Tuesday, March 18, 2014

கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும்

கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும் 


यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥९- ६॥

யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் | 
ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||

யதா² = இது போல்
அகாஸ²ஸ்தி²தோ = ஆகாயத்தில் இருப்பது போல்
நித்யம் = எப்போதும்

வாயு: = காற்று
ஸர்வத்ரகோ = எங்கும் வீசுவது போல 
மஹாந் = உயர்ந்த
ததா² = அது போல
ஸர்வாணி பூ⁴தாநி = அனைத்து உயிர்களிலும்
மத்ஸ்தா²நீ = என்னுள் இருக்கின்றன
இதி = இதை
யுபதா⁴ரய = அறிந்து கொள்ள முயல்

எங்கும் வீசும் காற்று எப்படி வானில் நிலைத்து இருக்கிறதோ, அது போல பொருள்கள் என்னில் நிலைத்து இருக்கின்றன.

"என்னில் அவை இருக்கின்றன, அவற்றில் நான் இல்லை " என்று முந்தைய ஸ்லோகத்தில்  பார்த்தோம்.

அது எப்படி என்ற குழப்பம் நமக்கு ஏற்படுவது இயல்பு.

 இந்த ஸ்லோகத்தில் அது     விளக்கப்படுகிறது.

காற்று எங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.  காற்றைத் தாண்டி ஆகாயம் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது. காற்றில் ஆகாயம் இல்லை. ஆகாயம் மிகவும் பறந்து பட்டது. எல்லை இல்லாதது. தோற்றமும் முடிவும் இல்லாதது.

காற்று அதன் ஒரு பகுதி. காற்று இல்லாத இடமும் உண்டு. ஆகாயம் இல்லாத இடம் இல்லை.


ஆகாயதிற்குள் காற்று அடங்கி இருக்கிறது.

ஒன்றைப் பார்க்கும் போது நமக்கு இரண்டு விதமான எண்ணங்கள் வரும்.

முதலாவது, நாம் காணும்  அந்தப் பொருள் எவ்வவற்றின் தொகுதி  ?

இரண்டாவது, நாம் காணும் அந்தப் பொருள் எதன் பகுதி ?

 காற்று அசையும் போது வானம் அசைவது இல்லை. காற்று என்ன தான் செய்தாலும் வானம் அப்படியே அசையாமல் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது.

ஆனால் காற்று ஆகாயத்தை கட்டுப் படுத்துவது இல்லை.

காற்றின் குணம்  வேறு.ஆகாயத்தின் குணம் வேறு.

அவை என்னில் இருக்கின்றன. நான் அவற்றில் இல்லை.

காற்று இன்று இருக்கும். நாளை இல்லாமல் போகும். ஆகாயம் என்றும் ஒரே மாதிரி இருக்கும்.

பொருள்கள் குணங்களால் ஆனவை.

குணங்கள் மனதால், அறிவால் அறியப்  படுகின்றன.

அறிவையும் மனதையும் கட்டுப் படுத்துபவன் நான்.

 ,எனவே, பொருள்கள் என்னில் நிலை பெற்று இருக்கின்றன.











Monday, March 17, 2014

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன்

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன் 


न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥९- ५॥

ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் | 
பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||

ந = இல்லை
ச = மேலும்
மத்ஸ்தா²நி = என்னில்
பூ⁴தாநி = அனைத்தும்
பஸ்²ய மே = பார்
யோக³மைஸ்²வரம்  = ஈஸ்வரத் தன்மையுடைய யோக
பூ⁴தப்⁴ருந் = பூதங்களை தாங்குபவன் 
ந = இல்லை
ச = மேலும்
பூ⁴தஸ்தோ = உயிர்களில் நிலை  பெற்று
மமா = நான் 
ஆத்மா = ஆத்மா
 பூ⁴தபா⁴வந:  =  பூதங்களின் இயற்கையை உருவாக்குபவன்

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் என்னில் நிலைத்து இருப்பது இல்லை. என்னுடைய லீலையில், எல்லா உயிர்களையும் நான் வெளிப் படுத்துகிறேன். என்னுள் அவை இருக்கின்றன. அவைகளில் நான் இல்லை.


வடிவங்களும் பெயர்களும் இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா ?

பொருள்களின் (உயிர்களின்) பெயரும், வடிவங்களும்  மாறிக் கொண்டே இருக்கின்றன.

வடிவங்களையும், பெயரையும் தாண்டி அவற்றிற்கு பின்னால் இருப்பது  ஒன்று தான்.

வெவ்வேறு விதமான அலைகளைத் தாண்டி கடல் என்ற ஒன்று சாஸ்வதமாக இருக்கிறது.

மேஜை,நாற்காலி, சன்னல் என்ற வடிவங்களைத் தாண்டி மரம் சாஸ்வதமாக இருக்கிறது.

மோதிரம், வளையல் என்ற இவற்றைத் தாண்டி தங்கம் என்ற ஒன்று நிரந்தரமாக இருக்கிறது.

அப்படி பார்க்கும் போது இந்த உலகம் ஏதோ ஒன்றினால் ஆக்கப் பட்டு இருக்கிறது. அது எல்லாவற்றிலும் இருக்கிறது. அதில் இவை எல்லாம் இல்லை.

இது வரை சரிதானே ?

பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சேர்வதும், பிரிவதும், பின் சேர்வதும் என்று தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஏன் இப்படி மாறுகின்றன ? ஒரே மாதிரி இருக்க வேண்டியது தானே ?

இந்த உலகம் எப்படி தோன்றியது என்று அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி  பதில்  தரும். சரியா தவறா என்பது வேறு விஷயம். ஏதோ ஒரு பதில் இருக்கிறது.

ஆனால் ? ஏன் இந்த உலகம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

இறைவன் உலகைப் படைத்தான் என்று சமயம் சாதிக்கும்.

ஏன் படைத்தான் என்ற கேள்விக்கு விடை கிடையாது.

அது ஒரு விளையாட்டு, லீலை அவ்வளவுதான்.

எந்த ஒரு விளையாட்டைப் பார்த்தாலும் நமக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஒருவன் பந்தைப் போடுவான், ஒருவன் அடிப்பான், ஒருவன் பிடிப்பான், மற்றவன் ஓடுவான்...எதற்கு இது எல்லாம் என்று கேட்டால் ....அது தான் விளையாட்டு.

அதற்கு ஒரு காரணமும் கிடையாது.

இந்த உலகும், இதில் உள்ள பொருள்களின் தோற்றமும், மறைவும் ஒரு காரணமும் இன்றி நடக்கின்றன.


பொருள்கள் வெளிப்படுகின்றன.  அது ஒரு லீலை.

சரி, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன ?

இருக்கிறதே....

என் லீலையில் , மிகச் சரியாக சொல்வது என்றால், "ஈஸ்வர தன்மையுள்ள யோகத்தினால்" நான் பொருள்களை வெளிப் படுத்துகிறேன்.

இதன் உள் அர்த்தம் - பொருள்களும், சம்பவங்களும் காரணம் இன்றி நிகழ்கின்றன.

கிருஷ்ணன், பொருள்களை இன்ன காரணத்திற்காக நான் வெளிப் படுத்துகிறேன்  என்று சொல்ல வில்லை. அவனுடைய ஏதோ ஒரு தன்மையால் வெளிப் படுத்துகிறான். அவ்வளவுதான்.

விதி என்றும், காரணம் என்றும் ஒன்றைத் தேடித் திரியத் தேவை இல்லை.

எல்லாம் விளையாட்டாக நடக்கிறது.

"அலகிலா விளையாட்டு உடையாரவர் ,தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே "


கீதை - 9.4 - என்னில் அவைகளும், அவற்றில் நானும்

கீதை - 9.4 - என்னில்   அவைகளும், அவற்றில் நானும் 


मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥९- ४॥

மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா | 
மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||

மயா = என்னால்
ததம் = சூழப்பட்டு இருக்கிறது, நிறைந்து இருக்கிறது
இதம் = இந்த
ஸர்வம் = அனைத்து
ஜகத் = உலகம் 
அவ்யக்த மூர்திநா = வெளிப்படாதா வடிவில்  
மத்ஸ்தா²நி = என்னில்
ஸர்வபூ⁴தாநி = அனைத்து உயிர்களும் 
 ந  = இல்லை
சா = மேலும்
ஹம் = நான்
தேஷ் = அவைகளில்
வவஸ்தி²த: = நிலை பெற்று

வெளிப்படாத வகையில் நான் இந்த உலகை சூழ்ந்து இருக்கிறேன். அனைத்திலும் நான் இருக்கிறேன். என்னில் அவைகள் இல்லை.


மேஜை, நாற்காலி, கதவு, ஜன்னல் என்று எத்தனையோ மரச் சாமான்கள் மரத்தில் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் பாடு இருக்கிறது.

எல்லாம் வேறு வேறு மாதிரி இருந்தாலும், இவை அனைத்தும் மரத்தில் இருந்து வெளிப் பட்டவை என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

அத்தனை மரச் சாமான்களும் மரத்தில் இருந்து வெளிப் படுகின்றன. வெளிப் படுவதற்கு  முன்னால் அவை வெளிப் படாமல் இருக்கின்றன.

வெளிப்பட்ட பின் வடிவங்களும் பெயர்களும் மாறிப் போகின்றன.

வெளிப் படுவதற்கு முன்னால் அவை யாவும் மரம் என்றே அறியப் படுகிறது.

அது போல,

எத்தனையோ உயிர்கள், உயிர் அற்றவை என்று இருக்கின்றன. அவற்றின் பெயரும், வடிவும் வேறு பட்டு இருந்தாலும், அவை அவ்வாறு வெளிப்படுமுன் ஏதோ ஒன்றில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது அல்லவா ?


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

அடுத்து, "என்னில் அவை இருக்கின்றன, அவைகளில் நான் இல்லை"

அது எப்படி ?

இரவில், தூரத்தில் , கொடியில் ஒரு வெள்ளை துணி காற்றில் ஆடுகிறது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது பேய் மாதிரி தெரிகிறது. சற்று கிட்ட போய் பார்த்தால், துணி என்று தெரிகிறது.

பேய் துணியில் இருந்தது.

துணி பேயில் இல்லை.

நாம் பார்க்கும் பலவித வடிவங்கள், பெயர்கள் எல்லாம் அந்த பேய் போல. உண்மை தெரியும் போது , அவை மறைந்து விடுகின்றன. துணி மட்டும் தெரியும்.

எவ்வளவு ஆழகழகான பெண்கள், எத்தனை உணவு வகைகள், இடங்கள், இசை, துணி மணிகள், சாமான்கள் ....அத்தனையும் உண்மையான அறிவு ஏற்படும்போது  எல்லாம் ஒன்றுதான் என்று மறைந்து போகும்.

பொய் தோற்றங்கள் மறையும்.உண்மை வெளிப்படும்.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர்.

சிக்கல் என்ன என்றால் நமக்கு எது பொய் எது மெய் என்று தெரியாது.

துணி அல்ல அதன் நிழல் ஆடும் பேய் தான் நிஜம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிழல்களுக்கு பின்னால் உள்ள நிஜத்தை அறிய வேண்டும்.







Sunday, March 16, 2014

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில்

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில் 


अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥

அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||


அ - ஸ்ரத்த - தாநா: =  சிரத்தை இல்லாத 
புருஷா = மனிதர்கள்
தர்மஸ்யாஸ்ய = தர்மத்தின் பால்
பரந்தப  = எதிரிகளை அழிப்பவனே
அப்ராப்ய = அடையாமல்
மாம் = என்னை
நிவர்தந்தே =  மீண்டு வருகிறார்கள்
ம்ருத்யு = இறந்து
ஸம்ஸார = சம்சார
வர்த்மநி = பாதையில் , வழியில்

தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடையாமல் , மீண்டும் மீண்டும் இறந்து இந்த சம்சாரத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

மிக ஆழமான சுலோகம். பகுதி பகுதியாக பிரித்து சிந்திப்போம்.

"தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்": தர்மம் என்றால் என்ன ? எளிமையான விளக்கம் தர்மம் என்றால் இயற்கை, இயல்பு. நாம் நம் இயற்கையை மறந்து போகிறோம். நாம் யார் என்று நாம் அறியாமல் இருக்கிறோம். நான் யார், என் தகுதி என்ன, என் திறமைகள் என்ன, எது எனக்கு இயல்பாக வரும் என்று அறியாமல் கிடந்து துன்பப் படுகிறோம்.

ஒரு குழந்தைக்கு கணிதம் சரியாக வராமல் இருக்கலாம். அது அதன் இயற்கை.  நாம், விடுவது இல்லை. அது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றே  தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதனால் அந்த குழந்தையும் துன்பப் படும், பெற்றோரும் துன்பப் படுவார்கள்.

பிள்ளைகளை விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்யும் எல்லா காரியமும்  நம் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்ததா ? இல்லையே. ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் வேறு எதையோ செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை அல்லாதது தர்மம் அல்லாதது. அது அதர்மம். உங்கள் இயற்கைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அது அதர்மம்.

சரி, இந்த இயற்கையை எப்படி அறிந்து கொள்வது ?

நான் பாடகனா ? மருத்துவனா ? படம் வரைவதில் வல்லவனா ? நிதித்துறையா ? பொறியியல் துறையா ?

ஆயிரக்கணக்கில் துறைகள் இருக்கின்றன. நான், என் இயற்கையை எப்படி கண்டு பிடிப்பது  ? பின் அதில் எப்படி செல்வது ?

கீதை அதற்கும் வழி காட்டுகிறது.

மேலும் சிந்திப்போம்.


------------------------------------------------------------------------------------------------------------

தர்மம் என்றால் இயற்கை, இயல்பு என்று பார்த்தோம். எது இயற்கை, எது இயல்பு என்று எப்படி அறிவது.

திருடுவது, கொலை செய்வது, எனக்கு இயற்கை என்றால் அதை நான் செய்யலாமா ? அதைத்தான் கீதை சொல்கிறதா ?

அப்ராப்ய மாம்: என்னை அடையாமல்

என்னை அடையாமல் என்றால் கிருஷ்ணனை சென்று அடைவது என்று அர்த்தம் கொள்வதை விட, எனக்குள் இருக்கும் என்னை அடையாமல் என்று கொள்ளலாம்.

நான் யார் என்று அறியும் போது , என் இயற்கை , என் இயல்பு எது என்றும் அறிய  முடியும். ஒரு வேளை அப்படி தன்னை அறியும் முயற்சியில் ஒருவன் தான் ஒரு   திருடன் , பொய்யன் என்று அறிவான் என்றால், அது தான்  அவன் தர்மம்.  அவன் அந்த வழியில் சென்று தான் முன்னேற முடியும்.


தன் இயற்கை இல்லாத ஒன்றை செய்பவன் அதர்ம வழியில் போகிறான். அப்படி போபவன் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவான்.

அப்படி என்றால் என்ன ?

அவனால் மேலும் மேலும் முன்னேற முடியாது.

மோக்ஷம், விடுதலை...அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

என்னை (தன்னை) அறிபவன், தன்  தர்மத்தை அறிகிறான்.
தன் தர்மத்தை அறிபவன், அதன் வழியில் செல்கிறான்.
தர்மத்தின் வழியில் செல்பவன், மேலும் மேலும் உயர்கிறான்.


தன்னை அறியாமல், தன் தர்மத்தை அறியாமல் வாழ்கையை நடத்திச் செல்பவன் வாழ்வில் முன்னேறாமல் தடுமாறிக் கொண்டிருப்பான்.

வால்மீகி திருடனாக இருந்தார்
கண்ணப்பன் வேடனாக இருந்தார்
அருணகிரி பெண் பித்தராக இருந்தார்

அந்த வழி அவர்களை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தியது.

அதற்காக எல்லோரும் திருடனாக வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உங்கள் தர்மத்தை செய்யுங்கள்.

மீண்டும் தொடக்கத்திற்கு போவோம்.

அர்ஜுனன் தன் தர்மத்தை செய்யத் தயங்குகிறான்.

தர்மத்தை செய் என்பது கண்ணனின் உபதேசம்.

தர்மம் உங்களை காக்கும். தர்மம், உங்களை உயர்த்தும்.






Saturday, March 15, 2014

கீதை 9.3 - தர்மத்தின் வழியில் - பாகம் 1

கீதை 9.3 - தர்மத்தின் வழியில் 


अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥

அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||


அ - ஸ்ரத்த - தாநா: =  சிரத்தை இல்லாத 
புருஷா = மனிதர்கள்
தர்மஸ்யாஸ்ய = தர்மத்தின் பால்
பரந்தப  = எதிரிகளை அழிப்பவனே
அப்ராப்ய = அடையாமல்
மாம் = என்னை
நிவர்தந்தே =  மீண்டு வருகிறார்கள்
ம்ருத்யு = இறந்து
ஸம்ஸார = சம்சார
வர்த்மநி = பாதையில் , வழியில்

தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடையாமல் , மீண்டும் மீண்டும் இறந்து இந்த சம்சாரத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

மிக ஆழமான சுலோகம். பகுதி பகுதியாக பிரித்து சிந்திப்போம்.

"தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்": தர்மம் என்றால் என்ன ? எளிமையான விளக்கம் தர்மம் என்றால் இயற்கை, இயல்பு. நாம் நம் இயற்கையை மறந்து போகிறோம். நாம் யார் என்று நாம் அறியாமல் இருக்கிறோம். நான் யார், என் தகுதி என்ன, என் திறமைகள் என்ன, எது எனக்கு இயல்பாக வரும் என்று அறியாமல் கிடந்து துன்பப் படுகிறோம்.

ஒரு குழந்தைக்கு கணிதம் சரியாக வராமல் இருக்கலாம். அது அதன் இயற்கை.  நாம், விடுவது இல்லை. அது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றே  தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதனால் அந்த குழந்தையும் துன்பப் படும், பெற்றோரும் துன்பப் படுவார்கள்.

பிள்ளைகளை விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்யும் எல்லா காரியமும்  நம் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்ததா ? இல்லையே. ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் வேறு எதையோ செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை அல்லாதது தர்மம் அல்லாதது. அது அதர்மம். உங்கள் இயற்கைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அது அதர்மம்.

சரி, இந்த இயற்கையை எப்படி அறிந்து கொள்வது ?

நான் பாடகனா ? மருத்துவனா ? படம் வரைவதில் வல்லவனா ? நிதித்துறையா ? பொறியியல் துறையா ?

ஆயிரக்கணக்கில் துறைகள் இருக்கின்றன. நான், என் இயற்கையை எப்படி கண்டு பிடிப்பது  ? பின் அதில் எப்படி செல்வது ?

கீதை அதற்கும் வழி காட்டுகிறது.

மேலும் சிந்திப்போம்.




கீதை 9.2 - இராஜ வித்தை , இராஜ இரகசியம்

கீதை 9.2  - இராஜ வித்தை , இராஜ இரகசியம் 


ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் | 
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம்

ராஜ வித்³யா = உயர்ந்த வித்தை
ராஜ கு³ஹ்யம் = உயர்ந்த இரகசியம்
பவித்ரம் = புனிதமான, தூய்மையான 
இதம் = இது 
உத்தமம் = கடந்த 
ப்ரத்யக்ஷா = நேரடியான அனுபவம் மூலம்
அவக³மம் =  அறிந்து கொள்ள முடியும்
த⁴ர்ம்யம் = தர்மம்
ஸுஸுக²ம் = மிக மிக மகிழ்ச்சியான
கர்தும் = செய்வதன் மூலம் 
அவ்யயம் = நிலைத்து நிற்கும்

இராஜ வித்யா, இராஜ குஹயம் = இராஜ வித்தை, இராஜ இரகசியம்.

அது என்ன "இராஜ". எல்லாவற்றிலும் உயர்ந்த வித்தை, உயர்ந்த இரகசியம்.

சமய மற்றும் இறை தத்துவங்கள் பொதுவாகவே கேட்க நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்துவராது. படிக்கலாம், கேட்கலாம், பேசலாம்....கடை பிடிப்பது மிக மிக கடினம்.

"தர்மம்" : இந்த உயர்ந்த வித்தை , இரகசியம் மிக மிக இயற்கையானது. தர்மம் என்றால்  இயற்கை. இயல்பு.  இயற்கைக்கு எதிரானது அதர்மம்.


 இரண்டாவது,  சமய கோட்பாடுகள், சமய நெறி முறைகள், இறை தத்துவங்கள்  அனுபவத்தில் அறிய முடியாத ஒன்று. சிந்திக்க முடியும், ஆனால்  அதை நம் அனுபவத்தில் அறிய முடியுமா ?

முடியும் என்கிறது கீதை.

அனுபவத்தில் அறிய முடியும் என்றால் செய்து பார்க்க முடியும். சரிதானா என்று  சோதித்து அறிய முடியும்.

இருந்து விட்டு போகட்டும், அது இயற்கையாகவே இருக்கட்டும், எளிமையானதாகவே இருந்து விட்டு  போகும், அதைப் பற்றி நமக்கு என்ன என்ற கேள்வி எழும்.

"இது மிக மிக மகிழ்ச்சி தரும்"  என்கிறார்.

மகிழ்ச்சி மட்டும் அல்ல, நிரந்தரமான மகிழ்ச்சி தரும் வித்தை இது.



இயற்கையானது
அனுபவத்தில் அறிந்து கொள்ள கூடியது
நிரந்தர மிகழ்ச்சி தரக் கூடியது

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

Thursday, March 13, 2014

கீதை 9.1 - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

Gita 9.1


ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

श्रीभगवानुवाच
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥९- १॥


ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||


ஸ்ரீப⁴க³வாநுவாச  = பகவான் கூறுகிறான்

இத³ம் = இந்த
 து = ஆனால்
தே = உனக்கு
கு³ஹ்யதமம் = அதி இரகசியமான
ப்ரவக்ஷ்  = நான் சொல்கிறேன்
அநஸூயவே = அசூயை இல்லாமல்
ஜ்ஞாநம் = ஞானம்
விஜ்ஞாந = விஞ்ஞான
ஸஹிதம் = கூடவே
யத் = எது
ஜ்ஜ்ஞாத்வா = அறிவதன் மூலம்
மோக்ஷ்யஸே = மோக்ஷத்தை அடைவாய்
அஸு²பா⁴த் = துன்பத்தில் இருந்து


நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பக்தி யோகம் ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணன் - மிக இரகசியமான ஒன்றை உனக்குச் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.

இரகசியம் என்றால் உடனே நமக்கு ஒரு ஆர்வம் வரும். அது என்ன என்று அறிந்து கொள்ள  ஆர்வம் வரும். அதுவும் நமக்கு மட்டும் தான் என்றால் ஆர்வம் மேலும்    அதிகரிக்கும்.

ஒரு நல்ல presentation எப்படி இருக்க வேண்டும் என்று வியாசரிடம் இருந்து கற்றுக்  கொள்ளலாம்.

முதலில் என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி விட வேண்டும்.
அடுத்து - சொல்ல வந்ததை சொல்ல வேண்டும்.
கடைசியில் - என்ன சொன்னோம் என்று தொகுத்துச் சொல்ல வேண்டும்.

மேலும், இதை அறிவதால் நமக்கு என்ன பயன் (vlaue ) என்று சொல்லி விட வேண்டும்.

"இதை அறிவதால் துன்பத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடையலாம் "

அசூயை இல்லாமல் கேள் என்கிறார்.

"ஆமா, இது மாதிரி எத்தனை கேட்டிருப்போம் " என்று அலுத்துக் கொள்ளாமல், அதில் சந்தேகம்  கொள்ளாமல் கேள் என்கிறார்.

இது ஞானம், விஞ்ஞானம் இரண்டும் கலந்தது.

இதை அறிவதனால் என பயன் ?

துன்பங்களை கடந்து மோக்ஷம் அடையலாம்.