கீதை - 13.12 - உள்ளதும் அல்லாததும்
ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே |
அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||
ஜ்ஞேயம் = அறியப்பட வேண்டியது
யத் = எது
தத் = அதை
ப்ரவக்ஷ்யாமி = ப்ர + வாக் + ஷியாமி = உனக்கு சொல்கிறேன், விளக்குகிறேன்
யத் = எது
ஜ்ஞாத்வ = எதை அறிந்தால்
அம்ருதம் = அம்ருதத்தை, சாகாமல் இருக்கும் நிலையை
அஸ்நுதே = அடைவானோ
அநாதி = தொடக்கம் இல்லாதது
மத் பரம் ப்ரஹ்ம = பரம் என்றால் பழமையான. பரம்பரை, பரம சிவன், பரம பதம். பர ப்ரஹ்மம்.
ந ஸத் = இருப்பதும் இல்லை
தந் = அது
நாஸது = ந அசத் = இல்லாததும் இல்லை
உச்யதே = சொல்லப்பட்டது
எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்தால் இறவா நிலை அடையலாமோ, எது தொடக்கம் இல்லாததோ, பர ப்ரஹமமோ , எது உருவமும் அருவமும் இல்லாததோ அதை பற்றிச் சொல்கிறேன்.
மிக மிக ஆச்சரியமான சுலோகம்.
மிக மிக ஆழமான சிந்தனையை கொண்ட சுலோகம்.
எது தொடக்கம் இல்லாததோ - தொடக்கம் இல்லாத ஒன்று இருக்க முடியுமா ? ஒவ்வொன்றும் என்றோ ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும். ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு, எது என்று வந்தது என்றால் அதன் தொடக்கத்தை நம்மால் கண்டு பிடிக்க முடியும். ஏதோ ஒன்றில் இருந்து ஏதோ ஒரு கால கட்டத்தில் அது வந்திருக்க வேண்டும்.
நான் என்று வந்தேன் என்று கேட்டால் , என் பிறந்த தினத்தை கூற முடியும். நான் பிறப்பதற்கு முன்னால் என்னவாக இருந்தேன் என்று கேட்டால் வேறு எதுவாகவோ இருந்திருப்பேன். அந்த வேறு எது என்று பிறந்தது என்று கேட்டால் அதற்கு ஒரு காலம் இருந்திருக்கும். இப்படியே ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே பின்னால் போனால் எல்லாமும், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம் என்று ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும் என்று அறிய முடியும்.
அறிவியலும் அதை ஏற்றுக் கொள்கிறது. மகா வெடிப்பு (Big Bang ) என்று சொல்கிறது அறிவியல்.
அதற்கு முன்னால் என்ன நடந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஏன் என்றால் "முன்னால்" என்ற கேள்வியே காலத்தின் அடிப்படையில் பிறந்த கேள்வி. காலமே அதில் இருந்துத்தான் தொடங்கியது என்றால் அதற்கு முன்னால் என்ற கேள்விக்கே அர்த்தம் இல்லை. அது தான் காலம் 0. அதுதான் காலத்திற்கே தொடக்கம்.
கீதை அந்த அனாதியான இடத்தை தொடுகிறது. அந்த நேரம், அது தான் ஆரம்பம். அதற்கு முன்னால் என்று எதுவும் கிடையாது.
தொடக்கம் இல்லாதது அது.
அனாதியிலே, வெளியில் விளைந்த வெறும் பாழை என்பார் அருணகிரிநாதர்.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே
அது சத் அல்ல, அது அசத் அல்ல .
சத் என்றால் என்ன ? அசத் என்றால் என்ன ?
சத் என்பது நிலையானது, மாறாதது, என்றும் உள்ளது. அதில் இருந்து வந்தது அசத் என்ற மாறும் தோற்றம் கொண்ட இந்த உலகம்.
இந்த சத் மற்றும் அசத்தை சந்தோக்ய உபநிஷத் மிக விரிவாக விளக்குகிறது.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
மண்ணில் இருந்து பானை, சட்டி, குடம் எல்லாம் செய்கிறோம். மண் சத். பானை, சட்டி குடம் எல்லாம் அசத்.
தங்கத்தில் இருந்து வளையல், சங்கிலி, மோதிரம் எல்லாம் செய்கிறோம். தங்கம் சத். ஆபரணங்கள் அசத் .
ஏன் ?
பானையும், சட்டியும், வளையலும், மோதிரமும் அழியும். வேறொன்றாக மாறும். மண்ணும், தங்கமும் அப்படியே இருக்கும்.
மாறுகின்ற வடிவங்களின் (அசத் ) பின்னால் மாறாமல் இருப்பது சத்.
கீதை சொல்கிறது. அது சத் அல்ல. அது அசத் அல்ல என்கிறது.
சரிரீ அன்று அசரீரி அன்று என்பார் அருணகிரி. சரீரம் உள்ளதும் அல்ல. சரீரம் அல்லாததும் அல்ல.
தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே.
No comments:
Post a Comment