியது, சோம பானம் அருந்துவதைப் பற்றி அல்ல. பின் என்ன  நடந்தது என்பது தான்.

"தூய்மை அடைந்து" "பாவங்களில் இருந்து விலகி" : இந்த இரண்டும் நிகழ்கிறது.  சோம பானம் ஒரு போதைப் பொருள் என்றால் எவ்வாறு தூய்மை  அடைவது ? எவ்வாறு பாவங்களில் இருந்து விலகுவது ?

மேலும்

"வேள்விகள் மூலம்" : எனவே வேள்வியின் முடிவில் சோம பானம் அருந்தி, தூய்மை  அடைந்து, பாவங்களில் இருந்து விலகி என்று நாம் அறிய முடியும்.

யார் இவற்றைச் செய்கிறார்கள்: மூன்று வித்தைகளில் விற்பனர்கள். அவர்கள் படித்தவர்கள். அறிஞர்கள். அவர்களுக்குத் தெரியாதது அல்ல.

எதற்காக வேள்வி செய்கிறார்கள்: சொர்க்கம் வேண்டும், வானுலகம் வேண்டும், தேவ போகங்கள் வேண்டும் என்று வேள்வி செய்கிறார்கள்.

இது என்ன கீதை வேறு வழியில் செல்வது போல இருக்கிறதே ?

கர்ம யோகம், ஞானயோகம், பக்தி யோகம் என்று சொல்லிக் கொண்டு வந்த கீதை  இப்போது என்னடா என்றால் பூஜை, புனஸ்காரங்களில் இறங்கி விட்டதே.

யாகம் செய்தால் இந்திர உலகம் கிடைக்கும் என்றால் எதற்கு கஷ்டப் பட்டு  கர்ம யோகம்  செய்ய வேண்டும், எதற்கு பக்தி செய்ய வேண்டும், எதற்கு ஞானத்தை  தேடி அலைய வேண்டும் ?

சில பல யாகங்களை செய்து பலனை அடைந்து  விடலாமே.இது மிக மிக எளிமையான  வழியாக இருக்கிறதே என்று மக்கள் நினைக்கலாம்.

நினைப்பார்கள்.

கீதையை முழுமையாக படிக்காமல் , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில  ஸ்லோகங்களை படித்து விட்டு, சில சமயம் ஒரு சில வார்த்தைகளை  படித்து விட்டு, இது தான் கீதை சொல்கிறது என்று செய்யத் தலைப் பட்டு விடுகிறார்கள்.  அது தவறு.

இந்த யாகம், பூஜை, இவற்றைப் பற்று கீதை என்ன சொல்கிறது என்று அடுத்த  ஸ்லோகத்தில்  மேலும் சிந்திப்போம்.


Thursday, April 3, 2014

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும்

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும் 


तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥९- १९॥

தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||

தபாமி = வெப்பத்தை தருவது 
அஹம் = நான்
அஹம் = நான்
வர்ஷம் = மழை
நிக்³ருஹ்ணாமி  = நிறுத்தி வைக்கிறேன்
யுத்ஸ்ருஜாமி = அனுப்புகிறேன் 
ச | = மேலும்
அம்ருதம் = சாகா நிலை
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ம்ருத்யு = இறப்பு 
ச = மேலும்
ஸத் = உள்ளதும்
அஸத் = இல்லாததும்
சா = மேலும்
அஹம் = நான்
அர்ஜுனா = அர்ஜுனா



நான் வெப்பம் தருகிறேன்; மழையை நான் தடுத்து நிறுத்துகிறேன் . மழையை பெய்விக்கிறேன். நானே சாகா நிலை. நானே மரணம்.  அர்ஜுனா, உள்ளதும் இல்லாததும் நான்.

எல்லாம் ஒன்றின் வெளிப்பாடே என்று சொன்னால் நம்புவது கடினம். எப்படி எல்லாம்  ஒன்று சொல்ல முடியும் ? எல்லாம் வேறு வேறாகத் தானே இருக்கிறது ?  ஒன்று என்று சொல்லுவது, தத்துவமாக வேண்டுமானால் நன்றாக  இருக்கலாம். நடை முறைக்கு ஒத்து வராது என்றே தோன்றுகிறது.

இதை வியாசர் விளக்குகிறார்....

இந்த உலகில் அனைத்தும் தாவரங்களை சார்ந்து  இருக்கின்றன. அத்தனை உயிர்களுக்கும்  அடிப்படை உணவு. உணவு இல்லாமல் எதுவும் இல்லை.

நான் இது வரை மாமிசம் சாப்பிடாதே இல்லை. இருந்தும் என் உடலில் இவ்வளவு  மாமிசம் எங்கிருந்து வந்தது ?

நான் உண்ட உணவில் இருந்து அந்த மாமிசம் வந்தது.

இப்படி அத்தனை உயிர்களுக்கும், உடல்களுக்கும் உணவே பிரதானம்.

உணவில் இருந்துதான் அத்தனையும் வந்தது.

அந்த உணவுக்கு அடிப்படை சூரிய ஒளியும் நீரும்.

இங்குள்ள அனைத்தும் வெப்பம் மற்றும் நீரின் பல்வேறு வடிவங்கள் என்று நம்மால்  உணர முடிகிறது அல்லவா ?

கிருஷ்ணன் நானே வெப்பம் , நானே மழை என்று கூறும்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்றால் எல்லாம் ஒன்று தான், வேற்றுமை பாராட்டக் கூடாது  என்ற செய்தியை.

அதை நாம்  அறிந்து கொள்ள இது ஒரு தூண்டுகோல். 


நானே இறப்பு, நானே சாகா நிலை :  இறப்பு என்பது என்ன ? மாற்றம் தான் இறப்பு.  ஒன்று மாறும் போது என்ன நிகழ்கிறது. பழையது இறந்து புதியது பிறக்கிறது.  ஆனால், இந்த மாற்றம் நிகழும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த உலகம்  மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது இது பிறந்து பிறந்து இறக்கிறது. என்னதான்  மாறினாலும்,அதன் அடிப்படை மாறாமல் இருக்கிறது. இன்று இருப்பது , நாளை இல்லாமல் போகும். இன்றைய கோபமும் காதலும் நாளை இல்லாமல் போகும். பாசம் மாறும். வெறுப்பு மாறும். மாறாதது எதுவும் இல்லை.



உள்ளதும் இல்லாததும்:  பொருள்களும், அவற்றைப் பற்றிய நம் எண்ணங்களும் சேர்ந்ததுதான் உலகம்.  Objective  and Subjective என்று சொல்லல்லாம்.

Objective  என்பது உள்ளது.

Subjective  என்பது வெளியே இல்லாத ஒன்று. நம்  எண்ணங்கள், நம் கற்பனைகள்.


மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய சுலோகம்.

 சிந்திப்போம்.


Wednesday, April 2, 2014

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥

க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||

க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம்  = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன்
ப்ரப⁴வ: = தொடக்கமும்
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை
அவ்யயம் = அழியாத


இவ்வுலகத்தின்  வழி,  தலைவன்,  சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.

சாட்சி - என்ன நடந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருப்பது சாட்சியின் வேலை. நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, லீலை என்று அனைத்தையும் இரசிக்கும்  மனம் வேண்டும். நானே எனக்கு சாட்சி என்றால், நான் கர்மாவை செய்கிறேன், ஆனால் அதன் விளைவுகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. நான் செய்வதை நானே பார்த்துக்  கொண்டிருக்கிறேன், மூன்றாவது மனிதனைப் போல.  இது ஒரு தவம். இந்த உடல் தான் நான் என்று இருக்காமல், இந்த உடல் செய்வதை  நான் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.

ஒரு நாள் அப்படி செய்து  பாருங்கள்.உங்களையே நீங்கள் கவனித்துப் பாருங்கள். பற்று விலகும்.

உலகிலேயே மிகப் பெரிய பற்று எது என்றால் இந்த உடலின் மேல் கொண்ட பற்று. அந்த பற்று விட வேண்டுமானால், சாவை வெல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு நீங்களே சாட்சியாக இருந்து பாருங்கள். நீங்கள் வேறு, உங்கள் உடல் வேறு  என்பது உங்களுக்குப்  புரியும்.

நண்பன் -  நாம் தான் நமக்கு மிகப் பெரிய நண்பன். நம்மை விட்டு எப்போதும் விலகாமல் , நம் நன்மை ஒன்றே நினைபப்து நமக்குள் இருக்கும் நான் தான். நட்பு என்பது   கூடவே பிறந்து வருவது அல்ல. பின்னால் வந்து சேர்ந்து கொள்வது. அது போல தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது பிறவியிலேயே வருவது அல்ல.  பின்னால் நிகழும் ஒரு நிகழ்வு. அது நிகழ்ந்த பின், நம்மைத் தவிர  நமக்கு பெரிய துணை யாரும் இல்லை.

தொடக்கம் அழிவு (முடிவு): அறிவின் தொடக்கம், அறியாமையின் முடிவு. வடிவங்களும், பெயர்களும் அழிந்து இந்த உலகம் முழுதும் ஒன்று என்ற புதுமையின் தொடக்கம்; புற வேற்றுமைகள் அழியும், எல்லாம் ஒன்றே என்ற ஞானம்  பிறக்கும். அதுவே தொடக்கம், அழிவு இரண்டும் சங்கமிக்கும் இடம்.  அறியாமை  அழியும்போது அறிவு பிறக்கிறது.

இறைவனிடம் வேண்டும் போது , மெய்ஞானம் வேண்டும் என்று மாணிக்க வாசகர் கேட்க்க வில்லை. பொய் ஞானம் அழிந்தால் போதும் என்று  வேண்டுகிறார்.

பொய் ஆனவை எல்லாம் போய் அகல வந்தருளி

 என்பார். பொய் அழியும்போது மெய் தானே பிறக்கும்.

ஆணவம் அழியும்போது அடக்கம் பிறக்கும்.

அஞ்ஞானம் அழியும்போது ஞானம் பிறக்கும்.

கயிறா பாம்பா என்ற சந்தேகம் உண்மை தெரிந்த போது அழிந்தது. கயிறு தான் என்ற  பிறந்தது. பொய் அழிந்தது உண்மை நின்றது.

எனவே நானே தொடக்கம் , நானே முடிவு.

"அழியாத விதை "...செடி தோன்றும் போது விதை அழிகிறது. ஆனால் இந்த உலகில்  இத்தனை விதமான பொருள்களும், உயிர்களும் தோன்றினாலும் இவற்றின்  மூலமான "நான்" என்பது அழியாமல் அப்படியே இருக்கிறது.  அது அப்படியே இருப்பதால்தான்  அதை அறிய முடியும். எல்லாவற்றிற்கும் அடி நாதமாக இருக்கும்  அந்த நான் என்பது நீறு பூத்த நெருப்பாய் அழியாமல் இருக்கிறது.  அதை அறிய வேண்டும்.

மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.  


இவற்றைத் தாண்டியும் கூட ஆழ்ந்த அர்த்தங்கள் உங்களுக்குத் தோன்றலாம்.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் - கீதை.

தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

உண்மை புலப்படும்.


Tuesday, April 1, 2014

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 1

கீதை - 9.18 -  நானே சாட்சி - பாகம் 1  


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥

க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||

க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம்  = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன் 
ப்ரப⁴வ: = தொடக்கமும் 
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை 
அவ்யயம் = அழியாத 


இவ்வுலகத்தின்  வழி,  தலைவன்,  சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.

பெரிய பட்டியலைத் தருகிறான் கண்ணன்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கதி, வழி, குறிக்கோள்:  கதி அல்லது வழி எப்போது தேவைப்படும் ? எது வரை தேவைப்படும் ?

ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைய ஒரு வழி வேண்டும். அந்த வழியாக சென்று நாம் அடைய நினைத்ததை அடையலாம். நாம் அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய துணையாக இருப்பது வழி.

கண்ணன் தான் வழி என்றால், அந்த வழி கொண்டு சேர்க்கும் இடம் யார் ? வழியை  விட அது கொண்டு சேர்க்கும் இடம் உயர்ந்தது அல்லவா ?

அடுத்து கண்ணன் சொல்கிறான் - "நானே காப்பவன் அல்லது தலைவன் அல்லது தாங்குபவன்  (பர்தா)".

இந்த உலகம் பல்வேறு பொருள்களாலும், மனிதர்களாலும் ஆனது. ஒவ்வொன்றும் ஒரு  வடிவம்,ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இத்தனை பெயர்களையும், வடிவங்களையும், தனித் தனியாக அடையாளம் கண்டு, அவற்றோடு உறவாடி அவற்றை தாங்கிப் பிடிப்பது என்னுள் இருக்கும் நான் என்ற அந்த ஒன்று (Self ).

"தலைவன்":  ஐந்து புலன்கள், புலன்கள் கொண்டு வரும் உணர்வுகள், உணர்வுகளை பகுத்து அறியும் மூளை, மூளை சொல்வதை கேட்கும் புலன்கள் என்று இவை அனைத்தையும் ஆளும் என் அறிவே இவற்றின் தலைவன். இவை அனைத்தையும் ஆளும் அறிவு இவை எல்லாவற்றிற்கும் தலைவன். அதை அறிவு என்று சொல்லலாம், ஞானம், தன்னுணர்வு, Self  எப்படி வேண்டுமானாலும்  சொல்லிக்  கொள்ளலாம்.எது இவற்றை ஆளுகிறதோ அது தலைவன்.

"புகலிடம்" - உண்மை ஒன்றுதான். அதன் பல் வேறு வடிவங்கள் தான் இந்த உலகம். எத்தனை ஆயிரம் அலைகள், கடல் ஒன்று தான். எத்தனை ஆபரணங்கள், தங்கம் ஒன்று தான். இத்தனை வடிவங்களும், பெயர்களும் கடைசியில்  ஏதோ ஒன்றின் பல்வேறு வடிவங்கள். அதுவே இவை அனைத்தின் புகலிடம். ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை.

"சரண் அடையும் இடம்"